Advertisment

முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் வீட்டின் முன்பு போலீஸ் குவிப்பு; டெல்லியில் பரபரப்பு!

Police gathering in front of Arvind Kejriwal's house and Confusion in Delhi

டெல்லி 32 மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டு 849 சில்லறை விற்பனை நிலையங்களுக்கு மதுபானம் விற்பனை செய்ய உரிமம் வழங்கப்பட்டது. இந்த உரிமம் வழங்கியதில் முறைகேடு நடந்ததாகவும், 100 கோடி ரூபாய் கைமாறியதாகவும் புகார் எழுந்தது. இதையடுத்து, டெல்லி துணை முதலமைச்சராக இருந்த மணீஷ் சிசோடியாவுக்கு சொந்தமான வீடு, அலுவலகங்கள் உள்ளிட்ட 21 இடங்களில் சி.பி.ஐ. அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

Advertisment

அதனைத் தொடர்ந்து கடந்த ஆண்டு பிப்ரவரி 26 ஆம் தேதி மணீஷ் சிசோடியாவை சிபிஐ அதிரடியாகக் கைது செய்திருந்தது. அதே சமயம் அமலாக்கத்துறையும் மணீஷ் சிசோடியாவை கைது செய்து திகார் சிறையில் அடைத்து, அவர் தற்போது நீதிமன்றக் காவலில் இருந்து வருகிறார். இந்த இரண்டு வழக்குகளிலும் ஜாமீன் கோரி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் மணீஷ் சிசோடியா பலமுறை மனு செய்தும் இதுவரை ஜாமீன் கிடைக்கவில்லை. இதனால் சிபிஐ சிறப்பு நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து ஜாமீன் கோரி உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

Advertisment

இந்த மனு தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, ரூ. 338 கோடி பணம் கைமாறியதற்கான பூர்வாங்க ஆதாரம் இருப்பதாகவும், வழக்கின் விசாரணை தொடக்க நிலையில் இருப்பதால் துணை முதல்வராக இருந்த மணீஷ் சிசோடியாவை வெளியே விட்டால் சாட்சியங்களையும், ஆதாரங்களையும் அழித்துவிடுவார் என்று சிபிஐ தரப்பில் வாதிடப்பட்டது. இதனை ஏற்றுக்கொண்ட உச்சநீதிமன்றம், மணீஷ் சிசோடியாவின் ஜாமீன் மனுவைத் தள்ளுபடி செய்தது. மேலும், வழக்கை 6 முதல் 8 மாதங்களுக்குள் விசாரித்து முடிக்க உத்தரவிட்டதோடு, விசாரணை தாமதமானால் மூன்று மாதங்களுக்குப் பிறகு மணீஷ் சிசோடியா மீண்டும் ஜாமீன் மனு தாக்கல் செய்யலாம் எனவும் உச்சநீதிமன்றம் தெரிவித்திருந்தது.

Police gathering in front of Arvind Kejriwal's house and Confusion in Delhi

இந்தத் தீர்ப்பு வெளியான சில மணி நேரத்தில் இந்த வழக்கு தொடர்பாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கடந்த ஆண்டு நவம்பர் 2 ஆம் தேதி அன்று விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்று அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியது. ஆனால், அது அரசியல் நோக்கத்தில் அனுப்பப்பட்டதாகக் கூறி அரவிந்த் கெஜ்ரிவால் அமலாக்கத்துறை முன் ஆஜராகாமல் தவிர்த்தார். இதனைத் தொடர்ந்து, அரவிந்த் கெஜ்ரிவால் கடந்த டிசம்பர் 21 ஆம் தேதி ஆஜராக வேண்டும் என்று அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியிருந்தது. ஆனால், அரவிந்த் கெஜ்ரிவால் அன்றும் அமலாக்கத்துறை முன் ஆஜராகாமல் தவிர்த்தார். இதையடுத்து, அரவிந்த கெஜ்ரிவால் நேற்று (03-01-24) ஆஜராக வேண்டும் என்று அமலாக்கத்துறை மூன்றாவது முறையாக சம்மன் அனுப்பியிருந்தது. இந்த முறை அவர் ஆஜராகவில்லை என்றால் அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்படுவார் என்று தகவல் வெளியாகியிருந்தது. ஆனால், அமலாக்கத்துறை விசாரணைக்கு நேற்று ஆஜராக இயலவில்லை என அரவிந்த் கெஜ்ரிவால் கடிதம் எழுதி அனுப்பி இருந்தார்.

இந்த நிலையில், டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் இன்று (04-01-24) கைது செய்யப்பட வாய்ப்புள்ளதாக டெல்லி மாநில ஆம் ஆத்மி அமைச்சர் ஆதிஷி அதிர்ச்சி தகவலை வெளியிட்டார். இது குறித்து அவர் தனது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது, “இன்று (04-01-24) காலை அமலாக்கத்துறை அதிகாரிகள் அரவிந்த் கெஜ்ரிவால் வீட்டில் சோதனை நடத்த இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. மேலும், அவர் கைது செய்யப்பட வாய்ப்புள்ளது” என்று பதிவிட்டிருந்தார். அவர் எழுதிய அந்த பதிவு டெல்லி அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் இன்று (04-01-24) கைது செய்யப்படலாம் என்று தகவல் வெளியாகியிருந்த நிலையில், அவரது வீட்டின் முன்பு போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. மேலும், கெஜ்ரிவால் இல்லத்துக்கு செல்லும் அனைத்து சாலைகளும் காவல்துறை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளன. ஆம் ஆத்மி அலுவலகத்தில் அதிகளவில் தொண்டர்கள் குவிய இருப்பதால் அங்கும் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

police Delhi
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe