ADVERTISEMENT

பொள்ளாச்சி குற்றவாளிகளை சிபிஐ வெளியில் கொண்டு வரும் என நம்பிக்கை கிடைத்துள்ளது: நக்கீரன் ஆசிரியர்

01:04 PM May 21, 2019 | rajavel

பொள்ளாச்சி கொடூர பாலியல் வன்முறை குறித்து செய்தி வெளியிட்டது தொடர்பாக ஏற்கனவே நக்கீரன் ஆசிரியரிடம் சி.பி.சி.ஐ.டி. போலீஸ் நான்கு மணிநேரம் விசாரணை செய்தது. இந்த வழக்கு சி.பி.ஐக்கு மாற்றப்பட்ட நிலையில் மீண்டும் சி.பி.ஐ. நக்கீரன் ஆசிரியரிடம் உள்ள ஆதாரங்களைக் கேட்டு சம்மன் அனுப்பியுள்ளதால் இன்று ( 2019 மே-21) காலை 11 மணிக்கு சென்னை பெசண்ட்நகர் ராஜாஜிபவன் வளாகத்திலுள்ள சி.பி.ஐ. அலுவலகத்தில் ஆஜரானார்.

ADVERTISEMENT



ஆஜரான பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார் நக்கீரன் ஆசிரியர். அவர் பேசியது...

ADVERTISEMENT

சிபிசிஐடி என்னை சாட்சியாக கூப்பிட்டு ஒரு மோசமான விசாரணை கைதியை விசாரிப்பது போல விசாரித்தார்கள். ஆனால் சிபிஐ சாட்சியாக கூப்பிட்டு சாட்சியாக விசாரித்தார்கள். இரண்டு பேருக்கும் உள்ள வித்தியாசம் இதுதான். நக்கீரனுக்கே ஒரு தெளிவு கிடைத்தது. எந்த பொள்ளாச்சி விஷயத்தை மக்களுக்கு முன் கொண்டு வந்ததோமோ, அதே பொள்ளாச்சி விஷயத்தில் பின்னால் இருக்கும் உண்மையான குற்றவாளிகளை சிபிஐ வெளியில் கொண்டு வரும் என்ற நம்பிக்கை கிடைத்துள்ளது.


இந்த பாலியல் குற்றத்தில் ஈடுபட்ட கும்பலை வெளியில் கொண்டுவர பாடுபட்டோம். நாங்க முதலில் சிபிசிஐடி விசாரணைக்கு போனபோது எங்களுக்கு கிடைத்த ஆவணங்களை கொடுத்தோம். அடுத்ததாக நாங்கள் வெளியிட்ட ஆவணங்களை சி.பி.ஐ.யிடம் கொடுத்துள்ளோம். அதனை சார்ந்து அவர்கள் கேட்ட கேள்விகளும், நாங்க சொன்ன பதில்களும் ஒத்துப்போனது. சரியான பாதையில் இந்த விசாரணை செல்கிறது. பொள்ளாச்சி விஷயத்தில் பின்னால் இருப்பவர்களை வெகு சீக்கிரத்தில் வெளியே கொண்டு வந்துவிடுவார்கள் என்ற நம்பிக்கை எங்களுக்கு கிடைத்துள்ளது. நம்ம (பத்திரிகையாளர்கள்) உழைப்புக்கு கிடைக்கவேண்டிய வெகுமதி வெகு விரைவில் கிடைக்கும் என்ற நம்பிக்கை கிடைத்துள்ளது.

பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்குமா?

கட்டாயமாக நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கை இன்னைக்கு அவர்கள் பேசியதில் கிடைத்தது.

ஆரம்பத்தில் இருந்து இதில் அரசியல் பின்புலம் இருக்கிறது என்ற கருத்து இருக்கிறது...

கட்டாயமாக இருக்கிறது. அதில் மாற்றுக்கருத்தே இல்லை.

சிபிஐ விசாரணைக்கு போகும்போது அந்த உண்மை வெளியேவர வாய்ப்புகள் இருக்கிறதா?

கட்டாயமாக சிக்குவார்கள் என்ற நம்பிக்கை இருப்பதால்தான் இன்று சொல்கிறேன். நக்கீரனின் அந்த உழைப்பு வீண் போகவில்லை. ஒரு புலனாய்வை நோக்கி போகிறோம். ஒரு பயங்கரம் நடந்திருக்கிறது. அதை மறைப்பதற்கு ஒரு பிரிவினர் பாடுபடுகிறார்கள். இந்த விஷயத்தில் பின்னால் இருப்பவர்களை வெளிக்கொண்டுவர வேண்டும் என்பதில் நாங்கள் இன்றுவரை தொடர்ந்து பாடுபடுகிறோம். நாம் நினைப்பது போலவே குற்றவாளிகளை வெளியே கொண்டு வந்துவிடுவார்கள். அந்த கடமை சி.பி.ஐ.க்கு இருக்கிறது. அவர்கள் அந்த வேலையை செய்துவிடுவார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது.




ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT