எம்.ஜி.ஆர். தொடங்கிய அ.தி.மு.க.வை அவரது மறைவுக்கு பிறகு மிகவும் வலுவான இயக்கமாக மாற்றி காட்டியவர் ஜெயலலிதா. அவரது 72-வது பிறந்த நாள் விழா பிப்ரவரி 24ஆம் தேதியான இன்று கொண்டாடப்பட்டது. இந்த விழாவை தமிழகம் முழுவதும் சிறப்பாக நலத் திட்ட உதவிகளை வழங்கி அ.தி.மு.க.வினர் கொண்டாடினார்கள். வரும் காலத்தில் அ.தி.மு.க.வுக்கு வெற்றியை தேடித்தரும் வகையில் செயல்படுவோம் என்று அ.தி.மு.க.வினர் உறுதி மொழியும் எடுத்துக் கொண்டனர்.

Advertisment

OPS - EPS

சென்னை ராயப்பேட்டை அதிமுக அலுவலகத்தில் ஜெயலலிதா சிலைக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். முன்னதாக எடப்பாடி பழனிசாமி அவரது இல்லத்தில் வைக்கப்பட்டிருந்த ஜெயலலிதா திருவுருப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

Advertisment

கடந்த சில நாட்களுக்கு முன்பு ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் அனைத்து மாவட்ட நிர்வாகிகளுடன் ஆலோசனை கூட்டத்தை ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகியோர் நடத்தினர். கட்சியின் மாவட்ட செயலாளர்கள், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மற்றும் முன்னணி நிர்வாகிகள் பங்கேற்ற இந்த கூட்டத்தில் கட்சியின் வளர்ச்சி பணி பற்றியும், நடைபெற உள்ள தேர்தலை எதிர் கொள்வது பற்றியும் ஆலோசிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் இருவரும் கூட்டாக வெளியிட்ட அறிக்கையில், “அனைவரும் ஒன்றிணைந்து வருகிற தேர்தல்களில் வெற்றியை ஈட்ட வேண்டும் என்றும் கட்சி நிர்வாகிகள் வழங்கிய ஆலோசனைகள் விரைவில் செயல்படுத்தப்படும்” என்றும் தெரிவித்தனர்.

Advertisment

சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் ஒரு வருடமே இருக்கும் நிலையில் அதனை எதிர்கொள்ள இப்போதே தயாராக வேண்டும் என்றும் கட்சி நிர்வாகிகள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இதற்காக கட்சியினரை ஊக்கப்படுத்துவதற்காக விரைவில் எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்ய திட்டமிட்டுள்ளனர்.

இந்த பயணத்தின்போது அனைத்து மாவட்டங்களிலும் கட்சியின் மேல்மட்ட நிர்வாகிகளில் இருந்து அடிமட்ட தொண்டர்கள் வரை அனைவரது கருத்துக் களையும் கேட்பதற்கு முடிவு செய்துள்ளனர். வருகிற சட்டமன்ற தேர்தலில் ஜெயலலிதா, எம்.ஜி.ஆர். ஆகியோரை முன் நிறுத்தியே பிரசாரம் மேற்கொள்ள எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர் செல்வமும் முடிவு செய்து இருக்கிறார்கள்.