Skip to main content

நக்கீரன் குறித்து பொய்யான செய்திகளை பரப்பியவர்கள் மீது காவல்துறையிடம் புகார்...

Published on 15/05/2019 | Edited on 15/05/2019

நக்கீரன் நிறுவனம் குறித்து சமூகவலைதளங்கள் மற்றும் இணையதளம் வாயிலாக பொய்யான தகவல்களை பரப்பியவர்கள் மீது சென்னை மாநகர காவல் ஆணையாளரிடம் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. 
 

dinasari


கடந்த மே மாதம் 08-10 நக்கீரன் இதழில் " அரசு உதவி பெறும் பள்ளியில் ஆர்.எஸ்.எஸ் பயிற்சி" என்ற தலைப்பில் கட்டுரை ஒன்று வெளியாகியிருந்தது. நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் உள்ள அரசு உதவி பெறும் குருஞானசம்பந்தர் மெட்ரிக் பள்ளியில் ஆர்.எஸ்.எஸ். பயிற்சி நடைபெறுவதாக அப்பள்ளி மாணவர்களின் பெற்றோர் ஒரு சிலர் நக்கீரனுக்கு தகவலளித்தனர். இதனை அடிப்படையாகக்கொண்டு நக்கீரன் இதழ் இந்த விவகாரம் குறித்து தீர விசாரித்து, சம்பந்தப்பட்டவர்களிடம் பேட்டியெடுத்து, அதனை கட்டுரையாக வெளியிட்டது. 

இந்நிலையில் கடந்த 14.05.2019 அன்று 'தமிழ் தினசரி' என்ற இணையதளத்தில், இந்த கட்டுரை தொடர்பாக நக்கீரனை மிரட்டும் வகையில் பதில் கட்டுரை ஒன்று எழுதப்பட்டது. "நக்கீரன் அலுவலகத்தில் கள்ளநோட்டு அடிக்கிறார்கள், திடுக்கிடும் தகவல்! இனி நாங்களும் சொல்லலாமே" என ஆரம்பித்த அந்த கட்டுரை நக்கீரனுக்கு மிரட்டல் விடுக்கும் வகையிலும், நக்கீரனுக்கு தீங்கு விளைவிக்கும் வகையிலும், பத்திரிகை சுதந்திரத்தை கெடுக்கும் வகையிலும் அமைந்தது. 
 

dinasari



சென்னை மைலாப்பூர் முகவரியிலிருந்து இயங்கி வரும் இந்த தினசரி(dhinasari.com) இணையதளத்தில் பொதிகைச்செல்வன் என்பவர் இந்த கட்டுரையை எழுதியிருந்தார். எனவே நக்கீரனுக்கும், பத்திரிகை சுதந்திரத்திற்கும் எதிராக செயல்பட்டு பொய்யான செய்திகளை பரப்பிய குறிப்பிட்ட அந்த இணையதளத்தின் மீதும், கட்டுரை ஆசிரியர் பொதிகைச்செல்வன் மற்றும் அந்த இணையதளத்தின் உரிமையாளர் செங்கோட்டை ஸ்ரீராம் மீதும் தகுந்த நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி சென்னை மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் நக்கீரன் ஆசிரியர் சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. 

ஏற்கனவே கடந்த ஆண்டின் இறுதியில் நக்கீரன் இதழுக்கும், அதன் ஆசிரியரின் பெயருக்கும் குந்தகம் விளைவிக்கும் வகையில் வதந்திகளை பரப்பிய சிலரின் மீது கொடுத்த புகார்கள் தற்போது விசாரணையில் உள்ளது. அதனுடன் சேர்த்து இதனையும் விசாரித்து தகவல் தொழில்நுட்ப சட்டத்தின்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆணையாளரிடம் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.  

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ஆதினத்துக்கு மிரட்டல்; பள்ளி தாளாளரின் ஜாமீன் மனுவில் நீதிமன்றம் அதிரடி!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
The court takes action in the bail application of the school principal on Intimidation to Adinam

மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள தருமபுரத்தில் ஆதீன சைவ மடம் ஒன்று அமைந்துள்ளது. இந்த ஆதீனத்தின் 27ஆவது தலைமை மடாதிபதியாக ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிய ஞானசம்பந்த பரமாச்சாரியார் சுவாமிகள் பட்டம் வகித்து வருகிறார். இந்தச் சூழலில் தருமபுரம் ஆதீன மடாதிபதியின் சகோதரர் விருத்தகிரி மயிலாடுதுறை காவல்துறை கண்காணிப்பாளரிடம் கடந்த பிப்ரவரி மாதம் 21 ஆம் தேதி (21.02.2024) புகார் ஒன்றை அளித்திருந்தார். அந்தப் புகாரில், ‘தஞ்சாவூர் மாவட்டம் ஆடுதுறையைச் சார்ந்த வினோத் என்பவரும், மடாதிபதியின் உதவியாளர் செந்தில் என்பவரும் தன்னை நேரில் சந்தித்து ஆதீன மடாதிபதியின் ஆபாச வீடியோ தங்களிடம் இருப்பதாக மிரட்டினர். மேலும், அவர்கள் அந்த வீடியோவை சமூக வலைத்தளங்கள் மற்றும் தொலைக்காட்சியில் வெளியிடாமல் இருக்க வேண்டுமென்றால், பணம் தர வேண்டும் என்று கூறி என்னைக் கழுத்தை நெரித்துக் கொலை செய்ய முயற்சி செய்தனர்.

இந்தச் சம்பவத்தில் செம்பனார்கோவிலைச் சேர்ந்த பிரபல கல்வி நிறுவனங்களின் தாளாளர் குடியரசு, பா.ஜ.க. கட்சியின் மயிலாடுதுறை மாவட்டத் தலைவர் அகோரம், வழக்கறிஞர் செய்யூர் ஜெயச்சந்திரன் ஆகியோர் தூண்டுதலாக இருந்துள்ளனர். எனவே அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்தப் புகாரின் பேரில் மயிலாடுதுறை பா.ஜ.க. மாவட்டத் தலைவர் அகோரம், மடாதிபதியின் உதவியாளர் செந்தில், வினோத் உள்ளிட்ட 9 பேர் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இது தொடர்பாக 4 பேரை போலீசார் கடந்த பிப்ரவரி மாதம் 28 ஆம் தேதி கைது செய்திருந்தனர். இதனைத் தொடர்ந்து பா.ஜ.க. பிரமுகர் அகோரம் முன்ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

அதனைத் தொடர்ந்து இந்த வழக்கு உயர்நீதிமன்ற நீதிபதி சி.வி. கார்த்திகேயன் முன்பு கடந்த மார்ச் 6 ஆம் தேதி (06.03.2024) விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, “கட்சி அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தியும், வழக்கு விசாரணை நிலுவையில் இருப்பதையும் கருத்தில் கொண்டு அகோரத்தின் முன்ஜாமீன் மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிடுகிறேன்” எனத் தெரிவித்திருந்தார். இதனையடுத்து மும்பையில் தலைமறைவாக இருந்து வந்த அகோரத்தை கடந்த மார்ச் மாதம் 15 ஆம் தேதி (15.03.2024) தமிழக தனிப்படை போலீசார் அதிரடியாக கைது செய்திருந்தனர்.

இதனையடுத்து கைதான பாஜக மாவட்ட தலைவர் அகோரம் ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். அதனைத் தொடர்ந்து இந்த வழக்கு கடந்த 8 ஆம் தேதி (08.04.2024) நீதிபதி தமிழ்ச்செல்வி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது காவல்துறை தரப்பில் வாதிடுகையில் ‘அகோரம் மீது 47 வழக்குகள் நிலுவையில் இருப்பதால் ஜாமீன் வழங்கக் கூடாது’ என எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இதனைப் பதிவுசெய்து கொண்ட நீதிபதி இந்த வாதத்தை பதில் மனுவாக தாக்கல் செய்ய உத்தரவிட்டார். மேலும் வழக்கு விசாரணையைக் கடந்த 10 ஆம் தேதிக்கு ஒத்திவைத்திருந்தார். 

The court takes action in the bail application of the school principal on Intimidation to Adinam

இந்த நிலையில், கைது செய்யப்பட்டிருந்த பிரபல கல்வி நிறுவனங்களின் தாளாளர் குடியரசு, சென்னை உயர்நீதிமன்றத்தில் ஜாமீன் கேட்டு மனுதாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், ‘தனக்கு சர்க்கரை நோய், இருதய பாதிப்பு இருப்பதால், தொடர்ந்து சிறையில் இருந்தால் உடல்நிலை பாதிக்கப்படும். எனவே, நிபந்தனை ஜாமீன் பேரில் என்னை விடுவிக்க வேண்டும்’ என்று குறிப்பிட்டிருந்தார். இந்த மனு மீதான விசாரணை, நீதிபதி தமிழ்ச்செல்வி முன்பு இன்று (24-04-24) வந்தது. அப்போது காவல்துறை தரப்பில், ‘இந்த வழக்கு தொடர்பான புலன் விசாரணை நடைபெற்று வருகிறது. எனவே, பள்ளி தாளாளர் குடியரசுவை ஜாமீனில் விடுவிக்க கூடாது’ எனக் கூறி கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனைப் பதிவு செய்துகொண்ட நீதிபதி தமிழ்ச்செல்வி, குடியரசுவின் ஜாமீன் மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். 

Next Story

“பா.ஜ.க. - ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் நாட்டின் கொள்கைக்கு எதிராக உள்ளனர்” - ராகுல் காந்தி! 

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
BJp RSS Organizations are against the policy of the country says Rahul Gandhi

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதில் தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளிலும், புதுச்சேரியில் உள்ள ஒரு தொகுதியிலும் என 40 தொகுதிகளில் ஒரே கட்டமாக நாளை வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ள தொகுதிகளில் தேர்தல் பரப்புரை நேற்று (17.04.2024) மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது. அதாவது தேர்தல் பிரச்சாரத்திற்கான கடைசி நாளில் அனைத்துக் கட்சிகளும் இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் இறங்கின. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி எம்.பி. அக்கட்சியின் தொண்டர்களுக்கு எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வீடியோ மூலம் பல்வேறு வேண்டுகோள்களை வெளியிட்டுள்ளார். அதில், “பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் நாட்டின் கொள்கைக்கு எதிராக உள்ளனர். இவர்கள் நமது அரசியலமைப்பு சட்டம் மற்றும் ஜனநாயக கட்டமைப்பை சிதைக்கின்றனர். அதே போன்று தேர்தல் ஆணையம் உள்ளிட்ட தன்னாட்சி அமைப்புகளின் கட்டமைப்பை அழிக்க நினைக்கின்றனர். எனவே பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் சித்தாந்தத்தை எதிர்த்து காங்கிரஸ் கட்சி தொண்டர்கள் வீதியில் இறங்கி போராட வேண்டும்.

காங்கிரஸ் தொண்டர்கள் மீது மிகுந்த நம்பிக்கை உள்ளது. காங்கிரஸ் தொண்டர்கள்தான் நாட்டின் பாதுகாவலர்கள். மக்களவைத் தேர்தலையொட்டி காங்கிரஸ் சிறப்பான தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளது. நாட்டு மக்களிடம் இருந்து பெறப்பட்ட கோரிக்கைகளை தேர்தல் அறிக்கையில் இடம் பெறச் செய்த காங்கிரஸ் தொண்டர்களுக்கு நன்றி. பாஜகவையும் அவர்களின் சித்தாந்தத்தையும் தோற்கடிக்கப் போகிறோம்” எனத் தெரிவித்துள்ளார்.