Skip to main content

‘அரசியல் சேனை உருவாக்கிய’ நித்தியானந்தா. ரஞ்சிதாவுக்கு என்ன பதவி ?.

poster nithi

 

கர்நாடகா மாநிலம் பிடதியை தலைமையிடமாக கொண்டு ஆஸ்ரமம் நடத்திவரும் தமிழகத்தை சேர்ந்த நித்தியானந்தா, தான் ஒரு பிரமச்சாரி என சொல்லிக்கொண்டு சாமியாராக வலம் வந்துக்கொண்டு இருந்தார். சில ஆண்டுகளுக்கு முன்பு நடிகை ரஞ்சிதாவுடன், கட்டிலில் சல்லாபத்தில் ஈடுப்பட்ட ரகசிய வீடியோ வெளியாகி தமிழகத்தில் பெரும் பரபரப்பானது. தமிழகத்தில் நித்தியானந்தாவின் ஆஸ்ரமங்கள் அடித்து நொறுக்கப்பட்டன. அந்த வீடியோ பொய் என நித்தியானந்தா சொன்னார். அந்த வீடியோவை ரகசிய கேமரா வழியாக நித்தியானந்தாவிடம் சீடராக இருந்த லெனின்கருப்பன் எடுத்தார் என தெரியவர அவர் மீது காவல்துறையில் புகார் சொன்னது நித்தியானந்தா தரப்பு. நித்தியானந்தாவின் பெண் சீடர் ஆர்த்தியும் தன்னை பாலியல் ரீதியாக துன்புறுத்தினார் என புகார் தந்தார். இப்படி அதன்பின் பல அடுக்கடுக்கான புகார்கள் நித்தியானந்தா மீது அவரது சிஷ்யர்களே சுமத்தினர்.

தேசிய அளவில் உள்ள இந்துத்துவா அமைப்புகளின் தலைவர்களின் ஆதரவுடன் பெரும் நடவடிக்கைகள் அரசாங்கங்கள் எடுக்க முடியாதபடிக்கு தன்னை தற்காத்துக்கொண்டார்.. இருந்தும் புகார், வழக்கு, நீதிமன்றம் என அலையும் நித்தியானந்தா, மதுரை ஆதினமாக முயன்றார். மதுரையின் பல அமைப்புகள் விரட்டியடித்தனர். அதன்பின் தான் பிறந்து வளர்ந்த திருவண்ணாமலையில் கிரிவலப்பாதையில் உள்ள ஆஸ்ரமத்தில் தங்க வந்தார். அவரை பெரியார் இயக்கங்கள், சிபிஎம் மற்ற இயங்கள் இணைந்து கறுப்புக்கொடி காட்டி விரட்டியடித்தது. இதில் ஆத்திரம் கொண்ட நித்தியானந்தா, அவர் சாதியை சேர்ந்த திருவண்ணாமலையில் திமுக, அதிமுகவில் பிரபலமாகவுள்ளவர்களிடம் முறையிட வெளிப்படையா எங்களால் உங்களை ஆதரிக்க முடியாது, ஆனால் மறைமுகமா தேவையானதை செய்து தருகிறோம் என்றனர். அதன்படி இப்போது வரை சாதி ரீதியாக உதவிகள் செய்து தருகின்றனர்.

 

 

இதற்கிடையே திருவண்ணாமலை பவழக்குன்று என்கிற மலையை நித்தியானந்தா தரப்பு ஆக்ரமித்து கட்டிடம் கட்ட முயல்கிறது. இதனை அப்பகுதி மக்களும், சிபிம் இணைந்து போராட்டங்கள் நடத்தி தடுத்து நிறுத்திவருகிறது. தற்போது மீண்டும் அங்கு கட்டிடம் கட்ட கொட்டகை போட சிபிஎம் அதிகாரிகள் மூலம் அதனை தடுத்து நிறுத்தியது. இதில் கோபமான நித்தியானந்தா தன் சிஷ்யகோடிகள் மூலமாக, எங்களை தாக்கினார்கள், மிரட்டுகிறார்கள் என சிபிஎம் நிர்வாகிகள் மீது புகார் தந்தனர். அதோடு, சமூகவளைத்தளங்களில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் மற்றும் கலைஞர்கள் சங்கத்தை சேர்ந்த மாநில துணைப்பொதுச்செயலாளரும், திருவண்ணாமலை பிரமுகருமான கறுப்புகருணா, வெண்புறாசரவணன் போன்றோரையும், அவர்களது குடும்பத்தாரையும் மிக மோசமான முறையில் கொச்சையாக பேசி வீடியோக்களை வெளியிட்டனர். இது திருவண்ணாமலையில் எதிர்ப்பளைகளை உருவாக்கி போராட்டம், கண்டன பொதுக்கூட்டம் நடைபெற்றது.

 

 

nithi and police


இவைகளை பார்த்து கோபமான நித்தியானந்தா, திருவண்ணாமலையில் தனக்கென நிரந்தரமாக ஆதரவாளர்கள் வட்டாரத்தை உருவாக்க செய்தார். திருவண்ணாமலையில் தற்போது பிரபலமாகவுள்ள சில தன்னார்வ இயக்கங்களுக்கு திமுக பிரமுகர் ஒருவர் மூலமாக நிதியுதவி தருகிறார். அந்த இளைஞர்களும் மறைமுகமாக நித்தியானந்தாவை ஆதரிக்கிறார்கள் என்கிற கருத்து உலாவருகிறது. இரண்டு மாதத்துக்கு முன்பு கலைஞர், கனிமொழி போன்றவர்களை மிக கொச்சையான முறையில் விமர்சித்து பெண் குழந்தைகளை வைத்து வீடியோ எடுத்து வெளியிட்டனர் நித்தியானந்தா சிஷ்யர்கள். இதற்கு அவரது சொந்த ஊரான திருவண்ணாமலை மட்டும்மல்லாமல் தமிழகத்தில் மிக கடுமையான எதிர்ப்புகள் கிளம்பின. அப்போது அவர் நிதியுதவி செய்த அமைப்புகள் நித்தியானந்தாவுக்கு ஆதரவு நிலை எடுக்கவில்லை.

இந்நிலையில் எதிர்ப்புகளை சமாளிக்க தனக்கென ஒரு அரசியல் அமைப்பு இருக்க வேண்டும்மென விரும்பினார் நித்தியானந்தா. திருவண்ணாமலையை சேர்ந்த சில இளைஞர்களை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து அவர்கள் மூலமாக நித்தியானந்தாவுக்கு ஆதரவாக போஸ்டர் போடும் பணியை செய்தார். அந்த குழுவை வைத்து, தற்போது நித்தியானந்தா அரசியல் சேனை ஆன்மீக அரசியல் அமைப்பை துவங்கியுள்ளார். புரட்சி செய்வோம், புதிய சரித்திரம் படைப்போம், இளைஞர்களே இணைவீர் என உறுப்பினர் சேர்க்கைக்காக போஸ்டர் அடித்து திருவண்ணாமலை நகரம் முழுவதும் ஒட்டியுள்ளனர். இந்த அமைப்பின் மாநில தலைவராக சிவா என்பவரும், மாநில பொது செயலாளராக செந்தில், மாநில துணை பொதுச்செயலாளராக ஆரணிபிரபு என போஸ்டரில் படம் போட்டுள்ளனர்.
 

ranjitha


இந்த அமைப்புக்கு முழுக்க முழுக்க நிதியுதவி செய்வது நித்தியானந்தா அறக்கட்டளை தான். தன்னை யாராவது எதிர்த்தால் அவர்களுக்கு இனி இந்த அமைப்பின் மூலமாக பதிலடி கொடுக்க திட்டமிட்டுள்ளார் நித்தியானந்தா. அதோடு, உள்ளாட்சி மன்றம் சட்டமன்ற தேர்தல் நேரத்தில் சில தொகுதிகளில் வேட்பாளர்களை நிறுத்தவும் திட்டமிட்டுள்ளார் என்கிறார்கள் உள் விவகாரத்தை அறிந்தவர்கள். இதற்காக தமிழகம் முழுவதும் ஆட்களை திரட்ட சொல்லியுள்ளாராம். வரும் நாடாளமன்ற தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவாக தனது பெயரிலான சேனையை களத்தில் இறக்கவுள்ளார் என்கிறார்கள்.

கட்சி ஆரம்பிச்சவர், ரஞ்சிதாவுக்கு என்ன பதவின்னு சொல்லவேயில்லையே என சிரித்தவர், தமிழகத்துக்கு வந்த சோதனையை பாரும்…….. தமிழக மக்களை நினைத்தால் தான் பாவமாக இருக்கிறது என்றார் இந்த திருவண்ணாமலை தாலுக்கா அலுவலக வாசலில் ஓட்டப்பட்டுயிருந்த போஸ்டரை பார்த்து படித்த ஒரு பெரியவர்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்
Loading...