/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/600_101.jpg)
தலைமுடி வளர மருத்துவம் அளிப்பதாக விளம்பரம் வந்ததை பார்த்து சிகிச்சை எடுத்ததில் 0.01% கூட முடி வளரவில்லை என்றும், தான் இழந்த ரூபாய் 58,000 பணத்தை திரும்ப தர மறுக்கிறார்கள் என்றும், தனக்கு சிசிச்சை அளித்தவர் தலைமுடி நிபுணர் இல்லை, பல் டாக்டர் என்றும் புகார் மனு கலெக்டரிடம் கொடுத்துள்ளார் இளைஞர் ஒருவர்.
திருச்சி காட்டுர் பகுதியை சேர்ந்த மிதுன் என்பவர் மின்சார வாரிய தற்காலிக தட்டச்சு பணியாளராக பணியாற்றி வருகிறார். இவர் தன்னுடைய தலையின் முன்பகுதியில் முடி வளருவதற்காக சிகிச்சை செய்து கொள்ள விரும்பியுள்ளார்.
இந்நிலையில் கலர்ஸ் என்ற உடல் எடை குறைக்கும் தனியார் நிறுவனம் புதிதாக முடி வளர்வதற்கான சிகிச்சையை அறிமுகப்படுத்தி உள்ளது என்று அறிந்து விளம்பரத்தை பார்த்து திருச்சி சாலை ரோட்டில் செயல்பட்டு வரும் கலர்ஸ் நிறுவனத்தில் சிகிச்சைக்காக 2018 ஆம் ஆண்டு சேர்ந்து 8 தவணையாக சிகிச்சைக்கு சென்றும் எந்த பலனும் இல்லை என்று கூறியுள்ளார்.
தொடர்ந்து நம்மிடம் பேசிய அவர், ''என்னை பரிசோதித்த மருத்துவர் மஞ்சுளா 12 தவணையாக சிகிச்சைக்கு வர வேண்டும் என்றும், 6வது முறை சிகிச்சைக்கு பிறகு முடி வளருவதில் நல்ல முன்னேற்றம் இருக்கும் என்று கூறினார்.ஆனால் 8 வது தவணை சிகிச்சையும் முடிந்துவிட்டது. இதுவரை 0.01% கூட முடி வளரவில்லை. இதுவரை ரூபாய் 58,000 பணம் கட்டியுள்ளேன். எந்தவித முன்னேற்றமும் இல்லாததால் நிறுவனத்திடம் கேள்வி எழுப்பினேன். அவர்களிடம் எந்த பதிலும் சரியாக வழங்கப்படவில்லை.
அந்த நிறுவனம் குறித்து விசாரித்ததில் பல் மருத்துவர் மஞ்சுளா தான் எனக்கு மருத்துவம் பார்த்தார் என்பதை அறிந்த நான் என்னுடைய பணத்தை திருப்பி கேட்டேன். ஆனால் அவர்கள் திருப்பி தர வேண்டும் என்றால் புதிதாக ஒருவரை சேர்த்து விட்டால் தருகிறோம் என்கின்றனர். எனவேதான் இன்று மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளேன். பலரது வாழ்க்கை இவர்களால் நாசமடைந்துள்ளது. அவர்களை காப்பாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்று கேட்டு கொண்டுள்ளார்.
இளைஞரின் இந்த புகாரைப் பெற்ற கலெக்டர் அலுவலக அதிகாரிகள் அதிர்ச்சியடைந்தனர். இந்தப் புகார் குறித்து கலெக்டர் அலுவலகம் விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்கும் என்று நம்பிக்கையுடன் உள்ளார் அந்த இளைஞர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)