Money seized from home of Nainnar Nagendran supporter DMK sensational complaint

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு நாடு முழுவதும் ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாக தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால் வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசு பொருட்கள் கொடுப்பதை தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டுள்ள அமைச்சர்கள் மற்றும் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் வாகனங்களை தேர்தல் பறக்கும் படையினர் தீவிரமாக சோதனை செய்து வருகின்றனர்.

இத்தகைய சூழலில் சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து திருநெல்வேலிக்கு செல்லும் ரயிலில் தாம்பரம் ரயில் நிலையத்தில் இருந்து நேற்று (06.04.2024) இரவு உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்ல முயன்ற ரூ. 4 கோடி மதிப்பிலான ரொக்கம் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டது. 6 பைகளில் கட்டுக்கட்டாக இருந்த 500 ரூபாய் நோட்டுகளை பறக்கும் படையினர் அதிரடியாக பறிமுதல் செய்தனர்.

இதனையடுத்து பணத்தை எடுத்து வந்த புரசைவாக்கம் தனியார் விடுதி மேலாளரும் பாஜக உறுப்பினருமான சதீஷ், அவரின் சகோதரர் நவீன் மற்றும் லாரி ஓட்டுநர் பெருமாள் ஆகிய 3 பேரும் கைது செய்யப்பட்டனர். மேலும் திருநெல்வேலி மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு இந்த பணத்தை கொண்டு செல்ல முயன்றதாக மூவரும் பகீர் வாக்குமூலம் கொடுத்துள்ளதாக தகவல் வெளியாகி இருந்தது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும், கைது செய்யப்பட்ட மூவர் மீதும் தேர்தல் பறக்கும் படை அளித்த புகாரின் பேரில் 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

Advertisment

Money seized from home of Nainnar Nagendran supporter DMK sensational complaint

மேலும் இந்த சம்பவம் தொடர்பாக நயினார் நாகேந்திரனுக்கு சொந்தமான இடங்களில் போலீசார் அதிரடி சோதனை மேற்கொண்டு வருகின்றனர். சென்னை திருவல்லிக்கேணி மற்றும் கீழ்ப்பாக்கத்தில் உள்ள தனியார் தங்கும் விடுதியில் போலீசார் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். சென்னை சாலிகிராமத்தில் நயினார் நாகேந்திரனுக்கு மிகவும் நெருக்கமானவர் என கூறப்படும் முருகன் என்பவரது வீட்டில் போலீசார் மற்றும் பறக்கும் படையினர் சோதனை நடத்தினர். அதன் ஒரு பகுதியாக சம்பந்தப்பட்ட ஹோட்டலுக்கு மத்திய சென்னை தொகுதி தேர்தல் நுண் பார்வையாளர் சாகுல் ஹமீது நேரில் வந்து விசாரணை மேற்கொண்டார்.

Money seized from home of Nainnar Nagendran supporter DMK sensational complaint

Advertisment

அதனைத் தொடர்ந்து இந்த விவகாரம் குறித்து வருமான வரித்துறை விசாரணைக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது என தமிழக தலைமைத்தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு தகவல் தெரிவித்திருந்தார். இந்நிலையில் திருநெல்வேலியில் நயினார் நாகேந்திரனின் ஆதரவாளர் கணேஷ் மணியின் வீட்டில் ரூ. 2 லட்சம் ரொக்கம், 100 வேட்டிகள், 44 நைட்டிகள் உள்ளிட்ட பரிசுப் பொருட்கள் சிக்கியுள்ளன. அதே சமயம் தமிழ்நாட்டில் பாஜக வேட்பாளர்கள் போட்டியிடும் அனைத்து தொகுதிகளிலும்பண விநியோகம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. எனவே பாஜக வேட்பாளர்கள் தொடர்புடைய அனைத்து இடங்களிலும் சோதனையை தீவிரப்படுத்த வேண்டும் என மாநில தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகுவிடம் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி அக்கட்சியின் சார்பில் புகார் மனு கொடுத்துள்ளார்.