Advertisment

’என் அப்பா வாழ்க்கை பெருமை வாய்ந்தது; அழுக்குப்படுத்த நினைக்கிறவர்கள் அனுதாபத்திற்குரியவர்கள்’- மனம் திறந்த கபிலன் வைரமுத்து

kb

Advertisment

meetoo அமைப்பில் கவிஞர் வைரமுத்து மீது பாடகி சின்மயி உள்ளிட்ட சில பெண்கள் பாலியால் புகார் கூறி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளனர். இந்த விவகாரம் குறித்து வைரமுத்து சமூக வலைதளத்தில் மட்டும் தனது விளக்கத்தை பதிவு செய்தார். பாலியல் புகார் குறித்து தன் மீது வழக்கு தொடரப்பட்டால் சட்டப்படி சந்திக்க தயார் என்றும் தெரிவித்திருந்தார். மீடூவில் வைரமுத்து விவகாரம் பெரிம் விவாதத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில் அவரது குடும்பத்தில் இருந்து இதுவரை எந்த விளக்கமும் வராமல் இருந்தது. இந்நிலையில் வைரமுத்துவின் இளையமகன் கபிலன் வைரமுத்து இந்த விவகாரம் குறித்து மனம் திறந்துள்ளார். அவர் இது குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:

’ஒரு விவாதம் தொடங்கி இத்தனை நாட்களாக ஏன் எதுவும் பேசவில்லை என நண்பர்கள் சிலர் கேட்கலாம். எதையும் விரிவாக எழுதுகிற மனநிலை சில நாட்களாக வாய்க்கவில்லை. அதையும் மீறி இந்தப்பதிவு அவசியமென கருதுகிறேன்.

வெறுப்புணர்ச்சியை மையப்படுத்தாமல் தீர்வை மையப்படுத்துவதான் ஒரு முற்போக்கு இயக்கத்தின் முதல் வெற்றி. நான் என்பது மேற்கத்தியம். நாம் என்பது இந்தியம். நாடு எப்படி போனாலும் நான் நன்றாக இருக்க வேண்டும் என்பது மேற்கத்திய வாழ்க்கை முறை. நாடு நிம்மதியாக இருந்தால்தான் நாம் நிம்மதியாக இருக்க முடியும் என்பது நம் நம்பிக்கை. தன் வாழ்வே அவர்களின் வாழ்வியல் . குடும்ப அமைப்பே நம் அடிப்படை. உலக பொருளாதாரச்சரிவில் இருந்து இந்தியாவை ஓரளவிற்கு பாதுகாத்தது குடும்ப கட்டமைப்பே. அதுவே பிற நாடுகள் நம்மை பார்த்து பொறாமைப்படக் கூடிய பண்பு. நம் மண்ணில் தோன்றிய பெண்ணுரிமை இயக்கங்கள் ஆண் - பெண் சரிசமமாக இங்கும் குடும்ப அமைப்பை ஒரு முக்கியக் கனவாகக் கருதின. தற்போது மேல்நாட்டில் இருந்து இறக்குமதியாகும் அமைப்புகள் அந்தக்குடும்ப அமைப்பைச் சிதைக்கும் நோக்கோடு செயல்படுகிறதோ என அய்யம் எழுகிறது. எந்த ஆதாரமும் தொலைநோக்கமும் இல்லாமல் பொதுவெளியில் ஆண் பெண்ணின் மீதும் பெண் ஆணின் மீதும் பழிசொல்லும் போக்கு மிகவும் அபாயகரமானது.

Advertisment

ka

meetoo என்ற இந்த உலகளாவிய அமைப்பு எதை நோக்கியது அது எங்கே திசை மாறுகிறது என தீர்க்கமாகச் சொல்லும். பக்குவம் எனக்கில்லை. ஆனால் பெண்ணுரிமைக்காக நம் முன்னோடி தலைவர்கள் மேற்கொண்ட முயற்சிகளும் அவர்களின் கருத்தியலும் இது போன்ற அமைப்புகளைப் புரிந்துகொள்ள நமக்கு உதவுமென நம்புகிறேன்.

அப்பாவைத் தமிழர்களின் நிகழ்கால அடையாளங்களில் ஒன்று என்று சிலர் சொல்வதைக்கேட்கும்போது பெருமைப்படுவேன். அது சிலருக்கு அதீதமாக இருக்கலாம். சில மறுக்கலாம். ஆனால் அவர் தன்னம்பிக்கையின் அடையாளம் என்பதை எவராலும் மறுக்க முடியாது. அவர் பிறக்கும்போதே வெள்ளை ஜிப்பாவோடு பிறக்கவில்லை. பள்ளிக்கு அணிந்து செல்ல மாற்றுச் சீருடை வாங்கும் வசதி அவருக்கு இல்லை. உயர் பள்ளி செல்லும் வரை செருப்பு அணியும் சூழல் இன்றி கரட்டிலும் மேட்டிலும் கல்லிலும் முள்ளிலும் நடந்து கல்வி கற்றவர் அவர். இந்திய வரைபடத்தில் இடம்பெறாத ஒரு கிராமத்தில் பிறந்து இந்தியாவின் புகழ் மிக்க நபர்களில் ஒருவராக அவர் உயர்ந்திருப்பது இன்றைய தொழில்நுட்ப தலைமுறைக்குத் தெரியாது.

kb

படிக்கும் பிராயத்தில் வறுமையின் காரணமாக வீட்டில் போதிய உணவில்லாத காரணத்தால் தோட்டத்தில் இருந்த தக்காளிகளைப் பறித்துத் தின்றுவிட்டு பரீட்சை எழுதபோனவரைப் பற்றித் தெரியாது. கல்லூரியில் வெறும் 150 ரூபாய் கட்டணம் செலுத்த அவர் எத்தனை ஊர்களுக்கு கடன் கேட்கச் சென்றார் என்ற அவமானம் தெரியாது.

அப்பாவும் அம்மாவும் தங்கள் காதல் திருமணத்திற்கு பிறகு சென்னை திருவல்லிக்கேணியில் ஒரு மின்விசிறி கூட இல்லாத வாடகை வீட்டில் தங்கள் வாழ்க்கையைத் தொடங்கியது தெரியாது. தமிழ்க்கவிஞராக ஒருவர் தமிழ் பேராசிரியராக ஒருவர் என இருவருமே தமிழோடு தமிழாகி அந்தத்தமிழின் தொட்டிலில் இரண்டு குழந்தைகளை வளர்த்த வரலாறு தெரியாது.

அங்குலம் அங்குலமாக அவர் தன் வாழ்க்கையைச் செதுக்கியிருக்கிறார். கிராமங்கள் முற்றிலும் புறக்கணிக்கப்படுகிற நவீன சூழலில் ஒரு கடைக்கோடி கிராமத்தில் இருந்து எழுந்த அவருடைய வாழ்வு இன்று எத்தனையோ இளைஞர்களுக்கு ஒரு தன்னம்பிக்கை முன்னுதாரணம். அவரது எழுத்தைப் பற்றி வெளிவராத ஆய்வுகள் இல்லை. அவை பெறாத விருதுகள் இல்லை. ஆனால் அவரது எழுத்தை விட அவரது வாழ்க்கை பெருமை வாய்ந்தது. பாடம் நிறைந்தது. அவரது பெருமைகளை அழுக்குப்படுத்த நினைக்கிறவர்கள் அனுதாபத்திற்குரியவர்கள்.

அவர் மீது தற்போது சுமத்தப்படும் பழிகளுக்கு அரசியல் உள்நோக்கம் இருப்பதாக சில சொல்கிறார்கள். அப்படி இல்லை என்று சிலர் வாதாடுகிறார்கள். அது எப்படியும் இருக்கட்டும். அவை சட்டரீதியாக பதிவாகட்டும். உண்மை வெல்லட்டும். இந்தப் பிரச்சனையை ஒரு பிரம்மாண்டமான பொழுதுபோக்காகச் சித்தரித்து நாட்டில் நிகழும் வேறு பல பிரச்சனைகளில் இருந்து நம்மை முற்றிலும் திசை திருப்பும் முயற்சிகளூக்கு யாரும் இடம் கொடுக்க வேண்டாம் என தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.’

Vairamuthu meetoo kabilan vairamuthu
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe