Skip to main content

தலித் பக்தரை தோளில் சுமந்து வலம்வந்த அர்ச்சகர்! - (வீடியோ)

Published on 18/04/2018 | Edited on 18/04/2018

நாடு முழுவதும் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த மக்கள் ஒடுக்குமுறைகளைச் சந்தித்து வருகின்றனர். சாதிரீதியிலான படிநிலைகள் பல்வேறு துறைகளில் இன்னமும் பின்பற்றப்படுகின்றன. குஜராத் மாநிலத்தில் கோவில் விழா நிகழ்ச்சியைப் பார்த்த தலித் இளைஞர் உயர்சாதியினரால் படுகொலை செய்யப்பட்டார்.

 

இதுமாதிரியான தொடர் வன்முறைகள் நடந்துகொண்டிருக்கும் சூழலில், தெலுங்கானா மாநிலத்தில் அனைவரும் சமம் என்ற நோக்கத்தை விளக்கும் வகையில், தலித் பக்தரை அர்ச்சகர் ஒருவர் தனது தோளில் சுமந்து வலம்வந்த நிகழ்வு பலதரப்பிலும் பாராட்டுகளைப் பெற்றுள்ளது.

 

Dalit

 

தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் உள்ளது சில்கூர். இங்குள்ள ஸ்ரீரங்கநாத சுவாமி கோவிலில் 3ஆயிரம் ஆண்டுகள் பழைமையான முனிவாகன சேவா நிகழ்வு நடைபெற்றது. இதில், தலித் பக்தர் ஆதித்யா பரஸ்ரீ என்பவர் கழுத்தில் மாலை, தலைப்பாகையுடன் அலங்கரிக்கப்பட்டு வர, அவரை அந்தக் கோவிலின் அர்ச்சகர் சி.சி.ரங்கராஜன் தனது தோளில் தூக்கிக்கொண்டு வலம்வந்தும், கட்டியணைத்துக் கொண்டும், பூஜை நடத்தியும் கோவிலை வலம்வந்தார். இந்த நிகழ்வினை பக்தர்கள் அனைவரும் மகிழ்ச்சியோடு கண்டுகளித்தனர். 

 

Dalit

 

இதுகுறித்து அர்ச்சகர் ரங்கராஜன், ‘இது 2,700 ஆண்டுகளாக கடைபிடிக்கப்பட்டு வரும் மிகப் பழைமையான நிகழ்வாகும். இது சனாதன தர்மம் (இந்துமதம்) சமூகத்தில் உள்ள அனைவருக்கும் சமமானது என்பதை உறுதிசெய்கிறது. மனிதர்களுக்கிடையே சமத்துவத்தை நிலைநாட்ட போதனைகளைச் செய்த வைஷ்ணவ மதபோதகர் ராமானுஜரின் ஆயிராமவது பிறந்ததினத்தைக் கொண்டாடும் தருணத்தில் இந்த நிகழ்வு நடந்துள்ளது. நாடு முழுவதும் தலித்துகளுக்கு எதிரான குற்றங்கள் நடந்துகொண்டிருக்கும் சூழலில், இந்த நிகழ்வு பொதுசமூகத்தின் சகோதரத்துவத்தை நிலைநாட்டியிருக்கிறது’ என உற்சாகமாக தெரிவித்துள்ளார். தமிழகத்தில் உள்ள வைஷ்ணவ கோவில்களிலும் இது கடைபிடிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. 

 

Dalit

 

மேலும், இந்த உற்சவத்தின் நாயகனான ஆதித்யா பரஸ்ரீ, ‘ஒரு தலித்தாக நானும், என் குடும்பத்தினரும் பல்வேறு ஒடுக்குமுறைகளையும், அவமானங்களையும் சந்தித்திருக்கிறோம். மகபூப்நகரில் உள்ள அனுமான் கோவிலில் நுழையக்கூட எனக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இது இன்னமும் பல கோவில்களில் நடந்துகொண்டுதான் இருக்கிறது. இன்றைய நிகழ்வு மாற்றத்திற்கான தொடக்கமாக இருக்கக்கூடும் என நான் நம்புகிறேன்’ என உணர்ச்சி பொங்க பேசியிருக்கிறார்.

 

 

தலித்துகளை கோவிலுக்குள் அனுமதிக்காத சூழல் பல நூறு ஆண்டுகளாக நம் நாட்டில் நடைமுறையில் உள்ளது. பெரியார் போன்ற தலைவர்களால் கோவில் நுழைவுப்போராட்டங்கள் நடத்தப்பட்டு, தாழ்த்தப்பட்ட மக்களின் உரிமைகள் காக்கப்பட்டன. அதைத்தொடர்ந்து தலித்துகளையும் கோவில்களில் அர்ச்சகர்களாக ஆக்கவேண்டும் என்ற கோரிக்கைகள் வலுவாக எழுந்தன. ஆனால், அது இன்றளவிலும் மிகப்பெரிய சவாலாகவே இருந்துவருகிறது. எஸ்.இ/எஸ்.டி. வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் சில பிரிவுகளை நீர்த்துப்போகச் செய்திடும் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு, மிகப்பெரிய சலனத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

சார்ந்த செய்திகள்

Next Story

ஒயின் ஷாப்புகளில் அதிகவிலை! ஆத்திரத்தில் பெட்டி பெட்டியாக அள்ளிச்சென்ற பொதுமக்கள்!

Published on 22/03/2024 | Edited on 22/03/2024
liquor shops are selling liquor bottles at high prices, causing public dissatisfaction in Telangana

தெலங்கானாவில் அதிக விலைக்கு மதுபானம் விற்பனை செய்ததாகக் கூறி, நான்கு ஒயின் ஷாப்புகளை முற்றுகையிட்ட பொதுமக்கள், கடைகளில் இருந்த ரூ.22 லட்சம் மதிப்புள்ள மது பாட்டில்களை அள்ளிச்சென்றனர். தெலங்கானா, பத்ராத்ரி கொத்தகுடேம் மாவட்டம், தெகுலப்பள்ளியில் MRP விலையைவிட ரூ.20 முதல் ரூ.30 வரை அதிக விலைக்கு, மது விற்பனையாளர்கள் சிண்டிகேட் அமைத்து மது விற்பதாக  மதுப்பிரியர்கள் குற்றம்சாட்டி வந்தனர்.

இந்நிலையில், ஆத்திரமடைந்த கிராம மக்கள் மதுக்கடைகள் முன்பு திரண்டு, நான்கு ஒயின்ஷாப்புகளில்  இருந்த  மதுபானங்களை அள்ளிச் சென்றனர். பொது மக்கள் பலரும் மது பாட்டில்களை அள்ளிச்சென்ற நிலையில், அவ்வழியாகச் சென்ற வாகன ஓட்டிகளும் மதுபாட்டில்களை எடுத்துச்சென்றனர். இதனை ஊழியர்கள் தடுக்க முயன்றும் முடியாததால், காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

liquor shops are selling liquor bottles at high prices, causing public dissatisfaction in Telangana

இச்சம்பவத்தின்போது, பெரும்பாலும் பெண்களே மதுபாட்டில்களை எடுத்துச் சென்றனர். இதனையடுத்து, டிஎஸ்பி சந்திரபானு தலைமையில் அங்கு வந்த காவல்துறையினர், கடை உரிமையாளர்களின் புகாரின் அடிப்படையில் விசாரித்து வருகின்றனர்.  மொத்தத்தில் சுமார் ரூ.22 லட்சம் மதிப்புள்ள மதுபாட்டில்களை பொது மக்கள் அள்ளிச் சென்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். 

Next Story

“தீவிரமான மக்கள் பணிக்குத் திரும்ப வேண்டும்” - தமிழிசை செளந்தரராஜன்

Published on 18/03/2024 | Edited on 18/03/2024
Tamilisai Selandararajan's explanation of his resignation

தமிழக பா.ஜ.க. தலைவராக இருந்த தமிழிசை செளந்தரராஜன் கடந்த 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் தூத்துக்குடி தொகுதியில் போட்டியிட்டு தி.மு.க. துணைப் பொதுச்செயலாளர் கனிமொழியிடம் தோல்வி அடைந்தார். அதனைத் தொடர்ந்து 2019 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் தெலுங்கானா மாநிலத்தின் ஆளுநராகப் பொறுப்பேற்றார். மேலும் கடந்த 2022 ஆம் ஆண்டு முதல் புதுச்சேரி யூனியன் பிரதேச துணை நிலை ஆளுநராகவும் பதவி வகித்தார். புதுச்சேரி மாநில துணை நிலை ஆளுநராக தமிழிசை செளந்தரராஜன் பதவியேற்று 3 ஆண்டுகள் நிறைவு பெற்றதையடுத்து, ஆளுநர் மாளிகையில் பத்திரிகையாளர்கள் மற்றும் ஊடகவியலாளர்களுடன் சில நாட்களுக்கு முன்னர் கொண்டாடினார்.

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய தமிழிசை செளந்தரராஜன், “3 ஆண்டுகள் எப்படி ஓடியது என்பது ஆச்சரியமாக உள்ளது. ஆளுநர் பதவியில் அதிகமாக முதல்வர்களை பார்த்ததில் பெருமை கொள்கிறேன். 4 முதல்வர்களை எனது பதவியின் போது பார்த்து பயணித்துள்ளேன். வரும் செப்டம்பர் 17 ஆம் தேதி வந்தால், நான் பொது வாழ்க்கையிலும் அரசியலிலும் இணைந்து 25 ஆண்டுகள் ஆகிறது. மக்கள் பிரதிநிதியாக வேண்டும் என்ற எண்ணம் இருந்தாலும் அது ஆண்டவனும், ஆள்பவனும் தான் முடிவு செய்வார்கள். புதுச்சேரியை வேறு மாநிலம் என்று எப்போதும் பார்த்ததில்லை. தன்னை வேறு மாநிலத்தவர் என்று யாரும் பார்க்க வேண்டாம்” என்று கூறியிருந்தார்.

இந்த பரபரப்பான சூழ்நிலையில் தமிழிசை செளந்தரராஜன், தனது ஆளுநர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். புதுச்சேரி மாநிலத்தில் என்.ஆர். காங்கிரஸ் - பா.ஜ.க. கூட்டணி ஆட்சி நடைபெற்று வரும் நிலையில், வரவிருக்கிற மக்களவைத் தேர்தலில் என்.ஆர். காங்கிரஸ் - பா.ஜ.க. கூட்டணி சார்பாக பா.ஜ.க. வேட்பாளர் போட்டியிடுவதாக சமீபத்தில் அறிவிப்பு வெளியானது. அதேபோல், தமிழகத்திலும் பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி 39 தொகுதிகளிலும் களம் காண்கிறது. இந்த தேர்தலில், புதுச்சேரி மாநிலத்தில் பா.ஜ.க. சார்பாக தமிழிசை செளந்தரராஜன் போட்டியிடப் போவதாக சில நாட்களுக்கு முன்பு தகவல் வெளியாகி இருந்தது. இத்தகைய சூழலில் தூத்துக்குடி அல்லது புதுச்சேரியில் தமிழிசை செளந்தரராஜன் போட்டியிடப் போவதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது.

இந்நிலையில், ஆளுநர் பதவியை ராஜினாமா செய்தது குறித்து தமிழிசை சௌந்தரராஜன் பேசுகையில், “தீவிரமான மக்கள் பணிக்கு திரும்ப வேண்டும் என்பதற்காகத் தான் மனமுவந்து ராஜினாமா செய்திருக்கிறேன். தெலங்கானா, புதுச்சேரி மக்கள் என் மீது காட்டிய அன்பிற்கும் நான் நன்றியுடையவளாக இருப்பேன். மக்களுக்கு நேரடியாக பணியாற்ற வேண்டும் என்பதே என்னுடைய விருப்பம். நான் மக்கள் ஆளுநராக தான் இருந்தேன். என்னுடைய ராஜினாமா ஏற்றுக்கொண்ட பிறகு என்னுடைய எதிர்கால திட்டத்தை பற்றிச் சொல்கிறேன்” எனத் தெரிவித்தார். முன்னதாக ஏ.என்.ஐ. செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில், “மக்கள் சேவைக்காக மீண்டும் வருவதில் மகிழ்ச்சி அடைகிறேன். தெலுங்கானா மக்கள் ஒவ்வொருவருக்கும் நன்றி. நான் எப்போதும் தெலுங்கானாவின் சகோதரி. அவர்களின் அன்புக்கும் பாசத்திற்கும் நன்றி” எனத் தெரிவித்திருந்தார்.