Skip to main content

பிறந்த குழந்தை மற்றும் 3 வயது கைக்குழந்தையுடன் மருத்துவமனை ஷெட்டில் 20 நாளாக கணவருக்காக காத்திருக்கும் தாய்! ஃப்ளக்ஸ் பேனரில் தூங்கும் துயரம்

Published on 08/08/2020 | Edited on 08/08/2020

 

Pudukkottai hospital

 

புதுக்கோட்டை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கடந்த 20 நாட்களுக்கு முன்பு ஒரு நிறைமாத கர்ப்பிணிப் பெண் 3 வயது பெண் குழந்தையுடன் வந்து பிரசவத்திற்காகச் சேர்ந்துகொள்கிறார். அவருக்கு துணையாக உறவினர்கள் யாரும் வரவில்லை. அருகில் உள்ளவர்கள் அந்தக் கர்ப்பிணியின் நிலை அறிந்து சிறு சிறு உதவிகள் செய்கிறார்கள். அந்த உதவி அவருக்குப் பெரிதாக இருந்தது. மருத்துவமனையில் கொடுக்கும் உணவை தனக்கும் தன் 3 வயது குழந்தைக்கும் கொடுத்து பசியாறிக் கொள்கிறார்.

 

சில நாட்களில் சுகப்பிரசவம் நடந்து அழகான ஆண்குழந்தை பிறந்தது. அடுத்த 3 நாட்களில் மருத்துவமனை பெட்டிலிருந்து வெளியே வருகிறார். சொந்த ஊருக்கு போனால் என்ன சொல்வார்களோ என்ற சந்தேகம் அவரை அடுத்த அடி எடுத்து வைக்கவிடவில்லை. ஒரு கையில் பிறந்த குழந்தையை மார்போடு அணைத்துக் கொண்டு மறு கையில் தன் 3 வயது பெண் குழந்தையுமாக வார்டைவிட்டு வெளியே வந்த அந்தப் பெண், பார்வையாள்கள் தங்கும் ஷெட்டில் தனது சேலையால் ஒரு தொட்டில் கட்டி அதில் குழந்தையைப் படுக்க வைத்துவிட்டு அங்கேயே தங்கிவிடுகிறார். மற்றவர்களைப் பார்க்க வருபவர்கள் கொடுப்பதை உண்டு அதே ஷெட்டில் இரவு, பகல், வெயில், மழை அனைத்தையும் சமாளித்துக் கொண்டு தங்கிவிட்டார். 

 

அடுத்து தன் குழந்தையைப் படுக்க வைக்க பாய், துணிகள் இல்லை. அந்தப் பகுதியில் ஒரு கடை விளம்பரப் பதாகை கிடக்க, அவற்றை எடுத்துவந்து தரையில் விரித்து பிறந்த குழந்தையைப் படுக்க வைத்திருக்கிறார். இதைப் பார்த்த ஒரு சமூக சேவகி உணவு மற்றும் சிறு உதவிகளைச் செய்து வருகிறார். குளிர், கொசுக்கடியை மூவரும்  ஏற்கிறார்கள்.

 

இந்தப் பெண் குறித்து நம்மிடம் பேசிய சமூக சேவகி டெஸ்சி ராணி, பொன்னமராவதி பனையப்பட்டி அருகில் உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த இந்தப் பெண்ணுக்கு பெற்றோர் இல்லை. கணவருக்கும் தீராத நோய். அவரும் இறந்துவிட்ட நிலையில், தனது பாட்டி வீட்டில் தங்கி இருந்தபோது இந்தப் பெண்ணைப் பற்றி நன்கு அறிந்த ஒரு இளைஞர் மறுவாழ்வு கொடுக்கிறார். அதை அந்தப் புதிய கணவரின் அம்மா உள்ளிட்ட உறவினர்கள் ஏற்க மறுக்கிறார்கள். ஆனால் அவர் இந்தப் பெண்ணை முழுமையாக ஏற்றுக் கொண்டாலும் தாய் மற்றும் உறவுகளையும் உதற முடியவில்லை. இந்த நிலையில் அவர் மின்வாரிய ஒப்பந்தப் பணியளராக வேலைக்குப் போன நிலையில் இந்தப் பெண்ணை மிரட்டி வயிற்றில் இருக்கும் குழந்தைக்கும் தன் மகனுக்கும் சம்மந்தமில்லை என்று எழுதி வாங்கிக் கொண்டு மிரட்டி வெளியேற்றி விடுகிறார்கள் மாமியார் மற்றும் அவரது உறவினர்கள். 

 

அதன் பிறகு எங்கே போவது என்று நினைத்தவர், மருத்துவமனைக்கு வந்து தஞ்சமடைந்துள்ளார். குழந்தை பிறந்த தகவல் அறிந்து தன் கணவர் வருவார், வந்து தன்னை அழைத்துச் செல்வார் என்ற நம்பிக்கையோடு மருத்துவமனை வளாகத்தில் உள்ள ஷெட்டில் தங்கி உள்ளார் என்றார்.

 

இது குறித்து மாவட்ட ஆட்சியர் உமா மகேஸ்வரிக்கு நாம் தகவல் தெரிவித்துள்ளோம். மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுத்து அவரது கணவருடன் சேர்த்து வைக்க நடவடிக்கை எடுப்பார் என்ற நம்பிக்கை உள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

வாழைமரம் தோரணங்களோடு தயாரான மாதிரி வாக்குப் பதிவு மையம்!

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
Voting registration center ready with banana trees

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடுமுழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி(நாளை) தமிழ்நாட்டில் வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. நாடாளுமன்றத் தேர்தல் பரபரப்புரை பரபரப்புகள் அடங்கியுள்ள நிலையில் ஆங்காங்கே வாக்குச் சாவடிகள் தயாராகிவிட்டது. மாதிரி வாக்குச் சாவடி என்று ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதிக்கும் சில வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது.

Voting registration center ready with banana trees

புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் உள்ள வாக்குச் சாவடியில் ஒரு வாக்குச் சாவடியைத் தேர்வு செய்து மாதிரி வாக்குச் சாவடியாக அமைக்கப்பட்டுள்ளது. வாக்குப் சாவடிக்கு முன்பு வாழை மரம், தோரணங்கள் கட்டி வாசலில் வண்ணக் கோலமிட்டு பூ, பழம் தாம்பூலம் தட்டுடன் இனிப்பு வழங்கி வாக்குப் பதிவுக்கு வரும் வாக்காளர்களை வரவேற்று வாக்குப் பதிவுக்கு அனுப்பும் வண்ணம், வாக்குப் பதிவு மையத்திற்குள் விழா கூடம் போல அலங்காரம் செய்யப்பட்டுள்ளது.

ஏற்பாடுகளை கீரமங்கலம் பேரூராட்சி செயல் அலுவலர் இளவரசி மற்றும் பேரூராட்சி பணியாளர்கள் செய்துள்ளனர்.

Next Story

மன்சூர் அலிகானுக்கு தீவிர சிகிச்சை

Published on 17/04/2024 | Edited on 17/04/2024
nn

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதிலிருந்து தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்தது. தமிழகத்தில் அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்கள் சூடு பறக்க நடத்தினர்.

இன்று தேர்தல் பிரச்சாரத்திற்கான கடைசி நாள் என்பதால் அனைத்துக் கட்சிகளும் இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் இறங்கிய நிலையில் இன்று மாலை 6 மணியோடு தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 2024 மக்களவை தேர்தலுக்கான அனல் பறந்த பிரச்சாரம் ஓய்ந்தது. நாளை மறுநாள் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

இந்தத் தேர்தலில் வேலூர் தொகுதியில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிடுகிறார் மன்சூர் அலிகான். பலாப்பழ சின்னத்தில் போட்டியிடும் அவர், தொடர்ச்சியாகக் காய்கறி மார்க்கெட், மீன் மார்க்கெட் என வேலூர் தொகுதிக்குட்பட்ட பல்வேறு இடங்களில் அவரது வழக்கமான நக்கல் கலந்த பாணியில் பிரச்சாரம் மேற்கொண்டார்.

இதையடுத்து பிரச்சாரத்தின் கடைசி நாளான இன்று வேலூர் குடியாத்தம் பகுதியில் தீவிர பரப்புரையில் ஈடுபட்ட மன்சூர் அலி கானுக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. உடனடியாக அருகிலிருந்த மருத்துவமனையில் அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து சென்னை கே.கே.நகரில் உள்ள மருத்துவமனையில் தற்போது மன்சூர் அலிகான் சேர்க்கப்பட்டுள்ள நிலையில், அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளது.