ADVERTISEMENT

ஓசூர் காதல் தம்பதி ஆணவக்கொலையில் நெஞ்சை உறைய வைக்கும் தகவல்கள்!  தலைமுடியை மழித்தும், கருவை சிதைத்தும் சித்ரவதை செய்து கொன்றது அம்பலம்!!

11:09 PM Nov 17, 2018 | elayaraja

ADVERTISEMENT

ஓசூர் காதல் தம்பதி ஆணவக்கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் நெஞ்சை உறைய வைக்கும் பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன. காதலனை இருபதுக்கும் மேற்பட்ட இடங்களில் அரிவாளால் வெட்டியும், பெற்ற மகளென்றும் பாராமல் தலைமுடியை மழித்தும், கருவை சிதைத்தும் மிருகத்தனமாக படுகொலை செய்திருப்பது தெரிய வந்துள்ளது.

ADVERTISEMENT


கர்நாடகா மாநிலம் மாண்டியா மாவட்டம், சிவனசமுத்திரம் நீர்வீழ்ச்சி அருகே உள்ள காவிரி ஆற்றில் ஒரு வாலிபரின் சடலமும், இளம்பெண் சடலமும் நேற்று (நவம்பர் 16, 2018) மிதந்து வந்தது. இருவரின் முகங்களும் சிதைக்கப்பட்ட நிலையிலும், உடலில் பல இடங்களில் வெட்டுக்காயங்களும் கிடந்தன.


இதுகுறித்து பொதுமக்கள் அளித்த தகவலின்பேரில் பெலகவாடி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஸ்ரீகாந்த் மற்றும் போலீசார் சடலங்களைக் கைப்பற்றி விசாரித்தனர். சடலமாகக் கிடந்த வாலிபர், அம்பேத்கர் படம் அச்சிட்ட டி&ஷர்ட் அணிந்திருந்தார். அதில், 'டாக்டர் அம்பேத்கர், ஜெய்பீம், சூடுகொண்டப்பள்ளி' என்றும் எழுதியிருந்தது.


அதைவைத்துதான் சடலமாகக் கிடந்த நபர், ஓசூர் அருகே உள்ள சூடுகொண்டப்பள்ளியைச் சேர்ந்தவராக இருக்கலாம் என்ற முடிவுக்கு வந்தது கர்நாடகா போலீஸ். அவர்கள் அளித்த தகவலின்பேரில் ஓசூர் போலீசார் தீவிர விசாரணையில் இறங்கினர். இதில், காவிரி ஆற்றில் சடலமாக மிதந்து வந்த நபர், சூடுகொண்டப்பள்ளியைச் சேர்ந்த நாராயணப்பா என்பவரின் மகன் நந்தீஸ் (25) என்பதும், சடலமாகக் கிடந்த பெண், அதே பகுதியைச் சேர்ந்த சீனிவாசன் என்பவரின் மகளும், நந்தீஸின் மனைவியுமான சுவாதி (20) என்பதும் தெரிய வந்தது.


பொதுவாக கொலை வழக்குகளில் கொலையுண்டவர் யார் எனத்தெரியும் வரைதான் மர்மங்கள் நீடிக்கும். கொலையானவர் அடையாளம் தெரிந்துவிட்டால் அதன்பிறகு எல்லா மர்ம முடிச்சுகளும் அடுத்தடுத்து அவிழ்ந்து விடும். இந்த வழக்கிலும் அதுதான் நடந்தது.


நந்தீஸ், மரக்கடையில் கூலி வேலை செய்து வரும் ஏழை தொழிலாளியின் மகன். சுவாதி, தந்தையும் பொருளாதார ரீதியாக செல்வாக்கு இல்லாதுபோனாலும், ஒன்றரை ஏக்கர் விவசாய நிலம் வைத்திருக்கும் குறு விவசாயி. இருவரும் வேறு வேறு சமூகத்தினர்.


பத்தாம் வகுப்பு மட்டுமே படித்துள்ள நந்தீஸ், ஹார்டுவேர் கடையில் கூலி வேலைக்குச் சென்று வந்தார். சுவாதி, தனியார் கல்லூரியில் பி.காம் படித்து வந்தார். ஒரே பகுதி என்பதால் அவர்களுக்குள் அடிக்கடி ஏற்பட்ட சந்திப்பு, காதலாக மலர்ந்தது.


இவர்களின் காதலுக்கு பெண் வீட்டார் தரப்பிலிருந்து கடும் எதிர்ப்பு கிளம்பியதைடுத்து, கடந்த ஆகஸ்ட் மாதம் 15ம் தேதியன்று வீட்டைவிட்டு ஓடிப்போய், சூளகிரி திம்மராய சாமி கோயிலில் திருமணம் செய்து கொண்டனர். அதன்பிறகு, ஓசூர் ராம் நகரில் காதல் தம்பதியினர் வாழ்க்கையைத் தொடங்கினர்.


இந்த நிலையில்தான் கடந்த 10.11.2018ம் தேதியன்று, வீட்டில் இருந்து புனுகன்தொட்டியில் உள்ள உறவினர் வீட்டிற்குச் செல்வதாக நந்தீஸும், சுவாதியும் அக்கம்பக்கத்தினரிடம் கூறிவிட்டுச் சென்றுள்ளனர். அண்ணனும் அண்ணியும் காணாமல் போகவே, நந்தீஸின் தம்பி சங்கர் (20), இதுகுறித்து ஓசூர் டவுன் போலீஸ் நிலையத்தில் இரு நாட்களுக்கு முன்பு புகார் அளித்தார். இந்த நிலையில்தான், நந்தீஸ், சுவாதி ஆகியோரிடம் சடலங்கள் சிவனசமுத்திரம் அருகே காவிரி ஆற்றில் இருந்து கைப்பற்றப்பட்டுள்ளன.


சடலம் கைப்பற்றப்பட்ட தகவல்கள் காட்டுத்தீயாக பரவின. ஆரம்பத்தில் இருந்தே இது, சாதி ஆணவப்படுகொலை என பல்வேறு அமைப்புகளும், கட்சிகளும் சொல்லி வருகின்றன.


பெலகவாடி போலீசார் நடத்திய விசாரணையில், காதல் தம்பதியினரை சுவாதியின் பெற்றோரும், உறவினர்களும் கடத்திச்சென்று படுகொலை செய்து, சடலங்களை காவிரி ஆற்றில் வீசியிருப்பது தெரிய வந்தது. இதையடுத்து, சுவாதியின் தந்தையான சூடுகொண்டப்பள்ளியைச் சேர்ந்த சீனிவாசன் (40), பெரியப்பா வெங்கடேஷ் (43), புனுகன்தொட்டியைச் சேர்ந்த கிருஷ்ணன் (26) ஆகிய மூன்று பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.


இந்த வழக்கு தொடர்பாக சுவாதியின் மற்றொரு பெரியப்பா அஸ்வதப்பா (45), உறவினர்கள் வெங்கட்ராஜ் (25), பாலவனப்பள்ளியைச் சேர்ந்த கார் ஓட்டுநர் சாமிநாதன் (30) ஆகிய மூன்று பேரையும் தேடி வருகின்றனர்.


இந்த களேபரங்களுக்கு இடையே, நந்தீஸ், சுவாதி ஆகிய இருவரின் சடலங்களும் மாண்டியா மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் நேற்று பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. பிரேத பரிசோதனைக்குப் பிறகு, சடலங்களை அவரவர் உறவினர்கள் பெற்றுச்சென்றனர். சடலங்கள் அழுகிய நிலையில் இருந்ததால், மாண்டியாவிலேயே தகனம் செய்தனர்.


இது ஒருபுறம் இருக்க, நந்தீஸூம், சுவாதியும் மிகவும் கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டிருப்பது போலீசார் விசாரணையில் தெரிய வந்துள்ளது.


இந்த வழக்கு தொடர்பாக பெலகவாடி போலீசாரிடம் நாம் பேசினோம். பல திடுக்கிடும் தகவல்களைக் கூறினர்.


ஓசூர் ராம் நகரில் தனிக்குடித்தனம் நடத்தி வந்த காதல் தம்பதியினர், கடந்த 10ம் தேதியன்று ஓசூருக்கு வந்திருந்த மக்கள் நீதி மய்யக் கட்சித் தலைவர் கமல்ஹாசனை பார்ப்பதற்காக சென்றிருந்தனர். அப்போது சுவாதியின் உறவினர்கள் சிலரும் அங்கே வந்துள்ளனர். காதல் கணவனுடன் சுவாதி வந்திருக்கும் தகவலை அவர்கள், சுவாதியின் தந்தைக்குத் தெரிவித்தனர்.


அதன்பேரில் சுவாதியின் தந்தை சீனிவாசன், பெரியப்பாக்கள் அஸ்வதப்பா, வெங்கடேஷ், கார் ஓட்டுநர் சாமிநாதனர் ஆகியோர் ஒரு வாடகை காரில் அங்கு வந்தனர். அவர்கள் நந்தீஸிடமும், சுவாதியிடமும், 'நடந்தது நடந்து போச்சு. எங்களுக்கு உங்கள் மேல் இருந்த கோபம் எல்லாம் போயிடுச்சு. உங்களை ஏற்றுக்கொள்கிறோம். வாங்க... எதுவாக இருந்தாலும் வீட்டுக்குப் போயி பேசிக்கலாம்,' என்று ஆசை வார்த்தை கூறினர்.


இதையெல்லாம் நம்பிய காதல் தம்பதியினர், அவர்களுடன் காரில் ஏறிச்சென்றனர். ஆனால், அந்த கார் சூடுகொண்டப்பள்ளிக்குச் செல்லாமல் திடீரென்று கர்நாடகா மாநிலம் நைஸ் சாலையில் பறக்கத் தொடங்கியது. பதற்றம் அடைந்த நந்தீஸும், சுவாதியும் காரை நிறுத்தும்படி கெஞ்சியும், கார் நிற்காமல் கர்நாடகா மாநிலம் மாண்டியாவில் போய்தான் நின்றது.


சுவாதியை விட்டுவிட்டு பிரிந்து செல்லும்படி நந்தீஸை அந்த கும்பல் மிரட்டியது. அப்படி பிரிந்து செல்லாவிட்டால், இருவரையும் தீர்த்துக்கட்டிவிடுவோம் என்றும் மிரட்டியுள்ளனர். காதல் தம்பதியினர் அதற்கு ஒப்புக்கொள்ளாமல் முரண்டு பிடித்தனர். கண்காணாத இடத்தில் ஓடிச்சென்று பிழைத்துக்கொள்கிறோம்.... விட்டுவிடுங்கள்... என்று கெஞ்சியுள்ளனர். குறிப்பாக சுவாதி, நந்தீஸின் குழந்தையை சுமக்கிறேன்.... எங்களை வாழ விடுங்கள்... என்று தரையில் புரண்டு அழுதிருக்கிறார்.


இதைப்பற்றி கொஞ்சமும் காதில் போட்டுக்கொள்ளாத அந்த கும்பல் அரிவாளால் அவர்கள் இருவரையும் சரமாரியாக வெட்டியுள்ளது. இருவரின் தலையிலும் பலமான வெட்டுக்காயங்கள் இருந்துள்ளன. நந்தீஸூக்கு உடலில் இருபதுக்கும் மேற்பட்ட இடங்களில் வெட்டுக்காயங்கள் இருந்துள்ளன.


அப்படியும் அந்த கும்பலின் வெறி அடங்கவில்லை. அவர்களை யாரும் அடையாளம் கண்டுவிடக்கூடாது என்பதற்காக இருவரின் முகங்களையும் கல்லால் தாக்கி சிதைத்துள்ளனர். சுவாதியின் தலை முடியை அரிவாளாலேயே மழித்துள்ளனர். மேலும், கருவைச் சிதைக்கும் நோக்கில் அவரின் அடிவயிற்றுப்பகுதியையும் கல்லால் தாக்கி சிதைத்துள்ளனர். அதன்பிறகே இருவரின் சடலங்களையும் காவிரி ஆற்றில் வீசிவிட்டு சொந்த ஊருக்குத் திரும்பியுள்ளனர்.


இந்த விவரங்களைச் சொன்ன பெலகவாடி போலீசார், இதுபோன்ற குரூரமான கொலை எங்கள் போலீஸ் லிமிட்டில் இதுவரை நடந்ததில்லை என்றும் கூறினர்.


இந்த வழக்கின் அடுக்கக்கட்ட நகர்வு குறித்து ஓசூர் டிஎஸ்பி மீனாட்சியிடம் கேட்டோம்.


''நந்தீஸ் காணவில்லை என்பதுதான் நாங்கள் பதிவு செய்த வழக்கு. நந்தீஸூம், சுவாதியும் கொல்லப்பட்ட கர்நாடகா மாநிலம் மாண்டியா போலீஸ் எல்லைக்கு உட்பட்டது என்பதால் இப்போதைக்கு அவர்கள் விசாரித்து வருகின்றனர். மூன்று பேரை கைது செய்திருக்கின்றனர். மேலும் சிலரை தேடி வருகின்றனர். நாங்களும் மூன்று தனிக்குழுக்கை அமைத்து குற்றவாளிகளைத் தேடி வருகிறோம். அவர்களும் கைது செய்யப்பட்ட பிறகு இந்த வழக்கு எங்களுக்கு ஓசூர் போலீசாருக்கு மாற்றம் செய்யப்படும்,'' என்றார்.


கொலையுண்ட நந்தீஸ் விடுதலை சிறுத்தைகள் கட்சியில் ஏதேனும் பொறுப்பில் இருக்கிறாரா? கொலையான சமயத்தில் சுவாதி கருவுற்றிருந்தாரா? என்று கேட்டதற்கு, ''நந்தீஸ் சமீபத்தில்தான் விடுதலை சிறுத்தைகள் கட்சியில் சேர்ந்திருப்பார் போலிருக்கிறது. கட்சிப் பொறுப்பில் இருப்பதாகத் தெரியவில்லை. சுவாதி கருவுற்றிருந்தாரா இல்லையா என்பது பிரேத பரிசோதனை அறிக்கை கிடைத்தால்தான் சொல்ல முடியும். இன்னும் எங்களுக்கு அந்த அறிக்கை விவரங்கள் வந்து சேரவில்லை,'' என்றார்.


சேலத்தில் அக்டோபர் 22ம் தேதி சிறுமி ராஜலட்சுமி கழுத்து அறுத்து படுகொலை; தர்மபுரியில் நவம்பர் 5ம் தேதி பழங்குடியின மாணவி கவுசல்யா கூட்டு வன்புணர்வுக்கு ஆளாக்கப்பட்டு படுகொலை; இப்போது, ஓசூரில் காதல் தம்பதியினர் சாதி ஆணவக்கொலை நிகழ்ந்திருக்கிறது. தமிழகத்தில் பெண்களுக்கும், சிறுமிகளுக்கும் பாதுகாப்பு என்பது கேள்விக்குறியாகி இருக்கிறது. சாதி வன்மம் உயிர்ப்புடன் இருக்கிறது. மவுனம் காக்கிறது அரசு.


ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT