Skip to main content

பெரியார் பல்கலை. பதிவாளரை சஸ்பெண்ட் செய்ய உத்தரவு!

Published on 09/02/2024 | Edited on 09/02/2024
Periyar University Order to dismiss the registrar

'பியூட்டர் பவுண்டேஷன்' என்ற தனியார் நிறுவனத்தை தொடங்கி பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தராக இருக்கக்கூடிய ஜெகநாதன் மற்றும் பதிவாளர் தங்கவேல், இணை பேராசிரியராக பணியாற்றி வந்த சதீஷ், பாரதிதாசன் பல்கலைக்கழக பேராசிரியராக இருந்த ராம்கணேஷ் ஆகியோர் கல்விக் கட்டணம் பெற்று மோசடி செய்ததாக புகார்கள் எழுந்தது. இதனடிப்படையில் பெரியார் பல்கலைக்கழகத்தில் பணியாற்றி வந்த தொழிலாளர் சங்க சட்ட ஆலோசகர் இளங்கோவன் கொடுத்த புகாரில் சேலம் கருப்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகநாதனை கைது செய்தனர். ஜாமீனில் வெளிவந்த ஜெகநாதன் மீண்டும் துணைவேந்தராக பணியாற்றி வருகிறார்.

அதே சமயம் பல்கலைக்கழகத்தின் பதிவாளராகவும் கணினி அறிவியல் துறைக்கு தலைவராகவும் பணியாற்றி வந்த தங்கவேல், தனது துறைக்கு தேவையான கணினி, இணைய சேவைக்கான பொருட்களை வாங்கியதில் முறைகேடு செய்ததாகவும், ஆதிதிராவிடர் இளைஞர்களுக்கு நடத்தப்படும் திறன்மேம்பாட்டு பாட திட்டங்களில் பெரும் முறைகேடு நிகழ்ந்துள்ளதாகவும் புகார் எழுந்தது. இந்த முறைகேடு தொடர்பாக எழுந்த புகாரின் பேரில் தணிக்கை குழு ஆய்வு செய்திருந்தது. இந்த ஆய்வில் முறைகேட்டில் பதிவாளர் தங்கவேல் ஈடுபட்டது நிரூபனமானது.

இந்நிலையில் பெரியார் பல்கலைகழக பதிவாளர் தங்கவேலை பணியிடை நீக்கம் செய்ய பல்கலைக்கழக துணைவேந்தருக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற முறைகேடு தொடர்பாக விசாரணை நடத்த அமைக்கப்பட்ட அரசு கூடுதல் தலைமை செயலாளர் பழனிசாமி குழு அறிக்கை அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை தமிழக உயர்கல்வித் துறைச் செய்லாளர் கார்த்திக் பிறப்பித்துள்ளார். பிப்ரவரி 29 ஆம் தேதியுடன் ஓய்வு பெற இருந்த நிலையில் பதிவாளர் தங்கவேலை பணியிடை நீக்கம் செய்ய தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

சார்ந்த செய்திகள்

Next Story

குடிநீரில் கலந்த கழிவுநீர்; 50க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சேர்ப்பு

Published on 04/04/2024 | Edited on 04/04/2024
sewage mixed with drinking water; More than 50 people were hospitalized

சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே குடிநீர் குழாய் உடைந்து கழிவுநீர் கலந்த நிலையில் கழிவுநீர் கலந்த நீரை குடித்த 50க்கும் மேற்பட்டோர் வாந்தி, மயக்கம் என உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் மாவட்டம் வாழப்பாடி பகுதியைச் சேர்ந்த முத்தம்பட்டி, ஏத்தாப்பூர், பெத்தநாயக்கன்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் குடிநீரில் கழிவுநீர் கலந்துள்ளதாக தெரிகிறது. இதில் 50க்கும் மேற்பட்டோர் வாந்தி, மயக்கம் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குடிநீர் குழாயில் ஏற்பட்ட திடீர் உடைப்பு காரணமாக அதில் கழிவுநீர் கலந்ததும் அந்த நீரை பயன்படுத்தியதால் பலருக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டதும் தெரியவந்துள்ளது. இது குறித்து அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Next Story

அ.தி.மு.க. நகரச் செயலாளர் வீட்டில் ரூ.50 லட்சம் பறிமுதல்; வருமானவரித் துறை அதிரடி!

Published on 03/04/2024 | Edited on 03/04/2024
Income tax depat 50 lakh seized from ADMK city secretary house

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அதே சமயம் தமிழக அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்களை தொடங்கியுள்ளன.

இந்நிலையில், தேர்தலில் வாக்களிக்க வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்வது குறித்து வருமான வரித்துறையினருக்கு புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, சேலம் மாவட்டம் தாரமங்கலம் அ.தி.மு.க. நகரச் செயலாளர் பாலசுப்பிரமணியம் என்பவரின் வீடு மற்றும் நகைக் கடையில் 5 மணி நேரத்திற்கு மேலாக வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். இந்த சோதனையின் போது ரூ. 50 லட்சம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும் பாலசுப்பிரமணியத்தின் வீட்டில் இருந்து தங்கக் கட்டிகள் மற்றும் ஆவணங்களை வருமானவரித் துறையினர் கைப்பற்றியுள்ளனர்.

அதே சமயம் சேலத்தின் முக்கிய வீதிகளான சின்னக்கடைவீதி, பெரிய கடைவீதி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள வியாபாரிகளிடம் அ.தி.மு.க. வேட்பாளர் விக்னேஷுக்கு ஆதரவாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று காலை வாக்கு சேகரித்தது குறிப்பிடத்தக்கது.