/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/upin.jpg)
இந்தியாவில் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை முறையானது தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. பெட்டிக் கடை தொடங்கி, செல்போன் ரீசார்ஜ், மின்கட்டணம்,வீட்டு வாடகை என பலவற்றுக்கும் ஆன்லைன் மூலமே மக்கள் பணம் செலுத்தி வருகின்றனர். கூகுள் பே, போன் பே, பேடிஎம் போன்ற பல்வேறு யுபிஐ செயலிகள் மூலம் பணம் செலுத்துபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றன.
இந்த நிலையில், யுபிஐ பணப் பரிவர்த்தனைகளின் நேரத்தை குறைத்து, பயனரின் அனுபவத்தை மேம்படுத்தும் விதமாக புதிய விதிகள் இன்று (17-06-25) அமல்படுத்தப்பட்டுள்ளது. முன்னதாக யுபிஐ செயலி மூலம் பணம் அனுப்பவோ பெறவோ 30 வினாடிகள் வரை எடுத்துக்கொள்ளும் ஆனால், புதிய விதிகளின்படி, இது 15 வினாடிகளாகக் குறைக்கப்பட்டுள்ளது. அதே போல், பணம் பெறுபவரின் முகவரியைச் சரிபார்க்கும் நேரமும் 15 வினாடியில் இருந்து 10 வினாடிகளாக புதிய விதிகள் மூலம் குறைக்கப்பட்டுள்ளது.
இந்த புதிய விதிகள் மூலம், பரிவர்த்தனை தோல்வியடைந்துள்ளதா (Failed Transaction), பணம் கழிக்கப்பட்டதா (Money Deduct) அல்லது பணம் திருப்பி அனுப்பப்பட்டதா (Transaction Reversal) ஆகியவற்றைச்சரிபார்க்க எடுத்துக்கொள்ளும் நேரமும் 30 வினாடியில் இருந்து 10 நொடிகளாகக் குறைக்கப்பட்டுள்ளது. மற்றொரு முக்கிய மாற்றமாக, பயனர்கள் இன்று முதல் யுபிஐ மூலம் ஒரு நாளைக்கு 50 முறை வரை மட்டுமே தங்கள் கணக்கு இருப்பைச் சரிபார்க்க முடியும். முன்பு, எந்த வரம்பும் இல்லாமல் இருந்தது, அதனை தற்போது மாற்றம் செய்யப்பட்டுள்ளது. நெட்வொர்க் சுமையைக் குறைப்பதற்கும், அமைப்புகள் சீராக இயங்குவதற்கும் இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த மாற்றங்கள் போன்பே (PhonePe), கூகுள் பே (Google Pay), பேடிஎம் (Paytm) போன்ற பிற பிரபலமான யுபிஐ தளங்களுக்குப் பொருந்தும்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)