மனதளவில் சோர்ந்துபோயும், உடலளவில் நொந்துபோயும் இருக்கிறேன் என சிறையில் இருந்து வீடு திரும்பிய மருத்துவர் கஃபீல்கான் தெரிவித்துள்ளார்.

Advertisment

kafeel

உத்தரப்பிரதேசம் மாநிலம் கோரக்பூரில் உள்ளது பி.ஆர்.டி. அரசு மருத்துவமனை. இந்த மருத்துவமனையில் உள்ள மூளைவீக்க நோயாளிகள் சிகிச்சைப் பிரிவில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 10ஆம் தேதி ஆக்சிஜன் சிலிண்டர்கள் பற்றாக்குறை ஏற்பட்டதால் பச்சிளம் குழந்தைகள் கொத்துக்கொத்தாக உயிரிழந்தன. இந்த சம்பவத்தின் போது தனது சொந்த செலவில் ஆக்சிஜன் சிலிண்டர்கள் வாங்கி குழந்தைகளைக் காப்பாற்றிய மருத்துவர் கஃபீல்கான், சில தினங்களில் கிரிமினல் பிரிவில் வழக்குப் பதியப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். பலமுறை ஜாமீன் கோரி விண்ணப்பித்தும் அவருக்கு மறுக்கப்பட்ட நிலையில், தற்போது அலகாபாத் உயர்நீதிமன்றம் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது.

Advertisment

இதையடுத்து, 8 மாதங்கள் சிறையில் கழித்த மருத்துவர் கஃபீல்கான் நேற்று வீடுதிரும்பினார். இந்நிலையில் நேற்று தனது வீட்டில் வைத்து பேட்டியளித்த அவர், ‘மனதளவில் சோர்வடைந்துள்ளேன், உணர்வுரீதியாக ஏதுமற்றவனாக இருக்கிறேன், உடலளவில் நோயுற்றவனாக வாடுகிறேன்.. ஆனால், இதெல்லாவற்றையும் தாண்டி 8 மாதங்களுக்குப் பிறகு வீடு திரும்பியிருப்பது ஓரளவிற்கு ஆறுதலைத் தருகிறது. 800 கைதிகள் மட்டுமே தங்கும் வசதிகள் உள்ள கோரக்பூர் சிறையில், இரண்டாயிரம் பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர்’ என்றார்.

Advertisment

மருத்துவமனையில் நடந்த விபத்து குறித்து பேசிய அவர், ‘ஒரு தந்தையாகவும், மருத்துவராகவும், இந்திய குடிமகனாகவும்என்ன செய்யவேண்டுமோ அதையே நானும் செய்தேன். என் வேலை குழந்தைகளுக்கு சிகிச்சை அளிப்பது மட்டுமே என்றாலும், ஆக்சிஜன் சிலிண்டர்கள் பற்றாக்குறை ஏற்பட்டபோது அவற்றை ஏற்பாடு செய்யும் கூடுதல் வேலையையும் நானே செய்தேன். சிறையில் இருந்தபடி நான் என்ன தவறு செய்தேன் என்று எனக்குள் நானே கேட்டுக்கொண்டு இருப்பேன். என் எதிர்காலம் முதல்வர் யோகியின் முடிவிலேயே இருக்கிறது. என்மீதான தடையை அவர்ரத்து செய்தால் மீண்டும் மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை அளிக்க தயாராக இருக்கிறேன்’ என உருக்கமாக பேசியுள்ளார்.