nn

கர்நாடக மாநிலம் பெங்களூரில் உள்ள ஒயிட்ஃபீல்ட் 80 அடி சாலை என்ற இடத்தில் ராமேஸ்வரம் கபே என்ற பிரபல உணவகத்தில் நேற்று பிற்பகல் 01.05 மணியளவில் திடீரென யாரும் எதிர்பாராத வேளையில் மர்மப் பொருள் வெடித்தது பரபரப்பை ஏற்படுத்தியது. இதனால் உணவகத்தில் தீ மளமளவெனப் பரவி பலர் படுகாயம் அடைந்தனர். இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புப் படையினர் சிக்கியவர்களை மீட்டனர். இந்த வெடி விபத்தில் மொத்தம் 10 பேர் படுகாயமடைந்தனர் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

Advertisment

முதற்கட்ட விசாரணையில், இது சிலிண்டர் வெடிப்பு இல்லை என்பதும் உறுதி செய்யப்பட்டது. அதே சமயம் வெடி விபத்து நிகழ்ந்த இடத்தில், தடயவியல் நிபுணர்கள் குழு தடயங்களைச் சேகரித்து ஆய்வு நடத்தினர். பின்னர் அது திட்டமிடப்பட்ட குண்டு வெடிப்பு என்பது உறுதி செய்யப்பட்டது.

Advertisment

இந்த சம்பவம் குறித்து கர்நாடக மாநில முதல்வர் சித்தராமையா கூறுகையில், “ஓட்டலில் வெடித்தது வெடிகுண்டு தான். இது மிக வீரியம் கொண்ட ஐ.ஈ.டி. வெடிகுண்டு என்று போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஓட்டலில் இருந்த சிசிடிவி காட்சிகளை போலீசார் தொடர்ந்து ஆய்வு செய்து வருகின்றனர். ஓட்டலில் யாரோ ஒருவர் பையை வைத்துவிட்டு சென்றது தெரியவந்துள்ளது. இந்த சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகள் தண்டிக்கப்படுவார்கள்''என்றார்.

One arrested on the basis of CCTV; Bengaluru under tension

இந்த சம்பவத்தை தொடர்ந்து சுமார் 3 கிலோமீட்டர் தூரத்திற்கு உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை போலீசார் கைப்பற்றி தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த குண்டுவெடிப்பு சம்பவத்திற்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்காத நிலையில், இந்த சம்பவத்தின் பின்னணியில் இருக்கும் நபர்கள் யார் என்பது குறித்து தேசிய புலனாய்வு முகமை, தீவிர விசாரணையை முன்னெடுத்துள்ளது.

Advertisment

இந்தச் சம்பவம் பெங்களூர் நகரத்தையே பரபரப்பில் ஆழ்த்தி இருக்கும் நிலையில், ராமேஸ்வரம் கஃபே சுற்றுவட்டாரப் பகுதிகளில் பல முக்கிய இடங்களிலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட ராமேஸ்வரம் கஃபே ஹோட்டலுக்கு மர்ம நபர் ஒருவர் வருவதும், பையை வைத்துவிட்டு வெளியே செல்வது தொடர்பான சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. அந்த காட்சிகள் அடிப்படையில் ஒருவரை சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்து தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த நபர் எந்த பகுதியில் சென்றாரோ அந்த பகுதியில் உள்ள இடங்களில் வெடிகுண்டு நிபுணர்கள் தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றனர். சந்தேகப்படும் நபரின் புகைப்படம் மற்றும் சிசிடிவி காட்சிகள் ஆகியவையும் வெளியிடப்பட்டுள்ளது.