New low pressure area Met Dept informs

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த அக்டோபர் மாதம் 15ஆம் தேதி (15.10.2024) தொடங்கியதாக வானிலை ஆய்வு மையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தது. இதன் காரணமாகத் தமிழகம் முழுவதும் பரவலாகக் கனமழை பெய்து வருகிறது. அதே சமயம் மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவி வந்த ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி, குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக வலுவிழந்துள்ளது. இது அடுத்த 24 மணி நேரத்தில் அதாவது நாளை (14.12.2024) காலை 9 மணியளவில் மேற்கு வட மேற்கு திசையில் குமரிக்கடல் வழியே மாலத்தீவு மற்றும் அதனை ஒட்டிய லட்சத்தீவு பகுதிகளை நோக்கி நகர்ந்து மேலும் வலுவிழக்கக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

Advertisment

இதற்கிடையே தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக திருநெல்வேலி மாவட்டம் ஊத்தில் 50 செ.மீ. அதி கனமழை பதிவாகியுள்ளது. மேலும் அரியலூர் மாவட்டம் ஆண்டிமடத்தில் 38 செ.மீ. மழையும், கடலூர் மாவட்டம் கில்லிமங்கலத்தில் 37 செ.மீ. மழையும் பதிவாகியுள்ளது. தென்காசி மாவட்டம் ஆலங்குளம், அரியலூர் மாவட்டம் மின்சுருட்டி, கடலூர் மாவட்டம் லால்பேட்டையில் 30 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. இத்தகைய சூழலில் தான் தென்காசி மாவட்டம் செங்கோட்டையில் கனமழையால் குளங்கள் நிரம்பியுள்ளன. இதனால் மழை வெள்ளம் சாலையில் பெருக்கெடுத்து ஓடுகிறது. இந்த வெள்ளத்தால் செங்கோட்டை பகுதியில் உள்ள தமிழகம் - கேரளா செல்லும் சாலை போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால் சாலையில் ஆங்காங்கே வாகனங்கள் நிறுத்தப்பட்டுள்ளன. போக்குவரத்து துண்டிக்கப்பட்டதால் சபரிமலை செல்லும் பக்தர்கள் செய்வதறியாது தவித்து வருகின்றனர்.

Advertisment

திருநெல்வேலி மாவட்டம் மாஞ்சோலை செல்லும் சாலையில் மண் சரிவு ஏற்பட்டுள்ளது. ராட்சத பாறைகள் சாலையில் விழுந்து சேதம் ஏற்பட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. திருநெல்வேலி டவுன் அருகே உள்ள காட்சி மண்டபம் சாலை முழுவதும் மழை நீரில் மூழ்கியுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் கனமழை காரணமாக குளம், கண்மாய்கள் நிரம்பி நிரம்பியுள்ளனது. இதனால் சாலைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மேலும் வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்துள்ளன. இதன் காரணமாக மக்கள் தவித்து வருகின்றனர். இந்நிலையில் தெற்கு அந்தமானை ஒட்டியுள்ள பகுதிகளில் நாளை (14.12.2024) மேலடுக்கு சுழற்சி உருவாகிறது. வங்கக்கடலில் 48 மணி நேரத்தில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் இவ்வாறு உருவாகும் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி தமிழகம் நோக்கி நகரும் எனவும் வானிலை மையம் கணித்துள்ளது.