ADVERTISEMENT

"இந்த இரண்டு தீர்ப்புகளின் மூலமாக மாநில உரிமையின் வலிமை உணர்த்தப்பட்டிருக்கிறது" - பழனிவேல் தியாகராஜன்

07:29 PM May 19, 2022 | kirubahar@nakk…

ADVERTISEMENT

ADVERTISEMENT

"ஜி.எஸ்.டி கவுன்சிலின் பணி என்பது பரிந்துரைகளை வழங்குவதே தவிர, மத்திய, மாநில அரசுகளைக் கட்டுப்படுத்துவது அல்ல" என்று உச்சநீதிமன்றம் இன்று அறிவித்திருந்த நிலையில், இத்தீர்ப்பு குறித்து செய்தியாளர்கள் மத்தியில் தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேசினார்.

மதுரையில் உள்ள அவரது முகாம் அலுவலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், "ஜி.எஸ்.டி கவுன்சில் மாநில, ஒன்றிய அரசுகளுக்கு பரிசீலனைகளை அனுப்ப மட்டுமே முடியும். அரசுகளைக் கட்டாயப்படுத்த முடியாது என்று உச்ச நீதிமன்ற தீர்ப்பு தெளிவாகச் சுட்டிக்காட்டியுள்ளது. மாநில, ஒன்றிய அரசுகளின் உரிமைகளைக் கடந்து முடிவெடுக்க ஜி.எஸ்.டி கவுன்சிலுக்கு அதிகாரம் கிடையாது.

பேரறிவாளன் விடுதலை தீர்ப்பையும், ஜி.எஸ்.டி வரைமுறை தீர்ப்பையும் இணைத்துப் பார்க்க வேண்டிய கட்டாயம் உள்ளது. பல ஆண்டுகளாக மாநில உரிமைகளைக் குறைக்கும் வகையில், கூட்டாட்சி தத்துவத்தை அழிக்கும் வகையில் ஒன்றிய அரசு, குடியரசுத் தலைவர், ஆளுநர் ஆகியோரின் செயல்கள் இருந்தன. அடுத்தடுத்த இந்த இரண்டு தீர்ப்புகளின் மூலமாக மாநில சட்டமன்ற உரிமைகளுக்கு இருக்கும் வலிமை உணர்த்தப்பட்டிருக்கிறது. மாநில சட்டமன்ற உரிமைகள் குறித்து நீதிமன்றம் சுட்டிக் காட்டுவது தான் கவனிக்க வேண்டியது.

வரலாற்றில் இல்லாத சட்ட அமைப்பு பிழைகளை ஜி.எஸ்.டி கவுன்சில் செய்து கொண்டிருப்பதாகக் கடந்த ஆண்டே கவுன்சில் கூட்டத்தில் தமிழக அரசு சார்பில் முன்வைத்திருந்தோம். மாநில உரிமைகளைக் காக்கும் முயற்சிகளைக் கொண்டாடும் வகையிலான தீர்ப்புகள் வந்து கொண்டிருக்கின்றன. ஜனநாயகத்திற்கும், மக்களுக்கும் அவர்களுக்கான உரிமைகளை நிலைநிறுத்தும் வகையிலும் தீர்ப்புகள் வெளியாகி உள்ளன.

ஜி.எஸ்.டி கவுன்சில் எடுக்கும் முடிவுகளைச் சட்டமாக இயற்றாமல் அப்படியே அரசுகள் பின்பற்றும் சூழல் உள்ளது. ஜி.எஸ்.டி கவுன்சிலின் அடிப்படை செயல்பாடே பிழையாக உள்ளது. மாநில சட்டமன்ற உரிமைகளை உச்ச நீதிமன்ற தீர்ப்புகள் வழியாக மீண்டும் நிலை நிறுத்தி உள்ளார்கள்" எனத் தெரிவித்தார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT