Skip to main content

நீட் தேர்வு விவகாரத்தில் பாமக விரைவில் வழக்கு தொடரும்! ராமதாஸ்

Published on 30/05/2020 | Edited on 30/05/2020
ramadoss




நடப்பாண்டின் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கேட்டுக்கொண்டுள்ளார். மேலும், நீட் தேர்வு விவகாரத்தில் மாணவர்களின் நலன்களை பாதுகாக்கவும், சமூக நீதியை  நிலை நிறுத்துவதற்காகவும் உச்சநீதிமன்றத்தில் பாட்டாளி மக்கள் கட்சி விரைவில் வழக்கு தொடரும் என தெரிவித்துள்ளார்.
 

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ''2020-21 ஆம் ஆண்டு இளநிலை மருத்துவக்கல்வி மாணவர் சேர்க்கைக்கான நீட் தேர்வு ஏற்கனவே அறிவித்தவாறு ஜூலை 26-ஆம் தேதி நடைபெறும் என தெரிவித்துள்ள தேசிய தேர்வு முகமை, அதற்கான ஏற்பாடுகளையும் தொடங்கியிருக்கிறது. கொரோனா பரவல் அச்சம் காரணமாக மாணவர்கள் இப்போது எதிர்கொண்டு வரும் சூழலில் நீட் தேர்வை நடத்துவது குரூரமான கடமை உணர்வாக பார்க்கப்படும்.
 

தமிழ்நாடு உட்பட இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் பரவல் ஒவ்வொரு நாளும் புதிய உச்சத்தை எட்டி வருகிறது. இந்தியாவில் இன்று காலை நிலவரப்படி மொத்தம் 1.74 லட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்; 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். நோயால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கையில் 9-ஆவது இடத்தில் இருக்கும் இந்தியா, அடுத்த இரு நாட்களில் ஜெர்மனியையும், பிரான்சையும் பின்னுக்குத் தள்ளிவிட்டு, இத்தாலிக்கு அடுத்தபடியாக 7-ஆவது இடத்தை பிடித்து விடும். இன்றைய நிலையில் அமெரிக்காவை விட இந்தியாவில் தான் அதிக தொற்றுகள் ஏற்படுகின்றன. புதிய தொற்றுகள் எண்ணிக்கையில் பிரேசில், ரஷ்யா ஆகிய நாடுகளுக்கு அடுத்தபடியாக இந்தியா தான் மூன்றாவது இடத்தில் உள்ளது. அடுத்த சில நாட்களில் இந்த நிலை இன்னும் மோசமாகக்கூடும்.
 

சென்னை போன்ற நகரங்களில் நீட் தேர்வுக்கு விண்ணப்பித்துள்ள ஒவ்வொரு மாணவனின் தெருவிலும் குறைந்தது ஒருவர் அல்லது இருவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மும்பையில் ஒவ்வொரு மாணவனின் அண்டை வீட்டிலும் சராசரியாக ஒருவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பார். தில்லியிலும்  கிட்டத்தட்ட இதே நிலை தான் காணப்படுகிறது. இதுபோன்ற நகரங்களில் வாழும் மாணவர்கள், தங்களையும், தங்கள் குடும்பத்தினரையும் கொரோனா தாக்கிவிடக்கூடாது என்ற அச்சத்திலும், மன உளைச்சலிலும்  வாழ்ந்து கொண்டிருக்கும் நிலையில், அவர்களால் எப்படி நீட் தேர்வை எழுதுவதற்கு தயாராக முடியும்?
 

இந்தியாவில் ஒரு சில மாநிலங்களைத் தவிர மற்ற மாநிலங்களில் இன்னும் 12-ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள் நடத்தி முடிக்கப்படவில்லை. மத்திய இடைநிலை கல்வி வாரிய(சிஙிஷிணி) பாடத்திட்ட பள்ளிகளில்  மார்ச் மாதத்தில் 12-ஆம் வகுப்புத் தேர்வுகள் தொடங்கப்பட்டாலும் கூட, மார்ச் 19 முதல் 31-ஆம் தேதி வரை நடைபெறவிருந்த தேர்வுகள் கொரோனா அச்சம் காரணமாக ஒத்திவைக்கப்பட்டு, ஜூலை ஒன்றாம் தேதி முதல் 15-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளன. தமிழகத்தில் கூட சில பாடங்களுக்கான 12-ஆம் வகுப்பு தேர்வுகளை கொரோனா அச்சம் காரணமாக மாணவர்கள் எழுதாத நிலையில், அப்பாடங்களுக்கான தேர்வு ஜூன் 18-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இவ்வாறாக ஜூலை 15 வரை பொதுத்தேர்வுகளுக்கு  12-ஆம் வகுப்பு மாணவர்கள் தயாராக வேண்டிய சூழலில், அடுத்த 10 நாட்களில் நீட் தேர்வுக்கு மாணவர்களால் தயாராக இயலாது. குறிப்பாக தனிப்பயிற்சி மையங்களில் பயிலாமல், தங்களின் சொந்த முயற்சியில் மட்டுமே பயிலும் மாணவர்களால் நீட் தேர்வுக்கு தயாராவது என்பது சாத்தியமற்றதாகும்.
 

அதுமட்டுமின்றி, நீட் போன்ற தேசிய அளவிலான நுழைவுத் தேர்வுகளை எழுதுவதற்கு பாடங்களை படித்திருப்பது மட்டும் போதாது; மன அமைதியும், மன திடமும் தேவை. கொரோனா அச்சத்தால் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ள மாணவர்களால் அமைதியாகவோ, மனதை ஒருமுகப்படுத்தியோ தேர்வு எழுத முடியாது. இதற்கெல்லாம் மேலாக மாணவர்களின் தகுதியையும், திறமையையும் நீட் தேர்வு துல்லியமாக எடை போடுகிறது என்பது கடந்த 4 ஆண்டுகளில் நிரூபிக்கப்படவில்லை. அதுமட்டுமின்றி,  நீட் தேர்வு நடைமுறைக்கு வந்த பிறகு மருத்துவக் கல்வி வணிகமயமாவதும் தடுக்கப்படவில்லை; தகுதியும், திறமையும் கொண்டவர்கள் பணம் இல்லாததால் மருத்துவக் கல்வியில் இடம் வழங்காமல் புறக்கணிக்கப்படும் அவலமும் மாறவில்லை. இந்த அவலங்களுடன் ஒப்பிடும் போது, 12-ஆம் வகுப்பு  மதிப்பெண்களின் அடிப்படையில் மாணவர் சேர்க்கையை நடத்துவது மருத்துவக் கல்வியின் தரத்தை எந்த வகையிலும் குறைத்து விடாது. எனவே நடப்பாண்டில் மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வை கைவிட்டு, 12-ஆம் வகுப்புத் தேர்வு மதிப்பெண்கள் அடிப்படையில் மாணவர் சேர்க்கையை அரசு நடத்த வேண்டும்.
 

மருத்துவக் கல்வி மாணவர் சேர்க்கைக்கான நீட் தேர்வை நிரந்தரமாக ரத்து செய்ய வேண்டும் என்பது தான் பாட்டாளி மக்கள் கட்சியின் நிலைப்பாடு ஆகும். அதற்கான சட்டப்போராட்டம் நிறைவடைய நீண்ட காலம் ஆகும் என்பதால் தற்காலிகத் தீர்வாகவே இந்த ஆண்டு மட்டும் நீட் தேர்வை மத்திய அரசே ரத்து செய்ய வேண்டும் என்ற யோசனையை முன்வைக்கிறது. அதேநேரத்தில் நீட் தேர்வை நிரந்தரமாக ரத்து செய்ய பாட்டாளி மக்கள் கட்சி தொடர்ந்து சட்டப்போராட்டங்களை முன்னெடுக்கும்.
 

ஒருவகையில் பார்த்தால் நீட் தேர்வை நடத்துவதே தார்மீக நெறிகளுக்கு எதிரானதாகும். 2012-ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட நீட் தேர்வு செல்லாது என்று 18.07.2013 அன்று அப்போதைய உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அல்தாமஸ் கபீர் தலைமையிலான அமர்வு தீர்ப்பளித்தது. அதை எதிர்த்து காங்கிரஸ்- திமுக கூட்டணி அரசு தாக்கல் செய்த சீராய்வு மனுவை விசாரித்த நீதிபதி அனில்தவே தலைமையிலான அரசியல் சட்ட அமர்வு, நீட் தேர்வு செல்லாது என்ற 2013-ம் ஆண்டின் தீர்ப்பை திரும்பப்பெறுவதாக 11.4.2016 அன்று அறிவித்தது. ஆனால், அதற்கான காரணம் எதையும் கூறாமல், நீட் தேர்வுக்கு எதிரான வழக்குகள் மீண்டும் விசாரிக்கப்பட்டு இறுதி முடிவு எடுக்கப்படும் என்று நீதிபதிகள் கூறியிருந்தனர்.
 

அதன்பின் 4 ஆண்டுகள் நிறைவடைந்து விட்ட பிறகும், முதன்மை வழக்கை விசாரிக்காமல், நீட் தேர்வை தொடர்ந்து நடத்துவது நியாயமல்ல. நீட் தேர்வுக்கு எதிரான முதன்மை வழக்கை விரைந்து விசாரித்து, அவ்வழக்கின் தீர்ப்பின் அடிப்படையில் தான் அடுத்தக்கட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும். நீட் தேர்வு விவகாரத்தில் மாணவர்களின் நலன்களை பாதுகாக்கவும், சமூக நீதியை  நிலை நிறுத்துவதற்காகவும் உச்சநீதிமன்றத்தில் பாட்டாளி மக்கள் கட்சி விரைவில் வழக்கு தொடரும்'' என கூறியுள்ளார் ராமதாஸ். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ஓடும் பேருந்தில் இருக்கையுடன் தூக்கி வீசப்பட்ட நடத்துநர்; அன்புமனி கண்டனம்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Anbumani condemns conductor being thrown with his seat in   moving govt bus

ஓடும் பேருந்தில், நடத்துநர் இருக்கையுடன் தூக்கி வீசப்பட்டதற்கு பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “திருச்சி திருவரங்கத்தில் இருந்து கே.கே.நகருக்கு சென்று கொண்டிருந்த அரசு நகரப் பேருந்து, வளைவு ஒன்றில் திரும்பும் போது, நடத்துநர் அமர்ந்திருந்த இருக்கை கழன்று வெளியில் விழுந்துள்ளது. இருக்கையுடன் நடத்துநரும் வெளியில் தூக்கி வீசப் பட்டுள்ளார். நல்வாய்ப்பாக பேருந்துக்கு பின்னால் வேறு வாகனங்கள் வரவில்லை என்பதால், நடத்துனர்  லேசான காயங்களுடன் உயிர்த் தப்பியுள்ளார். காயமடைந்த ஓட்டுநர் விரைவில் நலம் பெற எனது விருப்பங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

சென்னை அமைந்தகரை பகுதியில் கடந்த பிப்ரவரி  6-ஆம்  தேதி  மாநகரப் பேருந்தின் தளம் உடைந்து  ஏற்பட்ட ஓட்டை வழியாக பெண் பயணி ஒருவர் சாலையில் விழுந்து காயமடைந்தார்.  அதனால் ஏற்பட்ட அதிர்ச்சி விலகும் முன்பாகவே  திருச்சியில்  பேருந்தின் இருக்கை கழன்று  நடத்துநர்  தூக்கி வீசப்பட்டுள்ளார்.  பேருந்தின் டயர் தனியாக கழன்று ஓடுவது, பேருந்தின் மேற்கூறை  தனியாக கழன்று காற்றில் பறப்பது போன்ற நிகழ்வுகளும் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. தினமும் 2 கோடி மக்கள் பயணிக்கும் அரசுப் போக்குவரத்துக் கழக பேருந்துகளை  திமுக அரசு எவ்வளவு மோசமாக பராமரிக்கிறது என்பதற்கு இதை விட மோசமான எடுத்துக் காட்டு இருக்க முடியாது.

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகங்களில் உள்ள 20,926 பேருந்துகளில் 1500 பேருந்துகள் 15 ஆண்டுகளுக்கும் மேலாக இயக்கப்பட்டு வருகின்றன என்பதை  தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கரே  ஒப்புக் கொண்டிருக்கிறார்.  15 ஆண்டுகளைக் கடந்த பேருந்துகளை இயக்குவதே சட்ட விரோதம் ஆகும். இதைத் தவிர 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட  பேருந்துகள்  12 ஆண்டுகளுக்கும் மேலாக இயக்கப்பட்டு வருகின்றன.  திமுக  ஆட்சிக்கு வந்த பிறகு விரல் விட்டு எண்ணக் கூடிய அளவில் தான் புதிய பேருந்துகள் வாங்கப்பட்டுள்ளன.

புதிய பேருந்துகள் வாங்கப்படாததால், காலாவதியான பேருந்துகள் அதிக எண்ணிக்கையில் இயக்கப்படுவதும்,   அவற்றை பராமரிப்பதற்கும், உதிரி பாகங்கள் வாங்குவதற்கும் கூட போதிய நிதி ஒதுக்கப்படாததுதான்  இத்தகைய அவல நிலை  ஏற்படுவதற்கு காரணம் ஆகும்.  இத்தகைய அவல நிலைக்கு திமுக தலைமையிலான திராவிட மாடல் அரசுதான் பொறுப்பேற்க வேண்டும்.

அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுக்கான மகிழுந்துகள் அவர்கள் விரும்பும் நேரத்தில் மாற்றப்படுகிறது. முதலமைச்சரின் வாகன அணிவகுப்பில் வரும் மகிழுந்துகள்  கருப்பு வண்ணத்தில் இருக்க வேண்டும் என்பதற்காக, ஏற்கெனவே வாங்கப்பட்டு சில மாதங்கள் மட்டுமே ஆன மகிழுந்துகள்  ஓரங்கட்டப்பட்டு, கோடிக்கணக்கில் செலவு செய்து 6 புதிய மகிழுந்துகள்  வாங்கப்படுகின்றன. ஆனால், பொதுமக்கள் பணம் கொடுத்து பயணம் செய்யும்  பேருந்துகள் மட்டும்  15 ஆண்டுகளைக் கடந்து இயக்கப்படுகின்றன. இது என்ன கொடுமை?

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் உள்ள 6 ஆண்டுகளைக் கடந்த பேருந்துகள் அனைத்தும் உடனடியாக மாற்றப்பட்டு அவற்றிற்கு மாற்றாக புதிய பேருந்துகள் வாங்கி இயக்கப்பட வேண்டும்.  பழைய பேருந்துகளைப் பராமரிக்கவும்,  உதிரி பாகங்கள் வாங்கவும் அரசு போக்குவரத்துக் கழகங்களுக்கு அரசு  போதிய நிதி ஒதுக்கீடு  செய்ய வேண்டும்” என வலியுறுத்தியுள்ளார்.

Next Story

“டிஎன்பிஎஸ்சி குரூப் 2 நேர்முகத் தேர்வு ரத்து வரவேற்கத்தக்கது” - ராமதாஸ்

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
“Cancellation of TNPSC Group 2 Interview is welcome says Ramadoss

டிஎன்பிஎஸ்சி குரூப் 2 நேர்முகத் தேர்வு ரத்து வரவேற்கத்தக்கது என்றும் நிலையான தேர்வு அட்டவணை, கூடுதல் சீர்திருத்தம் தேவை என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாட்டில் குரூப் 2 பணிகளுக்கு இனி நேர்முகத்தேர்வுகள் நடத்தப்படாது என்பது உள்ளிட்ட பல்வேறு சீர்திருத்தங்களை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்திருக்கிறது. தேர்வர்கள் நலன் கருதியும், தேர்வுகளை விரைவுபடுத்தவும் அறிவிக்கப்பட்டுள்ள இச்சீர்திருத்தங்கள் வரவேற்கத்தக்கவை.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தை காலத்திற்கும், தேவைக்கும் ஏற்ற வகையில் மாற்ற வேண்டும்; அதற்காக பல்வேறு சீர்திருத்தங்கள் செய்யப்பட வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி பல ஆண்டுகளாக வலியுறுத்தி வருகிறது. பா.ம.க. வலியுறுத்திய சில சீர்திருத்தங்களை தேர்வாணையம்   செயல்படுத்தியுள்ள போதிலும், தேர்வாணையத்தை நவீனப்படுத்துவதற்கு இவை மட்டும் போதுமானதல்ல.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் அனைத்து பணிகளுக்கும் நேர்முகத் தேர்வு கூடாது என்பது தான் பா.ம.க.வின் நிலைப்பாடு. இதை கடந்த ஐந்தாண்டுகளாக பா.ம.க.வின் நிழல் நிதிநிலை அறிக்கை மூலம் வலியுறுத்தி வருகிறோம். ஆள்தேர்வில் நடைபெறும் முறைகேடுகளுக்கு முதன்மைக் காரணம் நேர்முகத் தேர்வுகள் தான். அவை அகற்றப்பட்டால் தான் நேர்மையான முறையில் பணியாளர்களைத் தேர்ந்தெடுக்க முடியும். அப்போது தான் ஏழை, நடுத்தர மக்களுக்கும் வேலை கிடைக்கும்.

மத்திய அரசுப் பணிகளை பொறுத்தவரை குரூப் ஏ, குரூப் பி அரசிதழ் பதிவு பணிகள் தவிர மற்ற அனைத்து பணிகளுக்கும் நேர்காணல் முறை ரத்து செய்யப்பட்டு விட்டது. ஆந்திர மாநிலம் அதை விட அடுத்தக்கட்டத்திற்கு சென்று மாவட்ட துணை ஆட்சியர், காவல்துறை துணை கண்காணிப்பாளர் உள்ளிட்ட முதல் தொகுதி பணிகளுக்குக் கூட நேர்காணலை ரத்து செய்து விட்டது. ஆந்திராவைப் பொறுத்தவரை அரசு பணிகளுக்கு நேர்காணல் முற்றிலுமாக ஒழிக்கப்பட்டு விட்டது. ஆந்திரத்தைப் போலவே தமிழ்நாட்டிலும் முதல் தொகுதி பணிகளுக்கும் நேர்முகத் தேர்வை நிரந்தரமாக நீக்க வேண்டும்.

2 ஏ தொகுதியில் இதுவரை இருந்து வந்த நகராட்சி ஆணையர், தலைமைச் செயலக உதவி பிரிவு அதிகாரி ஆகியவை தொகுதி 2 க்கு மாற்றப்பட்டு விட்டன. இவை தவிர 2 ஏ தொகுதியில் உள்ள அனைத்து பணிகளும் சாதாரணமானவை தான். அப்பணிகளுக்காக முதல்நிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு என இரு தேர்வுகளை நடத்த வேண்டிய தேவையில்லை. எனவே, 2 ஏ தொகுதி பணிகளுக்கு  இனி ஒரே தேர்வை நடத்துவதற்கு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் முன்வர வேண்டும்.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் எதிர்கொள்ளும் மிகக் கடுமையான விமர்சனம் தேர்வு முடிவுகளை குறித்த காலத்தில் வெளியிடுவதில்லை என்பது தான். தொகுதி 1, தொகுதி 2 பணிகளுக்கான தேர்வு நடைமுறைகளை பல நேரங்களில் 30 மாதங்கள் வரை ஆகின்றன. இதனால் தேர்வர்கள் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர். இந்த நிலையை மாற்றி குறித்த நேரத்தில் முடிவுகளை வெளியிட வேண்டும்.

மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடிமைப்பணி அதிகாரிகளை தேர்தெடுப்பதற்கான போட்டித் தேர்வுகள் நடத்தப்படுகின்றன. லட்சக்கணக்கான மாணவர்கள் பங்கேற்கும் அத்தேர்வுகளின் முடிவுகள் அறிவிக்கை வெளியான நாளில் இருந்து ஓராண்டுக்குள் வெளியிடப்படுகின்றன. அடுத்தத் தேர்வுக்கு தேர்வர்கள் தயாராவதற்காக இத்தகைய ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குடிமைப்பணி தேர்வுக்கான முடிவுகள் ஒரு முறை கூட தாமதமாக வெளியிடப்பட்டதில்லை. மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தைப் பின்பற்றி ஒவ்வொரு தொகுதி பணிக்கும் எந்த மாதத்தில் அறிவிக்கை வெளியிடப்படும்? எந்த மாதத்தில் தேர்வு நடைபெறும்? எந்த மாதத்தில் முடிவுகள் வெளியாகும்? என்ற விவரங்கள் அடங்கிய நிலையான தேர்வு அட்டவணையை  தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையமும்  வெளியிட வேண்டும்.

முதல் தொகுதி பணிகளுக்கான அறிவிக்கை பிப்ரவரி மாதம் வெளியிடப்பட்டு, ஏப்ரல் மாதத்தில் முதல்நிலைத் தேர்வு, ஜூலை மாதத்தில் முதன்மைத் தேர்வு நடத்தப்பட்டு, திசம்பர் மாதத்தில் இறுதி முடிவுகள் வெளியிடப்பட வேண்டும். இரண்டாம் தொகுதி பணிகளுக்கான அறிவிக்கை மார்ச் மாதம் வெளியிடப்பட்டு, மே மாதத்தில் முதல்நிலைத் தேர்வு, ஆகஸ்ட் மாதத்தில் முதன்மைத் தேர்வு நடத்தப்பட வேண்டும். ஒவ்வொரு ஆண்டும்  இரண்டு முறை தொகுதி 4 பணிகளுக்கான அறிவிக்கைகள் வெளியிடப்பட்டு, மார்ச், செப்டம்பர் மாதங்களில் தேர்வுகளை நடத்தி முறையே மே, நவம்பர் மாதங்களில் முடிவுகளை வெளியிட வேண்டும்.

பொறியியல் பணிகள், வேளாண் பணிகள், புள்ளியியல் பணிகள் உள்ளிட்ட முதல் 4 தொகுதிகளுக்குள் வராத பணிகளுக்கான அறிவிக்கைகள் ஆகஸ்ட் மாதத்தில் வெளியிடப்பட்டு, அடுத்த 5 மாதங்களில் தேர்வுகள் நடத்தி, முடிவுகளை வெளியிட வேண்டும். இதற்கேற்ற வகையில் தேர்வு நடைமுறையில் சீர்திருத்தங்களைச் செய்ய தமிழ்நாடு அரசுப் பணியாளர்  தேர்வாணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.