Skip to main content

பச்சிளம் குழந்தைகளைக் கொன்று குவிக்கும் சிரிய அரசு! வேல்முருகன் வேதனை!

Published on 01/03/2018 | Edited on 01/03/2018
syria


அரசு என்றாலே அது குறிப்பிட்ட ஒரு சாராருக்காக மறுசாராரைக் கொன்றொழிக்கவும் தயங்காது என்ற லெனின் கூற்றைத்தான் இது உறுதிப்படுத்துகிறது. சிரியாவின் இந்தக் குழந்தைப் படுகொலைகள், இனப்படுகொலையின் வலியால் துடிக்கும் தமிழர்களை உலுக்குகிறது என்பதைப் பதிவு செய்கிறது தமிழக வாழ்வுரிமைக் கட்சி என அக்கட்சியின் தலைவர் வேல்முருகன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது,

மத்திய ஆசிய நாடான சிரியாவில் அதிபர் பஷார் அல் ஆசாத் தலைமையிலான ஆட்சி நடந்துவருகிறது. வேலையின்மை, அரசியல், பொருளியல் சுதந்திரமின்மை, ஜனநாயகமே இன்மை எனப் பல்வேறு இன்மைகளால் வாழ்க்கையே இறுக்கமான சூழலில் உள்ளது அந்த நாட்டில். இதனால் கிளர்ச்சியாளர்கள் உருவாகி, அதிபரின் படைகளுக்கு எதிராக ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கின்றனர். இதனால் கடந்த 7 ஆண்டுகளாக அங்கே உள்நாட்டுப் போர் நடந்துவருகிறது. இதில் லட்சக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

தற்போது இரண்டு வாரமாக போர் தீவிரமாகியுள்ளது. இதில் நூற்றுக்கணக்கான குழந்தைகள் கொல்லப்பட்டனர். ரஷ்யப் படைகளின் ஆதரவுடன் நடந்த தாக்குதல் மற்றும் குண்டுவீச்சில்தான் இப்படி பச்சிளம் குழந்தைகள் கொன்று குவிக்கப்பட்டிருக்கிறார்கள். போரில் ரஷ்யா மட்டுமல்ல, அமெரிக்கா, ஈராக், துருக்கி முதலான நாடுகளுக்கும் பங்கிருக்கிறது.

ரஷ்யா சிரியாவைத் தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொண்டு சுரண்ட நினைக்கிறது. அதற்காக சிரிய அதிபர் குடும்பத்துடன் ரஷ்யா நெருக்கமாக இருந்து வருகிறது. ஈராக்கில் ஷியா பிரிவு முஸ்லிம்களின் ஆட்சி நடக்கிறது. சிரியாவில் நடக்கும் ஆட்சியும் ஷியா ஆட்சிதான். அதனால் ஷியா ஆட்சி சிரியாவில் தொடர ஈராக் அதற்கு உதவிவருகிறது.

சன்னி பிரிவு முஸ்லிம் நாடான சவூதி அரேபியா ஈராக்கிற்கு எதிரான நாடு. அதனால் சிரியாவின் ஷியா ஆட்சிக்கு எதிராகப் போராடும் கிளர்ச்சிக் குழுக்களுக்கு உதவி வருகிறது. குர்தீஷ் இன மக்களும் கிளர்ச்சிக் குழுக்களில் இருக்கிறார்கள். இதனால் குர்தீஷ் மக்களைக் கொண்ட துருக்கியும் கிளர்ச்சிக் குழுக்களுக்கு உதவி வருகிறது.

அமெரிக்கா எப்போதும் போல் இதில் ”டபுள் கேம்” ஆடிவருகிறது. அதாவது சிரியாவுக்கு ஆதரவாகப் பேசிக்கொண்டே, போராளிக் குழுக்களுக்கும் உதவிவருகிறது. போராளிகளுக்கு நவீன ஆயுதங்கள் கிடைத்துவிடாதபடியும் பார்த்துக்கொள்கிறது. சிரியாவில் நடக்கும் இந்த உள்நாட்டுப் போர் பச்சிளம் குழந்தைகளைக் கொன்றுகுவிக்கும் அளவுக்கு கொடூரமானதாகவும் பயங்கரமானதாகவும் மாறியதற்குக் காரணமே அமெரிக்காவும் ரஷ்யாவும்தான்.
 

syria


சிரியா எண்ணெய் வளமிக்க நாடு. அதோடு அரபு நாடுகளின் எண்ணெய் வணிகம் முழுவதும் சிரியாவின் கடல் வழியாகத்தான் நடக்கிறது; நடக்க முடியும். இதனால் சிரியாவைக் கட்டுக்குள் வைக்க அமெரிக்கா, ரஷ்யாவுக்கிடையிலான போட்டியும் சிரியாவில் உள்நாட்டுப் போர் நீடிக்க முக்கியக் காரணியாகும். அந்தப் போட்டி மதம், இனம், நிலம் எனப் பல்வேறு வித சிக்கல்களாகவும் வெளிப்படுகிறது.

எப்படியிருந்தாலும் அங்கு பச்சிளம் குழந்தைகள் படுகொலை செய்யப்படுவது ஒட்டுமொத்த மனித குலத்தையுமே அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது. அதிலும் குறிப்பாக தமிழர்களாகிய நாம் இந்தக் குழந்தைப் படுகொலைகளைக் கேள்விப்பட்டு அதிர்ச்சியால் உறைந்துபோயுள்ளோம்.

இலங்கை அரசு இந்திய அரசின் உதவியுடன் லட்சக்கணக்கான நம் தமிழ்ச் சொந்தங்களை ஈழத்தில் இனப்படுகொலை செய்தது. அந்த வலியால் துடிக்கும் நம்மை இது மேலும் உலுக்குகிறது என்பதையே வேதனையுடன் பதிவு செய்கிறது தமிழக வாழ்வுரிமைக் கட்சி!

இப்போது உலக நாடுகளின் வேண்டுகோளுக்கிணங்க ஒருசில நாட்களுக்காவது சிரியாவில் போர்நிறுத்தம் செய்ய உடன்பட்டிருக்கும் சூழ்நிலை ஏற்பட்டிருப்பதாகச் செய்தி வந்திருக்கிறது. இதை வரவேற்கும் அதேநேரத்தில், அந்தப் போர்நிறுத்தத்தை நிரந்தரமாக்கிட இந்திய ஒன்றிய அரசும் தமிழக அரசும்கூட முயற்சி மேற்கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்துகிறது தமிழக வாழ்வுரிமைக் கட்சி.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

சார்ந்த செய்திகள்