Manipur; Divya Sathyaraj contributes to the affected people

இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மணிப்பூரில் பைரன் சிங் தலைமையிலான பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த மாநிலத்தில் பெரும்பான்மை சமூகமாக உள்ள மைத்தேயி சமூகத்தினர் தங்களைப் பழங்குடியினர் பட்டியலில் சேர்த்துச் சலுகைகள் வழங்க வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். இதற்கு அந்த மாநிலத்தின் பழங்குடி சமூகத்தினரான குக்கி மற்றும் நாகா இன மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதனால், மணிப்பூர் மாநிலத்தில் தொடர்ந்து வன்முறை சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. 60,000க்கும் மேற்பட்ட மக்கள் தங்கள் வீடுகளை இழந்து முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

Advertisment

இந்நிலையில், நடிகர் சத்யராஜின் மகளும் ஊட்டச்சத்து நிபுணருமான திவ்யா சத்யராஜ், மணிப்பூரில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ முடிவு செய்து, பல்வேறு கட்ட ஆய்வுக்குப் பிறகு அந்த மாநிலத்தில் இயங்கும் யா-ஆலின் எனும் தொண்டு நிறுவனத்தின் மூலம் உதவிகளைச் செய்ய முடிவு செய்துள்ளார். இந்த ஆய்வில் தன்னுடன் தனது தோழியான காவ்யா சத்தியமூர்த்தி இருந்ததாக அவர் தெரிவித்துள்ளார்.

Advertisment

Manipur; Divya Sathyaraj contributes to the affected people

மேலும், மக்களும் நிவாரண உதவிகள் வழங்க முன்வரவேண்டும் என திவ்யா சத்யராஜ் கேட்டுக்கொண்டுள்ளார். இது குறித்து அவர் தெரிவிக்கையில், “மணிப்பூர் மாநிலத்தில் இயங்கும் யா-ஆலின் தொண்டு நிறுவனம் மூலம் உதவி செய்ய துவங்கியுள்ளோம். யுனஸ்கோ, ஐ.நா. உள்ளிட்ட சர்வதேச அளவில் பாராட்டு பெற்ற மனித உரிமைப் பாதுகாவலரான சதாம், மனித உரிமைகள் மற்றும் சமூக நீதிக்காக வாதிட்டு, மாற்றத்தின் முன்னணியில் இருந்து வருகிறார்.

சதாம் ஹஞ்சபாமின் அமைப்பான யா-ஆலின்தற்போது மணிப்பூரின் இடம் பெயர்ந்த மக்களுக்கு மறுவாழ்வு அளிக்க நிதி திரட்டும் பிரச்சாரத்தை முன்னெடுத்துள்ளது. அங்கு பாதிக்கப்பட்ட நபர்களுக்கு உணவு, தங்குமிடம், உடை மற்றும் மிகவும் தேவையான மருத்துவ உதவிகளை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. நான் இந்த மாதம் இவர்களுக்கு ரூ. 25,000 பங்களித்துள்ளேன். வரும் மாதங்களில் மேலும் வழங்கவுள்ளேன். மணிப்பூரில் பாதிக்கப்பட்டவர்களின் வாழ்க்கையில் உண்மையான தாக்கத்தை ஏற்படுத்த அனைவரும் கைகோர்க்க வேண்டும்.

Manipur; Divya Sathyaraj contributes to the affected people

இந்திய நன்கொடையாளர்களுக்கு 80ஜி விலக்குகள் இதன் மூலம் கிடைக்கும். மேலும், வெளிப்படைத்தன்மையை உறுதிப்படுத்த, ஒவ்வொரு நன்கொடையாளரும் தங்கள் பங்களிப்பின் பயன்பாட்டை விவரிக்கும் விரிவான அறிக்கையைப் பெறுவார்கள்” என்று தெரிவித்துள்ளார்.

திவ்யா சத்யராஜ் சமீபத்தில் இலங்கை நெடுந்தீவுக்குச் சென்று அங்கு வாழும் தமிழர்களுக்காக இதே செயல்பாட்டில் ஈடுபட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.