ADVERTISEMENT

கச்சத்தீவின் அளவை விட சீனா ஆக்கிரமிப்பு அதிகம் - ப.சிதம்பரம்!

11:53 AM Apr 01, 2024 | prabukumar@nak…

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அதே சமயம் தமிழக அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்களைத் தொடங்கியுள்ளன. இத்தகைய சூழலில் கச்சத்தீவு விவகாரத்தை பா.ஜ.க. தற்போது கையிலெடுத்து காங்கிரசையும், தி.மு.க.வையும் கடுமையாக விமர்சித்து வருகிறது.

ADVERTISEMENT

இதனையொட்டி பிரதமர் மோடி நேற்று (31.03.2024) எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டிருந்த பதிவில், “கச்சத்தீவை காங்கிரஸ் கட்சி எப்படி கொடுத்தது என்பதை புதிய உண்மைகள் வெளிப்படுத்துகின்றன. இது ஒவ்வொரு இந்தியரையும் கோபப்படுத்தியது. மக்கள் மனதில் மீண்டும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது காங்கிரஸை நாம் ஒருபோதும் நம்ப முடியாது என்று. இந்தியாவின் ஒற்றுமை, ஒருமைப்பாடு மற்றும் நலன்களை பலவீனப்படுத்துவது குறித்து காங்கிரஸ் 75 ஆண்டுகளாக உழைத்து எண்ணிக்கொண்டிருக்கிறது” எனக் குறிப்பிட்டிருந்தார்.

ADVERTISEMENT

அதனைத் தொடர்ந்து பிரதமர் மோடி கச்சத்தீவு விவகாரம் குறித்த ஆங்கில நாளேட்டின் கட்டுரையை குறிப்பிட்டு எக்ஸ் சமூக வலைத்தளத்தில் இன்று (01.04.2024) வெளியிட்டுள்ள பதிவில், “தமிழகத்தின் நலனைக் காக்க தி.மு.க. எதுவும் செய்யவில்லை. கச்சத்தீவில் வெளிவரும் புதிய விவரங்கள் தி.மு.க.வின் இரட்டை வேடத்தை முற்றிலுமாக அவிழ்த்துவிட்டுள்ளன. காங்கிரசும், தி.மு.க.வும் குடும்ப கட்சிகள். அவர்கள் தங்கள் சொந்த மகன்கள் மற்றும் மகள்கள் உயர வேண்டும் என்று மட்டுமே கவலைப்படுகிறார்கள். அவர்கள் வேறு யாரையும் பொருட்படுத்துவதில்லை. கச்சத்தீவு மீதான அவர்களின் அடாவடித்தனம், குறிப்பாக நமது ஏழை மீனவர்கள் மற்றும் மீனவப் பெண்களின் நலன்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது” எனத் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் பிரதமர் மோடிக்கு பதிலடி கொடுக்கும் வகையில் முன்னாள் மத்திய அமைச்சரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ப.சிதம்பரம் எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “கடந்த 1974ஆம் ஆண்டில் இரு நாடுகளிடயே நடந்த பரிமாற்றத்தைத் மோடி இப்பொழுது ஏன் கிளப்புகிறார்?. கச்சத்தீவின் பரப்பளவு 1.9 சதுர கி்.மீ. அதனைத் தந்து 6 லட்சம் இலங்கைத் தமிழர்களை மீட்டு அவர்களுக்குச் சுதந்திரமும் புது வாழ்வும் தந்தவர் இந்திரா காந்தி. மோடி செய்தது என்ன?. 2000 சதுர கி.மீ இந்திய பூமியைச் சீனா அபகரித்திருக்கிறது. ‘எந்தச் சீனத் துருப்புகளும் இந்திய மண்ணில் இல்லை’ என்று சொல்லி சீனாவின் ஆக்கிரமிப்பை மோடி நியாயப்படுத்தினார். மோடியின் பேச்சை சீனா உலகமெங்கும் பரப்பியது. சீனா அபகரித்துள்ள நிலம் ஒரு சிறிய தீவை விட 1000 மடங்கு பெரியது. நல்லுணர்வுடன் பரிமாற்றம் வேறு, காழ்ப்புணர்வுடன் அபகரிப்பது வேறு” எனக் குறிப்பிட்டுள்ளார். இதற்கிடையே பிரதமர் மோடிக்கு கச்சத் தீவு விவகாரம் தொடர்பாக தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் மூன்று கேள்விகளை எழுப்பி இருந்தது குறிப்பிடத்தக்கது.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT