Skip to main content

நோ சீட்... கல்தா கொடுக்க இ.பி.எஸ். திட்டம்... தினகரன் ஹேப்பி...

Published on 03/03/2021 | Edited on 03/03/2021

 

ddd

 

2021 சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ள அதிமுகவின் முதலமைச்சர் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமி தீவிரப் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். தேர்தலில் போட்டியிட விரும்புவோர் விருப்ப மனு அளிக்கலாம் எனக் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளரும் முதலமைச்சர் வேட்பாளருமான எடப்பாடி பழனிசாமியும் அறிவிப்பு வெளியிட்டனர்.

 

இதையடுத்து அதிமுகவினர் சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சித் தலைமை அலுவலகத்தில் விருப்ப மனுக்களை அளித்தனர். தற்போதுள்ள அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், மாவட்டச் செயலாளர்கள் உள்பட கட்சியில் பல பொறுப்புகளில் உள்ள பலரும் விருப்ப மனு அளித்துள்ளனர்.

 

இந்தநிலையில் விருப்ப மனு அளித்தவர்களிடம் நேர்காணல் நடைபெற உள்ளது. இந்த நேர்காணல் முடிந்து வேட்பாளர் பட்டியல் தயாரிக்கப்படும் என்று கூறப்படுகிறது. ஆனால் ஏற்கனவே வேட்பாளர் பட்டியலை எடப்பாடி பழனிசாமி தயாரித்துவிட்டதாகவும், இந்த நேர்காணல் என்பது விருப்ப மனு பெற்றதற்காக வைக்கப்படும் கண்துடைப்பு என்றும் அதிமுகவில் மேலிடத் தொடர்பில் உள்ள சிலர் கூறுகின்றனர். 

 

ddd

 

மேலும், தற்போதுள்ள அமைச்சர்களில் 10 பேருக்கும், 40 எம்எல்ஏக்களுக்கும் சீட் கொடுக்கப்போவதில்லை என்றும், அவர்கள் பெயர்கள் அந்தப் பட்டியலில் இல்லை என்றும் ஏற்கனவே வேட்பாளர்கள் குறித்து தொகுதியில் சாதகப் பாதகங்களை உளவுத்துறை மூலம் தெரிந்ததை அடுத்துத்தான் அந்த 10 அமைச்சர்களுக்கும், 40 எம்எல்ஏக்களுக்கும் சீட் தரக்கூடாது என்ற முடிவுக்கு வந்ததாகவும் கூறுகின்றனர். 

 

இதனிடையே அமமுக பொதுச்செயலாளர் தினகரனும் விருப்ப மனு பெற்று வருகிறார். அதிமுகவை மீட்கும் முயற்சியில் தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்எல்ஏக்களுக்கு முதலில் வாய்ப்பு கொடுத்துவிட்டு, பின்னர் மற்ற தொகுதிகளுக்கு வேட்பாளர்கள் தேர்வு நடத்த அவர் திட்டமிட்டுள்ளாராம். இந்தநிலையில் அமைச்சர்கள், எம்எல்ஏக்களுக்கு சீட் இல்லை என்றதும், அவர்கள் அதிமுகவை விட்டு வெளியேறலாம் என்பதால், அவர்களை தங்கள் அணிக்கு அழைத்து வாய்ப்பு கொடுத்து அதிமுகவுக்கு நெருக்கடி கொடுக்கவும் திட்டமிட்டுள்ளாராம் தினகரன்.

 

ஆகையால் அதிமுகவின் வேட்பாளர் பட்டியல் எப்போது வெளியாகும் என்று அதிமுகவினர் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர். பட்டியலில் தங்கள் பெயர்கள் இல்லை என்றால் பெரிய பூகம்பமே கட்சியில் வெடிக்கும் என்கின்றனர். அப்போது கட்சியில் இருந்து சிலர் எதிரணிக்கோ அல்லது அமமுகவுக்கோ செல்வார்கள் என்றும் கூறுகின்றனர். 

 

 

 

சார்ந்த செய்திகள்