Skip to main content

மாணவர்களோடு சேர்ந்து பெற்றோரையும் குழப்பத்தில் ஆழ்த்தியிருக்கும் நீட் தேர்வு!

Published on 01/03/2018 | Edited on 01/03/2018

மருத்துவப்படிப்பிற்கான நீட் தேர்வுகள் இந்த ஆண்டு நடைபெறவுள்ள நிலையில், கடந்தகால நினைவுகள் மற்றும் தற்கால சிக்கல்கள் என ஒன்றிணைந்து, நீட் தேர்விற்காக விண்ணப்பிக்கும் மாணவர்கள் மற்றும் அவர்களது பெற்றோர்களை இப்போதே அச்சுறுத்தல்களுக்கு ஆளாக்கியுள்ளன.

 

கடந்த ஆண்டு மே 7ஆம் தேதி தமிழகம் முழுவதும் மருத்துவப் படிப்பிற்கான நீட் தேர்வுகள் நடத்தப்பட்டன. தேர்வில் கலந்துகொள்ளச் சென்ற மாணவர்களுக்கு பேரதிர்ச்சி காத்திருந்தது. தேர்வு வளாகத்திற்குள் செல்வதற்கு முன் பல கெடுபிடிகள் கையாளப்பட்டன. முழுக்கை சட்டைகள் அரைக்கை சட்டைகளாக கிழிக்கப்பட்டன. மாணவிகளின் அணிகலன்கள் கலையப்பட்டன. சில தேர்வு மையங்களில் மாணவிகளின் உள்ளாடைகள் வரை சோதனை நடத்தப்பட்டது. நீட் நடத்தப்படுவதற்கு முன்பே இத்தனை கொடுமை என்றால், தேர்வு எழுதும் மொழி உள்ளிட்ட பல விஷயங்களில் மாணவர்கள் குழம்பிப்போனார்கள்.

 

neet

 

நீட் தேர்வுக்கு எதிரான கண்டனக் குரல்கள் இப்போதும் எழுந்துகொண்டிருக்கும் சூழலில், வரும் மே 6ஆம் தேதி நீட் தேர்வு மீண்டும் நடைபெறவுள்ளது. நீட் தேர்வுக்கு ஆன்லைன் மூலமாக விண்ணப்பிப்பதில் பல குழப்பங்களை சந்தித்து வருகின்றனர் பல மாணவர்களும் அவர்களது பெற்றோர்களும். இனிஷியல் அல்லது துணைப்பெயர், உடை அணியும் முறை, தேர்வு எழுதும் மொழி என பல குழப்பங்கள் அவர்களை வாட்டுகின்றன.

 

விண்ணப்பங்களில் விண்ணப்பதாரரின் பெயரில் Surname எனப்படும் துணைப்பெயரைப் பயன்படுத்துவது தொடர்பான வதந்தி சமீபத்தில் பரப்பப்பட்டது. தமிழகத்தைப் பொருத்தவரை மதிப்பெண் சான்றிதழ்கள், மாற்றுச் சான்றிதழ் என அனைத்திலும் இனிஷியலைப் பதிவிடுவது வழக்கம். ஆனால், ஆதார் அட்டையில் தந்தையின் முழுப்பெயரும் இடம்பெற்றுள்ளதால் இனிஷியலா, முழுப்பெயருமா எனத் தெரியாமல் ஈ-சேவை மையங்களை நீட் விண்ணப்பதாரர்கள் அனைவரும் நாடி வருகின்றனர்.

 

இன்று முதல் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வுகள் தொடங்கியுள்ளன. இந்தத் தேர்வுகள் முடிந்தவுடன் நீட் பயிற்சி மையங்களில் விடுப்பு இன்றி பயிற்சி அளிக்கப்படும் என தமிழக பள்ளிக்கல்வித்துறை தெரிவித்திருக்கிறது.

 

neet

 

ஏற்கெனவே, மன உளைச்சலைச் சந்தித்திருக்கும் மாணவர்கள் மீண்டும் ஒரு மிகப்பெரிய இக்கட்டான சூழலில் சிக்கித் தவிப்பதைப் பார்க்கமுடியாது. சமூக நீதியைப் பாழாக்கும் இந்த நீட் தேர்வை தமிழகத்தில் ரத்து செய்யவேண்டும் என்பதே கல்வியாளர்கள் உள்ளிட்ட பலரின் கோரிக்கையாக இருக்கிறது. 

சார்ந்த செய்திகள்