Advertisment

கவர்ச்சி அரசியல் செய்ய வேண்டிய அவசியம் பாஜகவுக்கு இல்லை -நாராயணன்

Narayanan Thirupathy

பெட்ரோல் டீசல் விலை உயர்வுக்கு அனைத்து எதிர்க்கட்சிகளும் கண்டனம் தெரிவித்துள்ளன. பிப்ரவரி 22ஆம் தேதி திமுக, மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளது. இதுதொடர்பாக தமிழக பாஜக செய்தித் தொடர்பாளர் நாராயணன் திருப்பதி நக்கீரன் இணையதளத்திற்குப் பேட்டி அளித்துள்ளார்.

Advertisment

பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு பல்வேறு தரப்பில் இருந்து மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவிக்கப்படுகிறது. ஏழை, எளிய நடுத்தர மக்கள் இதனால் பெரிதும் பாதிக்கப்படுகிறார்கள் என்பதை மறுக்க முடியாது. இதற்கு பாஜகவின் பதில் என்ன?

Advertisment

கச்சா எண்ணெய், பிறகு சுத்திகரிப்பு, அதன் பிறகு டீலர் கமிஷன் இதையெல்லாம் சேர்த்தால் 30-ல் இருந்து 35 ரூபாய்க்குள்தான் பெட்ரோல், டீசல் விலை வரும் என்பது உண்மைதான். ஆனால், வளரும் நாடுகளில் அதற்கான விலை, சர்வதேச அளவில் உள்ள பொதுவான கொள்கை அடிப்படையில் நிர்ணயம் செய்யப்படுகிறது. வளராத நாடுகளில் இவை குறைந்த விலையில் கிடைக்கிறது. ஆனால், இங்கிலாந்தில் 130 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. நம் நாட்டைவிட 97 நாடுகளில் பெட்ரோல் டீசல் விலை அதிகமாக இருக்கிறது.

2014 ஆகஸ்ட் முதல் 2016 ஜனவரி வரை பெட்ரோல் டீசல் விலையை 10 ரூபாயில் இருந்து 15 ரூபாய் வரை குறைத்தோம். ஆனால், எப்போதெல்லாம் பெட்ரால் டீசல் விலை ஏறுகிறதோ, அப்போதெல்லாம் பொருட்களின் விலையை உயர்த்திய கார்ப்பரேட் நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் விலை குறைந்தபோது, அதற்குரிய விலை குறைப்பை செய்யாமல், தங்களுக்குச் சாதகமாக அவர்களுடைய லாபத்தில் ஏற்றிக்கொண்டதால் மத்திய கலால் வரி அதிகப்படுத்தப்பட்டது. பெட்ரோல், டீசல் விலை குறைந்தபோதும்கூட கார்ப்பரேட் நிறுவனங்கள் விலை குறைக்காததால், பெட்ரோலுக்கான வரியை அதிகரித்து ஒரு லட்சத்து 75 ஆயிரம் கி.மீ. கிராம சாலைகளை அமைத்தோம். இந்தியாவில் உள்ள கிராமங்களுக்கு கட்டமைப்பை ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறது மத்திய அரசு.

கரோனா காலக்கட்டத்தில் பல எண்ணெய் வள நாடுகள் கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்தபோது அல்லது நிறுத்தியபோது கூட இந்தியா அதிக அளவு கச்சா எண்ணெய்யை மூன்று மடங்கு சேமித்து வைத்திருந்தோம். ஒருவேளை அந்த நேரத்தில் கச்சா எண்ணெய் வரத்து குறைந்திருந்தால் மிகப்பெரிய தட்டுப்பாடு ஏற்பட்டு ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 200 ரூபாயை தொட்டிருக்கும்.

கரோனா காலக்கட்டத்தில் உலக அளவில் மிகப்பெரிய பொருளாதார சிக்கல் ஏற்பட்டதுபோல, இந்தியாவிலும் அந்த நிலை ஏற்பட்டது. உற்பத்தி பாதிக்கப்பட்டது. அனைத்துத் தொழில்களும் பாதிக்கப்பட்டன. ஆனால், அந்த நேரத்தில் ஒரு லட்சத்து 75 ஆயிரம் கோடி ரூபாய்க்கு பணம் மற்றும் பொருள் உதவியைப் பொதுமக்களுக்கு மத்திய அரசு செய்திருக்கிறது. மக்கள் நலத் திட்டங்களை அரசு செய்யவேண்டும் என்றால் வருவாய் இருந்தால் மட்டுமே செய்ய முடியும். அதனால், பெட்ரோல், டீசல் விலையைக் குறைக்க முடியவில்லை என்பதுதான் உண்மை.

காஸ் சிலிண்டர்களின் விலை ஒரு வாரத்திலேயே 2 முறை உயர்ந்து ரூ.75 கூடுதலாகி, ரூ.785 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு மே மாதம் சென்னையில் காஸ் சிலிண்டர் விலை ரூ.569 ஆக இருந்தது. இப்படித் திடீரென்று விலை ஏற்றப்பட்டதால், இல்லத்தரசிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனரே?

பெண்கள் மத்தியில் எதிர்ப்பு அதிகமாகாது. கடந்த ஏழு வருடங்களில் 10 கோடி குடும்பங்களுக்கு கேஸ் இணைப்பை வழங்கியிருக்கிறோம். இதுவரை விறகு அடுப்பை பயன்படுத்தியவர்களுக்கு கேஸ் இணைப்பை வழங்கியிருக்கிறோம்.

காஸ் இணைப்பு கொடுத்தால் மட்டும் போதுமா? காஸ் சிலிண்டர் வாங்க வேண்டுமே? அதன் விலை அதிகமாகியிருக்கிறதே?

காங்கிரஸ் ஆட்சி இருந்தபோது மானியம் இல்லாத கேஸ் சிலிண்டரின் விலை 1,200 ரூபாய். இன்று 750 ரூபாய். அதேபோல காங்கிரஸ் ஆட்சியில் மானிய விலையில் கொடுக்கக் கூடிய கேஸ் சிலிண்டர் எண்ணிக்கை ஒரு வருடத்திற்கு 9 மட்டுமே. ஆனால் இப்போது வருடத்திற்கு 12 சிலிண்டர்கள் கொடுக்கிறோம். சில கோடி மக்கள் மட்டுமே அனுபவித்ததை இன்று பல கோடி பேர் அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள்.

நீங்கள் என்னதான் விளக்கம் அளித்தாலும், பெட்ரோல் டீசல் விலை உயர்வு மற்றும் காஸ் சிலிண்டர்களின் விலை உயர்வால் இல்லத்தரசிகள் தங்களது கோபத்தை வாக்குச் சீட்டில் வெளிப்படுத்துவார்கள் என்ற கருத்தும் நிலவுகிறதே?

கவர்ச்சி அரசியல் செய்து வாக்குகளைச் சேகரிக்க வேண்டிய அவசியம் பாஜகவுக்கு இல்லை. இலவசங்கள் கொடுப்பதன் மூலம் மட்டுமே மக்களைத் திருப்திப்படுத்த முடியும் என்று நினைப்பது தவறு. கட்டமைப்புகளை அதிகப்படுத்துகிறோம். வசதி வாய்ப்புகளை மேம்படுத்திக்கொடுக்கிறோம் என்று சொன்னால் உறுதியாக மக்கள் இந்த விசயத்தை உணர்வார்கள். எதிர்க்கட்சிகள் இதில் அரசியல் செய்வது தேவையற்ற விசயம்.

காங்கிரஸ் அரசில் எண்ணெய் நிறுவனங்களிடம் கடன் பத்திரங்களை கொடுத்து மானியம் வழங்கியது. அதாவது, அப்போது இருந்த காங்கிரஸ் அரசு கடன் வாங்கியது. இன்று ஒவ்வொரு வருடமும் பத்தாயிரம் கோடி ருபாய் கடன் வட்டியைக் கொடுத்துக் கொண்டிருக்கிறோம். காங்கிரஸ் அரசு எண்ணெய் நிறுவனங்களிடம் வாங்கிய கடனுக்கு சென்றவருடம் 5 ஆயிரம் கோடி ருபாய் திரும்பக் கொடுத்திருக்கிறோம். இதேபோல, ஒரு லட்சத்து 34 ஆயிரம் கோடி திரும்பக் கொடுக்க வேண்டும். இதையெல்லாம் அரசு எப்படி திருப்பிக்கொடுக்கும். வருவாய் இருந்தால்தானே கொடுக்க முடியும்.

பெட்ரோல் டீசல் பயன்பாட்டைக் குறைக்க வேண்டும் என்பதுதான் உலகம் முழுவதும் இருக்கக் கூடிய நாடுகள் எடுத்துக்கொண்ட சபதம். ஏனென்றால், பருவநிலை மாற்றத்தைச் சமாளிக்க வேண்டும், உலகம் முழுவதும் இருக்கக் கூடிய புவி வெப்பமயமாகுதலை குறைக்க வேண்டும், காற்று மாசுவை ஒழிக்க வேண்டும் என்று சொன்னால், அதற்கு பெட்ரோல், டீசல் பயன்பாட்டைக் குறைக்க வேண்டும். பெட்ரோல், டீசல் பயன்பாட்டைக் குறைக்க வேண்டும் என்றால், இதன் விலை கொஞ்சம் அதிகமாக இருந்தால் மட்டுமே முடியும்.

ஒரு அரசியல்வாதியாக நான் சொல்வதை சிலர் ஏற்றுக்கொள்ளாவிட்டாலும் கூட, உண்மையிலேயே விலை அதிகமாக இருக்கும்போது பெட்ரோல், டீசல் பயன்பாடு குறையும். அந்தப் பயன்பாடு குறைந்தால்தான், உயிரிழப்புகளும் உடல்நிலை கேடுகளும் குறையும் என்பதை உணர வேண்டும்.

Narayanan Thirupathy
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe