தமிழகத்தின் முன்னாள் முதல்வரும், அ.தி.மு.க. தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவின் ஒருங்கிணைப்பாளருமான ஓ. பன்னீர்செல்வம் தலைமையில் அவரது ஆதரவாளர்களோடு இன்று (31.07.2025) ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. சுமார் 3 மணிநேரமாக நீடித்த இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் நீடிக்கலாமா? அல்லது விலகலாமா? என்பது குறித்து இரு வேறு கருத்துகள் ஆதரவாளர்கள் இடையே இருந்ததாகக் கூறப்பட்டது. 

அதனால் அந்த கூட்டத்தில் வாக்குவாதம் ஏற்பட்டதாகவும் தகவல் வெளியாகியிருந்தது. இந்நிலையில் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் என்னென்ன முடிவுகள் எடுக்கப்பட்டன என்பது குறித்து ஓ. பன்னீர்செல்வத்தின் அரசியல் ஆலோசகர் பண்ருட்டி ராமச்சந்திரன் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர், “அண்ணா திராவிட முன்னே ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் தலைமையில் உயர்நிலை கூட்டம் நடைபெற்றது. அ.தி.மு.க. தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பி.எஸ். தலைமையில் தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவின் உயர்நிலைக் குழுக் கூட்டம் நடைபெற்றது. 

இன்றைய அரசியல் நிலைமை குறித்தும் தமிழ்நாட்டின் எதிர்காலம் குறித்தும் மக்கள் பிரச்சனைகள் குறித்தும் நீண்ட நேரம் விவாதிக்கப்பட்டு 3 முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. முதலாவதாகத் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தொண்டர்கள் உரிமை மீட்புக் குழு இடம்பெற்றிருந்தது. ஆனால் இன்று முதல் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து தொண்டர்கள் உரிமை மீட்புக் குழு தனது உறவை முறித்துக் கொண்டுள்ளது என்பது ஒரு தீர்மானம். தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இனி தொண்டர்கள் உரிமை மீட்புக் குழு இடம்பெறாது. இரண்டாவதாகத் தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவின் சார்பில் அதனுடைய தலைவர் கழக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர் செல்வம் விரைவில் தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களுக்கும் சுற்றுப்பயணம் செல்ல இருக்கிறார் என்பதையும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறோம். 

மூன்றாவதாக எந்த கட்சியுடனும் கூட்டணி என்பது இன்றைய நிலையில் இல்லை. எதிர்காலத்தில் நிலைமைகளுக்கேற்ப கூட்டணியை முடிவு செய்யவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஆகவே தேசிய ஜனநாயகக் கூட்டணியிலே இருந்த உறவு முறிக்கப்பட்டுள்ளது. ஒருங்கிணைப்பாளர் ஒ. பன்னீர்செல்வம் விரைவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கிறார். எந்த கட்சியுடன் எதிர்காலத்தில் கூட்டணி என்பதை இன்னும் சிறிது காலம் கழித்து அரசியல் நிலவரம் குறித்து ஆராய்ந்து முடிவெடுக்கப்படும்” எனத் தெரிவித்தார்.