Skip to main content

கல்விக்கட்டணம்: பெற்றோரை அச்சுறுத்தும் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை தேவை! ராமதாஸ்

Published on 10/05/2020 | Edited on 10/05/2020
 ramadoss pmk



கல்விக் கட்டணம் செலுத்தும்படி பெற்றோரை அச்சுறுத்தும் பள்ளி நிர்வாகங்கள் மீது தமிழக அரசு கடும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.
 

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டில் ஊரடங்கு ஆணை காரணமாக பெற்றோர்கள் வாழ்வாதாரம் இழந்து தவிக்கும் நிலையில், அவர்களின் குழந்தைகளுக்கான கல்விக் கட்டணத்தை இம்மாதம் 15-ஆம் தேதிக்குள் செலுத்த வேண்டும் என்று பெரும்பான்மையான தனியார் பள்ளிகள் தகவல் அனுப்பியுள்ளன. கட்டணம் செலுத்தாத மாணவர்கள் ஆன்லைன் வகுப்புகளில் சேர்த்துக் கொள்ளப்பட மாட்டார்கள் என்றும் பல பள்ளிகள் எச்சரிக்கை விடுத்துள்ளன. பள்ளிகளின் இந்த மனிதநேயமற்ற செயல் கண்டிக்கத்தக்கது.
 

தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக மார்ச் 24-ஆம் தேதி நள்ளிரவு முதல் ஊரடங்கு ஆணை நடைமுறைப்படுத்தப்பட்டிருக்கும் போதிலும், அதற்கு சில வாரங்களுக்கு முன்பே தொழில் முடக்கம் தொடங்கி விட்டது. தமிழகத்தில் 90 விழுக்காட்டுக்கும் கூடுதலானவர்கள் அமைப்பு சாராத தொழில்களையே தங்களுக்கான வாழ்வாதாரமாகக் கொண்டிருப்பவர்கள் என்பதால், அவர்கள் கடந்த இரு மாதங்களுக்கு மேலாக வருவாய் இழந்து தவிக்கின்றனர். அன்றாட உணவு உள்ளிட்ட தேவைகளுக்கே அரசின் உதவியையும், மற்றவர்களின் உதவியையும் எதிர்பார்த்திருக்கும் அவர்களிடம்  கல்விக்கட்டணத்தை உடனடியாக செலுத்தும்படி கட்டாயப்படுத்துவது எந்த வகையிலும் நியாயமல்ல.
 

ஊரடங்கு காலத்தில் தமிழக மக்களின் நிலையை சுட்டிக்காட்டி, அவர்களிடம் கல்விக்கட்டணம் வசூலிப்பதை தற்காலிகமாக நிறுத்தி வைக்கும்படி தனியார் பள்ளிகளுக்கு அரசு அறிவுறுத்த வேண்டும் என்று கடந்த மார்ச் மாதம் கூறியிருந்தேன். அதைத் தொடர்ந்து தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அவர்களும் தனியார் பள்ளிகள் மாணவர்களிடம் கல்விக்கட்டணம் வசூலிப்பதை தற்காலிகமாக நிறுத்தி வைக்க வேண்டும் என்று அறிவுறுத்தியிருந்தார். அதன்பிறகும்  கட்டண வசூல் தொடர்ந்த நிலையில், கல்விக்கட்டணத்தை கட்டாயப்படுத்தி வசூலிக்க தடை விதித்து அரசாணை பிறப்பிக்க வேண்டும் என்று கோரியிருந்தேன். அதன்படி தமிழகத்தில் ஊரடங்கு காலம் முடியும் வரை கல்விக் கட்டணம் செலுத்தும்படி பெற்றோரை பள்ளி நிர்வாகங்கள் கட்டாயப்படுத்தக் கூடாது என்று தேசியப் பேரிடர் மேலாண்மை சட்டத்தின்படி கடந்த ஏப்ரல் 20-ஆம் தேதி தமிழக அரசின் தலைமைச் செயலர் அரசாணை வெளியிட்டிருந்தார். அதன்பிறகும் தமிழகத்தில் கட்டாயக் கட்டண வசூல் தொடர்கிறது.
 

வறட்சி, மழை, வெள்ளம் உள்ளிட்ட இயற்கைப் பேரிடர்கள் ஏற்படும் போது அதிகபட்சமாக ஓரிரு வாரங்களில் பாதிப்புகள் குறைந்து இயல்பு நிலை திரும்பி விடும். ஆனால், கரோனா வைரஸ் பேரிடர் எப்போது தணியும் என்று தெரியவில்லை. மூன்றாவது கட்ட ஊரடங்கு இம்மாதம் 17-ஆம் தேதி வரை நீடிக்கப்பட்டிருக்கிறது. அதன்பிறகும் எப்போது இயல்பு நிலை திரும்பும்?, எப்போது வாழ்வாதாரம் உறுதி செய்யப்படும் என்பது தெரியவில்லை. இத்தகைய சூழலில் கல்விக்கட்டணத்தை வரும் 15-ஆம் தேதிக்குள் செலுத்தாத குழந்தைகள் ஆன்லைன் வகுப்புகளில் சேர்க்கப்பட மாட்டார்கள்; அவர்களுக்கான வகுப்புகள் மீண்டும் நடத்தப்பட மாட்டாது என்று பள்ளி நிர்வாகங்கள் எச்சரிப்பது அழகல்ல. வணிக நிறுவனங்கள் இதுபோன்று கூறலாம்; கல்விக் கூடங்கள் ஒருபோதும் கூறக்கூடாது.
 

எனவே, வாழ்வாதாரம் இழந்து தவிக்கும் குடும்பங்களைச் சேர்ந்த குழந்தைகளிடம் மட்டுமாவது நிலைமை சரியாகும் வரை கல்விக்கட்டணம் வசூலிப்பதை கருணை அடிப்படையில் தனியார் பள்ளி நிர்வாகங்கள் நிறுத்தி வைக்க வேண்டும். அதையும் மீறி கல்விக் கட்டணம் செலுத்தும்படி பெற்றோரை அச்சுறுத்தும் பள்ளி நிர்வாகங்கள் மீது தமிழக அரசு கடும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என கூறியுள்ளார்.
 

சார்ந்த செய்திகள்

Next Story

‘ஜெய் ஸ்ரீராம்’ முழக்கத்தோடு பள்ளி மீது தாக்குதல்; வெளியான அதிர்ச்சி வீடியோ!

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
Incident on school chanting Jai Sriram  Shocking video released in telangana

தெலுங்கானா மாநிலம், மன்செரியல் மாவட்டம், கண்ணேபல்லி கிராமத்தில் அன்னை தெரசா உயர்நிலைப்பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில், அந்தக் கிராமத்திலும், அதன் சுற்றுவட்டாரப் பகுதியில் இருந்தும் ஏராளமான மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர்.

இந்த நிலையில், இன்று(18-04-24) 50க்கும் மேற்பட்டவர்கள் காவி உடை அணிந்து, இந்தப் பள்ளிக்குள் நுழைந்து, அங்கிருந்த அன்னை தெரசா சிலை உள்ளிட்டவற்றின் மீது கல் வீசி பயங்கர தாக்குதல் நடத்தியுள்ளனர். மேலும், அவர்கள் ஜெய்ஸ்ரீ ராம் என்று முழக்கமிட்டவாறு அந்தப் பள்ளி மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். இது தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதத்ளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தத் தாக்குதல் தொடர்பான வீடியோ வைரலானதைத் தொடர்ந்து, இந்தச் சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும், இந்தச் சம்பவம் குறித்து பள்ளியின் முதல்வரான கேரளாவைச் சேர்ந்த ஜெய்மன் ஜோசப்பிடம் போலீசார் விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில், கடந்த இரண்டு நாள்களுக்கு முன்பு காவி நிற உடை அணிந்து சில மாணவர்கள் பள்ளிக்கு வந்துள்ளனர். இதனைக் கண்ட அப்பள்ளி முதல்வர், அந்த மாணவர்களை அழைத்து விசாரணை நடத்தியுள்ளார்.

அதற்கு அந்த மாணவர்கள், 21 நாள்கள் அனுமன் தீட்சை சம்பிரதாயத்தைக் கடைபிடிப்பதாக கூறியுள்ளனர். அதனால், பள்ளி முதல்வர், மாணவர்கள் தங்களுடைய பெற்றோர்களைப் பள்ளிக்கு அழைத்து வருமாறு கூறியுள்ளார். இதன் காரணமாக, இன்று காவி உடை அணிந்து வந்த கும்பல் பள்ளி மீது தாக்குதல் நடத்தியுள்ளனர் என்பது தெரியவந்தது.. .

மேலும், இந்தத் தாக்குதலில் பள்ளி முதல்வர் ஜோசப்பை சுற்றி வளைத்து அடித்து, அவரது நெற்றியில் வலுக்கட்டாயமாக திலகமிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனையடுத்து, மாணவர்களின் பெற்றோர்கள் அளித்த புகாரின் பேரில், மத உணர்வுகளைத் தூண்டுதல், மதத்தின் அடிப்படையில் பகைமையை வளர்ப்பது தொடர்பான பிரிவுகளின் கீழ் பள்ளி முதல்வர் உட்பட இரண்டு ஊழியர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story

பா.ஜ.க கொடியைத் தீயிட்டு கொளுத்திய பா.ம.க நிர்வாகி; பின்னணி என்ன?

Published on 17/04/2024 | Edited on 17/04/2024
What is the background on BJP executive who set fire to BJP flag

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த புள்ளநேரி சேர்ந்த மதன்ராஜ் என்பவர் தன்னுடைய முகநூல் பக்கத்தில், இரண்டு வீடியோக்களை பதிவு செய்துள்ளார். அந்த வீடியோவில் அவர் கூறியதாவது, ‘தான் புள்ளநேரி பகுதியைச் சார்ந்தவன் எனவும் பாட்டாளி மக்கள் கட்சியில் சுமார் 12 வருட காலமாக இருந்து வருகிறேன். மேலும் முன்னாள் மாவட்ட இளைஞர் அணி துணை செயலாளராகவும் உள்ளேன்.

இங்கு பஞ்சாயத்தில் உள்ள பா.ம.க நிர்வாகிகளை கலந்து ஆலோசனை செய்யாமல், பா.ஜ.க.வினர் தன்னிச்சையாக செயல்படுகின்றனர். இதன் காரணமாக தன்னுடைய கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன். தங்களுடைய பஞ்சாயத்தில் 65 சதவீதம் பாட்டாளி மக்கள் கட்சியின் ஓட்டு சதவீதம் உள்ளது. ஆனால், பா.ஜ.க.வில் ஓர் இருவர் தான் உள்ளனர்.

பா.ஜ.க நிர்வாகிகள், மரியாதை எப்படி கொடுக்க வேண்டும் என பாட்டாளி மக்கள் கட்சியினரை பார்த்து தெரிந்து கொள்ள வேண்டும். எனவே எனது கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்’ எனக்கூறி பா.ஜ.க.வின் கொடியை எரித்து எதிர்ப்பை தெரிவித்துள்ளார். இதன் வீடியோவை தனது முகநூலிலும் பதிவு செய்துள்ளார். மேலும் கட்சியினரின் அழுத்தத்தின் காரணமாக சிறிது நேரத்தில் அந்த வீடியோவை டெலீட் செய்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது இந்த வீடியோ சமூக வலைத்தளங்களிலும் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.