Skip to main content

மிருகத்தனமாக தாக்கிய போலீசார் யார் யார்? ஏன் இன்றுவரை கைது செய்யப்படவில்லை? மு.க.ஸ்டாலின் கேள்வி

Published on 07/11/2020 | Edited on 07/11/2020
mkstalin

 

 

கடலூர் மாவட்டம் காடாம்புலியூர் செல்வமுருகன் ஏன் மிருகத்தனமாக தாக்கப்பட்டார்? அப்படித் தாக்கிய போலீசார் யார் யார்? இந்த மரணத்திற்குக் காரணமானவர்கள் ஏன் இன்றுவரை கைது செய்யப்படவில்லை? என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

 

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடலூர் மாவட்டம், பண்ருட்டி வட்டத்தில் உள்ள காடாம்புலியூரைச் சேர்ந்த செல்வமுருகன் என்பவர், நெய்வேலி நகரக் காவல் நிலையப் போலீசாரின் சித்ரவதைக்குப் பலியாகியிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. சாத்தான்குளம்  காவல் நிலைய இரட்டைக் கொலைக்குப் பிறகு - உயர்நீதிமன்றமே எச்சரித்தும் - தமிழகக் காவல் துறைத் தலைவர் “கைது நடவடிக்கைகள்” குறித்து சுற்றறிக்கை அனுப்பியும் - இதுபோன்ற போலீஸ் ‘டார்ச்சரும்’ , அதனால் ‘கஸ்டடி’ மரணங்களும் தொடருவது கடும் கண்டனத்திற்குரியது.

 


அ.தி.மு.க. ஆட்சியில் தமிழகக் காவல்துறை சரியான வழிகாட்டுதல்கள் இல்லாமல் தடுமாறுகிறது என்பதற்கு ஆதாரங்களாக ஒரு சில காவல் நிலையங்களில் இதுபோன்று நடக்கும் சம்பவங்கள் வேதனையளிக்கிறது. கடலூர் செல்வமுருகன் மரணத்தைப் பொறுத்தமட்டில், “உன் கணவர் மீது, ஸ்டேஷனில் உள்ள திருட்டு வழக்குகளை எல்லாம் போட்டு விடுவோம்” என்று எச்சரிக்கப்பட்டதும் - “கணவனைக் காணவில்லை” என்று மனைவி பிரேமா கொடுத்த புகாரை வாங்காமல் வடலூர், நெய்வேலி நகரக் காவல் நிலையங்களில் உள்ள போலீசார் இதயமற்ற முறையில் அலைக்கழித்ததும் - மனித நேயத்தையும், மனித உரிமைகளையும் மீறும் செயல்களாகும்.

 


ஒருவர் புகார் கொடுத்தால் - காவல் நிலைய எல்லை குறித்துக் கவலைப்படாமல் - அப்புகாரினைப் பெற்று, சம்பந்தப்பட்ட காவல் நிலையத்திற்கு அனுப்ப வேண்டும் என்று நீதிமன்றங்கள் பலமுறை  எச்சரித்தும் - ஒரு சில காவல் நிலையங்களில் உள்ள போலீசார் இதைக் கடைப்பிடிப்பதில்லை என்பது அ.தி.மு.க. ஆட்சியில் காவல்துறைக்குள் புகுந்து விட்ட  “கருப்பு ஆடுகளின் ஆதிக்கத்தை” வெளிப்படுத்துகிறது!

 


கடலூர் செல்வமுருகன் வழக்கு தற்போது சி.பி.சி.ஐ.டி விசாரணைக்கு மாற்றப்பட்டிருக்கிறது. அவரை காவல் நிலையத்திற்கு அழைத்து வந்தது உண்மையான வழக்கிற்காகவா? அல்லது சாத்தான்குளம் காவல் நிலையம் போல் பொய்ப் புகாரிலா? விசாரணைக்கு அழைத்து வரப்பட்ட செல்வமுருகன் ஏன் மிருகத்தனமாக தாக்கப்பட்டார்? அப்படித் தாக்கிய போலீசார் யார் யார்? சட்டத்திற்கும், மனித உரிமைகளுக்கும் எதிராக செல்வமுருகனின் உயிர் போகும் அளவிற்குக் கொடுமையாகச் சித்ரவதைக்கு உள்ளாக்கி, இந்த மரணத்திற்குக் காரணமானவர்கள் ஏன் இன்றுவரை கைது செய்யப்படவில்லை?

 


போலீஸ் கஸ்டடியில் மரணம் என்பதை மறைக்க - காயங்களுடன் சிறைச்சாலையில் செல்வமுருகன் அடைக்கப்பட்டது எப்படி? - அதற்கு உடந்தையாக இருந்தவர்கள் யார் யார்? என்பது குறித்து எல்லாம் தீவிரமாக விசாரித்து, அவற்றுக்குக் காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முதலமைச்சர் திரு. பழனிசாமியைக் கேட்டுக் கொள்கிறேன்.

 


அ.தி.மு.க. ஆட்சியில் போலீஸ் நிலையங்களில் நடக்கும் “கஸ்டடி மரணங்களை” வழக்கம் போல் மறைத்து - தமிழகக் காவல்துறையின் எஞ்சியிருக்கின்ற பெருமையையும் சீர்குலைத்து விட வேண்டாம் என்றும்  முதலமைச்சர் பழனிசாமியை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு கூறியுள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“ரூ.4 கோடிக்கும் எனக்கும் சம்பந்தம் இல்லை” - நயினார் நாகேந்திரன்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
I have nothing to do with Rs. 4 crore Nayanar Nagendran

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து திருநெல்வேலிக்கு செல்லும் ரயிலில் தாம்பரம் ரயில் நிலையத்தில் கடந்த 6 ஆம் தேதி (06.04.2024) இரவு உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்ல முயன்றதாக சுமார் ரூ. 4 கோடி மதிப்பிலான ரொக்கம் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டது. இதனையடுத்து இந்தப் பணத்தை எடுத்து வந்த புரசைவாக்கம் தனியார் விடுதி மேலாளரும் பாஜக உறுப்பினருமான சதீஷ், அவரின் சகோதரர் நவீன் மற்றும் லாரி ஓட்டுநர் பெருமாள் ஆகிய 3 பேரும் கைது செய்யப்பட்டனர். அப்போது திருநெல்வேலி மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு, இந்த பணத்தைக் கொண்டு செல்ல முயன்றதாக மூவரும் வாக்குமூலம் கொடுத்ததாகத் தகவல் வெளியாகி இருந்தது.

இந்தச் சம்பவம் தொடர்பாக நயினார் நாகேந்திரன் ஆஜராகி பதிலளிக்கும்படி காவல்துறை தரப்பில் சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. ஆனால் நயினார் நாகேந்திரன் விசாரணைக்கு ஆஜராகாத நிலையில் விசாரணைக்கு ஆஜராக பத்து நாட்கள் அவகாசம் வேண்டும் என நயினார் நாகேந்திரன் தரப்பில் காவல்துறைக்கு பதில் கடிதம் கொடுக்கப்பட்டிருந்தது. அதேசமயம் இந்த பணத்தை நயினார் நாகேந்திரன் உறவினர் முருகன், இவரின் நண்பர்களான ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் ஆகிய 3 மூவரும் கொடுத்து அனுப்பியதாக தெரிவித்திருந்தனர். இதனடிப்படையில் போலீசார் முருகன், ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் ஆகியோருக்கு சம்மன் அனுப்பி இருந்தனர். இதனையடுத்து இவர்கள் நேற்று முன்தினம் (23.04.2024) தாம்பரம் காவல் நிலையத்தில் நேரில் ஆஜராகி இருந்தனர்.

அப்போது நயினார் நாகேந்திரன் உறவினர் முருகன் காவல்துறையில் அளித்த வாக்குமூலத்தில், “தனக்கும் கைப்பற்றப்பட்ட பணத்திற்கும் எவ்வித சம்பந்தம் இல்லை. நயினார் நாகேந்திரன் உதவியாளர் மணிகண்டன் 3 நபர்கள் பணம் கொண்டு வருகிறார்கள். எனவே இவர்களின் பாதுகாப்பிற்காக இருவரை அனுப்ப கேட்டுக்கொண்டதால் தான் தன்னிடம் வேலை பார்க்கும் ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் என இருவரை அனுப்பி வைத்தேன். சென்னையில் 4 ஹோட்டல்களை வாடகைக்கு எடுத்து நடத்தி வருகிறேன். அதில் ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் இருவரும் பணியாற்றி வருகின்றனர்” என தெரிவித்துள்ளார். இந்த வாக்குமூலத்தின் அடிப்படையில் நயினார் நாகேந்திரன், மணிகண்டனுக்கு காவல் துறை சார்பில் சம்மன் அனுப்பப்பட்டதாக தகவல் வெளியாகி இருந்தது.

இந்நிலையில் சென்னை தியாகராயர் நகரில் நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், “இந்த விவகாரத்தில் முழுக்க முழுக்க என்னை டார்கெட் செய்கின்றனர். இது ஒரு அரசியல் சூழ்ச்சி ஆகும். ரூ.4 கோடியை எங்கேயோ பிடித்துவிட்டு என் பெயரையும் சேர்த்து பயன்படுத்துகின்றனர். தமிழகத்தில் சுமார் 200 கோடிக்கும் மேல் பணம் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் ரூ. 4 கோடி பறிமுதல் செய்யப்பட்டது குறித்து விசாரிக்கின்றனர். கைப்பற்றப்பட்ட இந்த பணத்திற்கும் எனக்கும் சம்பந்தம் இல்லை. தாம்பரம் காவல் நிலையத்தில் மே 2 ஆம் தேதி விசாரணைக்கு ஆஜராக உள்ளேன்” எனத் தெரிவித்தார். 

Next Story

முதல்வர் ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்ற திண்டுக்கல் தொகுதி வேட்பாளர்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Chief Minister Stalin congratulates Dindigul candidate Sachithanantham

திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதியில் சிபிஎம். கட்சி சார்பாக போட்டியிட்ட வேட்பாளர் சச்சிதானந்தத்தை திமுக மாநில துணைப் பொதுச்செயலாளரும், ஊரக வளர்ச்சித்துறை அமைச்சருமான ஐ.பெரியசாமி, உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி ஆகிய இருவருடன் மாவட்டச் செயலாளரும், பழனி சட்டமன்ற உறுப்பினருமான ஐ.பி செந்தில் குமார் ஆகியோரும் சென்னைக்கு நேரில் அழைத்து சென்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் வாழ்த்து பெற வைத்தனர்.

அப்போது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழகத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறப் போகிறீர்கள் என்ற செய்தி கேட்டு மகிழ்ச்சி அடைந்தேன் எனக் கூறியதோடு எவ்வளவு வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவீர்கள் எனக் கேட்டபோது சிபிஎம் வேட்பாளர் சச்சிதானந்தம் சுமார் 3 லட்சம் வாக்குகள் வித்தியசாத்தில் வெற்றி பெறுவேன் எனக்கூறினார். அப்போது உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி, இல்லை 4 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் சிபிஎம் வேட்பாளர் வெற்றி பெறுவார் எனக் கூறினார்.   

அப்போது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் ஐ.பெரியசாமியை பார்த்து நீங்கள் 5 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் என கூறுகிறீர்களா? எனக் கேட்டவுடன் அனைவரும் மகிழ்ச்சி அடைந்தனர். அப்போது பேசிய ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர், உங்களின் வழிகாட்டுதலின் படி திண்டுக்கல் தொகுதியில் தேர்தல் பிரச்சாரம் செய்தோம். தமிழக அரசின் நலத்திட்டங்களை பாராட்டி திண்டுக்கல் தொகுதியில் உள்ள வாக்காளர்கள் திமுக தலைமையிலான கூட்டணிக்கு அமோகமான வாக்குகளை அளித்துள்ளனர் என்றார். இந்த சந்திப்பின் போது  அமைச்சர் துரைமுருகன், அமைச்சர்  ஐ.பெரியசாமி,  அமைச்சர் சக்கரபாணி,  எம்.எல்.ஏ., ஐ.பி.செ ந்தில்குமார், ஆத்தூர் தொகுதி தேர்தல் பொறுப்பாளர் கள்ளிப்பட்டி மணி, சிபிஎம்.வேட்பாளர் சச்சிதானந்தம் ஆகியோர் உடன் இருந்தனர்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தது குறித்து திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதி சச்சிதானந்தம் கூறுகையில், “திமுக சார்பாக போட்டியிட்ட வேட்பாளர்களின் வெற்றிகளை தெரிந்து கொள்ள எவ்வளவு ஆர்வம் காட்டினாரோ அந்த அளவிற்கு கூட்டணி கட்சி சார்பாக (சிபிஎம்) போட்டியிட்ட எனது வெற்றி குறித்தும் தமிழக முதல்வர் ஆர்வமுடன் கேட்டதும், தொடர்ந்து மக்கள் பணியை சிறப்பாக செய்யுங்கள் என வாழ்த்தியதும் எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நேரத்தில் எனது வெற்றிக்கு அயராது உழைத்த அமைச்சர் ஐ.பெரியசாமிக்கும், அமைச்சர் சக்கரபாணிக்கும், திண்டுக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் ஐ.பி. செந்தில்குமாருக்கும் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகளுக்கும் என்றும் நான் உறுதுணையாக இருப்பேன்” என்று கூறினார்