Advertisment

தலைநகரில் கொலையில் விழும் தலைகள்! -சென்னை போலீஸ் டென்ஷன்!

k

நாளும் பரப்பாக இயங்கும் தலைநகர் சென்னையில், இப்போது கொலைகளுக்குப் பஞ்சமில்லை என்றே எண்ணத் தோன்றுகிறது. கடந்த ஒரு வாரமாக தினமும் கொலை விழுந்த வண்ணம் உள்ளது. ஒவ்வொரு கொலையையும் சர்வ சாதாரணமாக அரங்கேற்றிவிடுகின்றனர்.

Advertisment

குற்றங்களைத் தடுப்பதற்கு சென்னை காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவந்தாலும், அடுத்தடுத்து நிகழும் கொலைச் சம்பவங்கள் சென்னையை ரத்த பூமி ஆக்கிவருகிறது.

Advertisment

சம்பவம்: 1

கொலை வழக்குக் குற்றவாளி கொடூர கொலை!

கடந்த 21-ந்தேதி, சென்னை அரும்பாக்கத்தில் உள்ள வைஷ்ணவா கல்லூரி அருகிலுள்ள உணவகத்தில், ஒரு கும்பல் சாப்பிடச் சென்றது. அப்போது, கண்ணிமைக்கும் நேரத்தில் மற்றொரு கும்பல் பயங்கர ஆயுதங்களுடன் அவர்களைச் சுற்றி வளைத்தது. நிலைமையை உணர்ந்து எல்லோரும் தப்பியோட, சூளைமேட்டை சேர்ந்த குமரேசன் மட்டும் சிக்கிக் கொண்டார். கத்தி, அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்கள் குமரேசனை பதம் பார்த்தன. அந்த இடத்திலேயே குமரேசன் உயிர் பிரிந்து விட்டதை உணர்ந்த அந்தக் கும்பல், சர்வ சாதாரணமாக அங்கிருந்து கிளம்பிச் சென்றுவிட்டது. இந்தக் காட்சிகள் எல்லாம் அந்த ஏரியா சிசிடிவி கேமராவில் தெளிவாக பதிவாகி இருக்கிறது.

k

காவல் துறை நடத்திய விசாரணையில், கொலையான குமரேசன் மீது, 2015-ஆம் ஆண்டில் யுவராஜ் என்பவரையும், அண்மையில் மடிப்பாக்கத்தில் சிவக்குமார் என்பவரையும் கொலை செய்த வழக்குகள் நிலுவையில் உள்ளன. நடந்த கொலைகளுக்காக சகாயராஜ் என்பவர் தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து குமரேசனைத் தீத்துக்கட்டியது தெரியவந்திருக்கிறது.

d

மொத்தம் 9 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. மூன்று நாட்கள் நடத்திய தேடுதல் வேட்டையில், சகாயராஜ் (33), காது ஸ்ரீதர்(25), கார்த்திக்(என்ற)டோரி கார்த்திக்(34), கானாகுரு(என்ற) மினேஷ்குமார்(29) ஆகிய 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் “யுவராஜைக் கொன்ற வழக்கில் பழிக்குப்பழி வாங்க, அன்றைய தினம் பூந்தமல்லி நீதிமன்றத்தில் வைத்தே கொலை செய்யத் திட்டம் போட்டோம். ஆனால், நீதிமன்றத்தில் நிலைமை சரியில்லை. அதனால், பின் தொடர்ந்து வந்து அரும்பாக்கத்தில் கச்சிதமாக கதையை முடித்தோம்” என, கொலையாளிகள் வாக்குமூலம் அளித்துள்ளனர். இந்தக் கொலை வழக்கில் தொடர்புடைய சுந்தர், விஜய், ஆடு ஸ்ரீதர்,பாம்பு வினோத்,மாவா வெங்கடேசன் ஆகியோர் தலைமறைவாகிவிட, போலீசார் அவர்களைத் தேடிவருகின்றனர்.

சம்பவம்: 2

வாய்ச் சவடால்! வந்த வினை!

கடந்த 20-ந்தேதி, சென்னை ஓட்டேரியைச் சேர்ந்த ரவுடி குமரன்(22) தனது வீட்டருகே கொடூரமாகக் கொலை செய்யப்பட்டார். இந்தக் கொலையும் சிசிடிவியில் பதிவாகி உள்ளது. கடந்த ஆண்டு மனைவி இறந்துவிட்ட நிலையில், மதுவுக்கு அடிமையாகிப் போனான் குமரன். தொடர்ந்து சிறு சிறு திருட்டு, சூதாட்டம் போன்ற குற்றச் செயல்களைச் செய்த குமரன், சில நாட்களுக்கு முன் வெளியே வந்துள்ளான்.

குமரனுக்கும் அதே பகுதியைச் சேர்ந்த அப்பு என்பவனுக்கும் முன்விரோதம் இருந்துள்ளது. அப்புவின் பெரியப்பா மீது தாக்குதல் நடத்திய குமரன், “முடிந்தால் உன் மகனை (அப்பு) என்னிடம் மோதிப் பார்க்கச் சொல்” என்று சவால் விட்டுள்ளான். அதனால் சினம் கொண்ட அப்பு, தனது நண்பர்களுடன் சேர்ந்து குமரனை வெட்டிக் கொன்றுவிட்டான். இச்சம்பவத்தில் தொடர்புடைய அப்பு, பரத், அருண்குமார், தேவேந்திரன், நரேந்திரன், பிரவீன்குமார், சிற்பி என 7 பேரை காவல் துறை கைது செய்து ‘கை’ கட்டு போட்டு சிறைக்கு அனுப்பியது.

சம்பவம்: 3

படுப்பதற்கு இடம்பிடிப்பதில் நடந்த கொலை!

சென்னை கொண்டித்தோப்பைச் சேர்ந்த கோவிந்தராஜ் (வயது 52) லாரியில் இருந்து சரக்கு ஏற்றி இறக்கும் கூலித்தொழில் செய்து வந்தார். கடந்த 23-ஆம் தேதி, இவரும் சக தொழிலாளர்கள் அன்பழகன், சுரேஷ் ஆகிய மூவரும் மாதவரம் ரவுண்டானா - லாரி எடை மேடை அருகிலுள்ள கடையின் முன் உறங்கச் சென்றனர்.

அப்போது படுப்பதற்கு இடம்பிடிப்பதில் 3 பேருக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டுள்ளது. கோவிந்தராஜனை மற்ற இருவரும் சேர்ந்து கல்லால் தாக்கி உள்ளனர். இதில் சம்பவ இடத்திலேயே கோவிந்தராஜன் உயிரிழந்துவிட்டார். அன்பழகன் (வயது 33) சுரேஷ் (வயது 30) ஆகிய இருவரையும் போலீஸார் கைது செய்துள்ளனர்.

சம்பவம்: 4

t

இரு உயிர்களைக் காவு வாங்கிய சந்தேகம்!

சென்னை வண்ணாரப்பேட்டையை சேர்ந்த துக்காராம்-தாராபாய் தம்பதியருக்கு 3 குழந்தைகள் உள்ளனர். துக்காராமைக் காட்டிலும் தாராபாய் சற்று அழகானவர். இந்த அழகே அவர்களுக்கு இடையே விரிசலை ஏற்படுத்தியது. தன்னை விட்டு சாராபாய் பிரிந்து சென்றுவிடுவாரோ என்ற எண்ணம் அவரை வாட்டியது. ஒரு கட்டத்தில், மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு அவ்வப்போது தகராறு செய்து வந்தார். அக்கம்பக்கத்தினர் தலையிட்டு சமாதானம் செய்வது வாடிக்கையானது. இந்த நிலையில், கடந்த 22-ஆம் தேதி இரவு சாராபாய் தலையில் கிரைண்டர் கல்லைத் தூக்கிப் போட்ட துக்காராம், தானும் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார். இவர்களின் மூன்று குழந்தைகளின் எதிர்காலம் கேள்விக்குறியாகிவிட்டது.

சம்பவம்: 5

பெண்ணின் தலையும் உடலும் எங்கே?

மற்ற கொலைகளில் எல்லாம் சிசிடிவி மூலம் குற்றவாளிகள் உடனடியாகச் சிக்கி விட்டனர். ஆனால், குப்பைக் கிடங்கில் கண்டெடுக்கப்பட்ட பெண்ணின் கை, கால் யாருடையது என்பதுதான், சென்னை போலீஸாருக்குப் பெரிய தலைவலியாக உள்ளது. மூன்று நாட்களுக்கு முன், பெருங்குடி குப்பைக் கிடங்கில், லாரியிலிருந்து குப்பையை கொட்டும் போது, துண்டிக்கப்பட்ட ஒரு கையும், 2 கால்களும் கீழே விழுந்திருக்கின்றன. கோடம்பாக்கம் மண்டலத்தில் அள்ளப்பட்ட குப்பை என்று லாரியின் ஓட்டுனர் கூறியிருக்கிறார். அதனால், அந்தப் பகுதியில் யாராவது மாயமானார்களா? இதர உடல் பாகங்கள் வேறு இடத்தில் உள்ளனவா? என்று போலீஸார் தேடி வருகின்றனர். இதுவரையிலும் துப்புக் கிடைக்காததால், காக்கிகள் உச்சக்கட்ட டென்ஷனில் உள்ளனர்.

2010-ல் மார்க்சிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான டபுள்யூ. ஆர்.வரதராஜன் திடீரென மாயமானார். சில நாட்களில் சென்னை போரூர் ஏரியில் அவரது சடலம் மீட்கப்பட்டது. ராயப்பேட்டை சவக்கிடங்கில் வைக்கப்பட்டிருந்த வரதராஜனின் உடலைப் பார்த்த உறவினர்கள் அது வரதராஜன் இல்லை என்று தெரிவித்தனர். அதனால், அறிவியல் பூர்வமாக நிரூபிக்க வேண்டியிருந்தது. அமெரிக்கா செல்வதற்கு வரதராஜன் விசா எடுத்தபோது கை ரேகை பதிவு செய்யப்பட்டது. அந்த ரேகையைத் தூதரக அதிகாரிகளிடமிருந்து பெற்ற போலீஸ் அதிகாரிகள் ஒப்பிட்டுப் பார்த்து இறந்தது வரதராஜன் தான் என்பதை உறுதிப்படுத்தினர்.

இந்த வழக்கில், பெண்ணின் மற்ற உடல் பாகங்கள் கிடைத்தால் அந்த முறையைப் பின்பற்றலாம். தற்போது கண்டெடுக்கப்பட்டுள்ள அந்தப் பெண்ணின் கை ரேகை ஆதார் பதிவுக்காக நிச்சயம் எடுக்கப்பட்டிருக்கும். எனவே, ஆதார் பதிவில் இந்தக் கையின் ரேகை ஒத்துப் போனால், இறந்தது யார் என்பதை அறியமுடியும். இந்த முறையில் துப்பு துலக்குவதற்கு சில காலம் ஆகும் என்கிறது காவல்துறை.

மொத்தத்தில், சென்னை காக்கிகளுக்குப் பெரும் சவாலாகத்தான் இருக்கின்றன இதுபோன்ற கொலை வழக்குகள்!

murder
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe