Minister M.R.K. Panneerselvam announced Farmer Welfare Service Centers will be set up across Tamil Nadu

தமிழக சட்டப்பேரவையில் 2025 - 2026ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையைத் தமிழக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு நேற்று (14.03.2025) தாக்கல் செய்தார். இதில் பல்வேறு அறிவிப்புகள் வெளியாகின. தமிழக அரசு தாக்கல் செய்த நிதிநிலை அறிக்கை குறித்து தமிழக அரசியல் தலைவர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், தமிழக சட்டப்பேரவையில் இன்று (15-03-25) 2025-2026ஆம் ஆண்டிற்கான வேளாண் பட்ஜெட்டை இன்று காலை 9:30 மணிக்கு வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். பட்ஜெட் உரையை வாசித்த அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம், “உழவர்கள் பாதுகாக்கப்பட்டால் அவர்கள் மக்களை பாதுகாப்பார்கள். உழவர்கள் வாழ்வில் நிதிநிலை அறிக்கை உழவர்களின் வளர்ச்சியைக் கூட்டும் என நம்புகிறேன். இந்திய அளவில் கேழ்வரகு உற்பத்தியில் தமிழ்நாடு முதல் இடத்தில் உள்ளது. மக்காச்சோளம், எண்ணெய், வித்துக்கள் கரும்பு ஆகியவற்றில் இரண்டாம் இடத்தில் தமிழ்நாடு உள்ளது. நிலக்கடலை, குறு தானியங்கள் உற்பத்தியில் தமிழ்நாடு மூன்றாம் இடத்தில் உள்ளது. இதுவரை 1.86 லட்சம் மின் இணைப்புகள் உழவர் பெருமக்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. கடந்த 4 ஆண்டுகளில் விவசாயிகளுக்கு ரூ.1,631 கோடி நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது. 4 ஆண்டுகளில் 55,000 உழவர்களுக்கு வேளாண் இயந்திரங்கள் மானிய விலையில் வழங்கப்பட்டுள்ளன.

Advertisment

தமிழ்நாட்டில் ஆண்டுதோறும் 4000 பட்டதாரிகள், 600க்கும் மேற்பட்ட பட்டைதாரர்களும் வேளாண் கல்வியை நிறைவு செய்கின்றனர். இவர்களது படிப்பறிவும், தொழில்நுட்பத் திறனும் விவசாயிகளுக்கு உதவியாக இருக்கும் வகையில், 1,000 உழவர் நலச் சேவை மையங்கள் அமைக்கப்படும். ரூ.10 லட்சம் முதல் ரூ.20 லட்சம் மதிப்பிலான இம்மையங்கள் அமைத்திட 30% மானியமாக ரூ.3 லட்சம் முதல் ரூ.6 லட்சம் வரை வழங்கப்படும். இதற்கென ரூ.42 கோடி மானிய நிதி ஒதுக்கீடு செய்யப்படும். இந்த மையங்களில், பயிர் உற்பத்தி பெருக்க, பூச்சிகளை கட்டுப்படுத்த ஆலோசனை வழங்கப்படும். டெல்டா அல்லாத மாவட்டங்களில் பயிர் சாகுபடி அதிகரிக்க சிறப்பு தொகுப்பு திட்டத்துக்காக ரூ.102 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

நெல் சாகுபடி பரப்பை அதிகரிக்க குறுவை சாகுபடி சிறப்பு தொகுப்புக்காக ரூ.58 கோடி ஒதுக்கீடு செய்யப்படும். இந்த சிறப்பு தொகுப்பின் கீழ் நடவு மானியம் உள்ளிட்டவை வழங்கப்படும். 2025-2026ஆம் ஆண்டில், 3 லட்சம் ஏக்கர் பரப்பளவில் கோடை உழவு செய்திட ஹெக்டருக்கு 2,000 வீதம் மானியம் வழங்கிட ரூ.24 கோடி மாநில நிதி ஒதுக்கீடு செய்யப்படும். சுமார் 63,000 மலைவாழ் உழவர்கள் பயன்பெரும் வகையில் குறுதானிய சாகுபடி, காய்கறி பயிர்களை பரப்பி விரிவாக்கம், வேளாண் இயந்திரங்கள், நுண்ணுயிர் பாசனம், ஒருங்கிணைந்த பண்ணையம் போன்றவற்றுக்கு மானியம் வழங்கிட ரூ.22.80 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு மலைவாழ் முன்னேற்ற திட்டம் செயல்படுத்தப்படும். மேலும், இப்பயனாளிகளுக்கு உழவர் அட்டை வழங்கிட நடவடிக்கை எடுக்கப்படும். இந்த திட்டத்தால் கோவை, நீலகிரி, சேலம், கன்னியாகுமரி உள்ளிட்ட 20 மாவட்டங்களில் உள்ள மலைவாழ் உழவர் பயன்பெறுவார்கள்” எனத் தெரிவித்தார்