“நீங்கள் ஒன்றும் அனைத்து பெண்களுக்கும் கணவர் அல்ல” - பிரதமர் மோடியை விளாசிய மம்தா பானர்ஜி!

Mamata Banerjee spoke harshly PM Modi is not a husband for all women

மேற்கு வங்க மாநிலம், அலிப்பூர்துவார் பகுதியில் பா.ஜ.க சார்பில் இன்று (29-05-25) பொதுக் கூட்டம் நடைபெற்றது. அதில் பிரதமர் மோடி கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் பேசுகையில், “மேற்கு வங்க மாநிலம், பிரச்சனைகளால் நிறைந்த மாநிலம். பரவலான ஊழல், வன்முறை மற்றும் சட்ட ஒழுங்கு சீர்குலைவிக்கு மம்தா பானர்ஜி தலைமையிலான அரசு தான் காரணம். முர்ஷிதாபாத் மற்றும் மால்டாவில் என்ன நடந்ததோ அதுவே இங்கு அரசாங்கத்தின் இரக்கமற்ற தன்மைக்கு ஒரு எடுத்துக்காட்டு. சமாதானபடுத்துகிறோம் என்ற பெயரில் குண்டர்களுக்கு முழு சுதந்திரம் வழங்கப்படுகிறது.

அரசாங்கத்தை நடத்தும் ஒரு கட்சியினர், மக்களின் வீடுகளை அடையாளம் கண்டு எரிக்கும்போதும், காவல்துறையினர் வெறும் பார்வையாளர்களாகச் செயல்படும்போதும் ஏற்படும் கொடூரமான சூழ்நிலையை கற்பனை செய்து பாருங்கள். வங்காளத்தில் கூச்சலும், குழப்பமும் நிலவுகிறது. இந்த கொடூரமான அரசாங்கம் நமக்கு தேவையில்லை. ஊழல்களால் ஏற்படும் மோசமான விளைவுகளால் இளைஞர்களும், ஏழை மக்களும் பெரிதும் பாதிக்கப்படுகிறார்கள். ஏழை மக்களுக்கும், பிற்படுத்தப்பட்ட மக்களுக்கும், பெண்களுக்கும் ஏன் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி எதிராகவே இருக்கிறது?. மத்திய அரசு நிறைய நலத்திட்டங்களை கொண்டு வந்துள்ளது, ஆனால் மாநில அரசாங்கம் அந்த திட்டங்களை மேற்கு வங்காளத்தில் செயல்படுத்த மறுக்கிறது. மம்தா பானர்ஜியின் கட்சி 24 மணி நேரமும் அரசியல் செய்கிறதே தவிர, மேற்கு வங்காள வளர்ச்சிக்கோ அல்லது நாட்டின் முன்னேற்றத்திற்கோ முன்னுரிமை கொடுப்பதில்லை” என்று கூறி மம்தா பானர்ஜியை கடுமையாக தாக்கிப் பேசினார்.

Mamata Banerjee spoke harshly PM Modi is not a husband for all women

இந்த நிலையில், பிரதமர் மோடிக்கு மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி பதிலடி கொடுத்துள்ளார். இது குறித்து செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய மம்தா பானர்ஜி, “மத்தியப் பிரதேசத்தில் நடந்தத்தைப் பற்றி நீங்கள் வெட்கப்படவில்லையா?. தெருவில் ஒரு நீலப் படம் ஓடுவது போல இருந்தது. பிரதமர் மோடி முன்னிலையிலேயே, அவரது அமைச்சர் ஆபரேஷன் சிந்தூர் போலவே ஆபரேஷன் பெங்கால் செய்வோம் என்று கூறினார். பிரதமர் மோடி, வங்காளப் பெண்களை அவமதித்துவிட்டார். நாங்கள் அனைவரையும் மதிக்கிறோம், ஆனால் எங்கள் சுயமரியாதையை நாங்கள் இழக்கவில்லை. ஆபரேஷன் பெங்கால் என்று சொல்ல அவருக்கு என்ன தைரியம் இருக்கிறது?. பெண்கள் மீது அடிப்படை மரியாதை கூட இல்லாத தலைவர்களை கொண்ட கட்சியில் இருந்துகொண்டு, பிரதமர் மோடி இவ்வளவு பெரிய பேச்சை பேசக்கூடாது.

ஆபரேஷன் சிந்தூர் குறித்து எனக்கு எந்த கருத்தும் இல்லை. ஆனால், ஒவ்வொரு பெண்ணுக்கு மரியாதை இருக்கிறது என்பதை நினைவில் கொள்ளுங்கள். அவர்கல் தங்கள் கணவரிடம் இருந்து சிந்தூர் (குங்குமம்) பெறுகிறார்கள். ஆனால், பிரதமர் மோடி அனைத்து பெண்களுக்கும் கணவர் இல்லை. முதலில், நீங்கள் ஏன் உங்கள் மனைவிக்கு சிந்தூர் கொடுக்கக் கூடாது? இதில் நான் ஈடுபட விரும்பவில்லை. ஆனால், நீங்கல் எங்களை கட்டாயப்படுத்துகிறீர்கள். ஆபரேஷன் சிந்தூர் போன்ற ஆபரேஷன் பெங்கால் பற்றிய உங்கள் கருத்துகளால், நீங்கள் எங்களை வாய் திறக்க கட்டாயப்படுத்துகிறீர்கள்” என்று காட்டமாகப் பேசினார்.

சில தினங்களுக்கு முன்பு, டெல்லி - மும்பை விரைவுச் சாலையில் நிறுத்தப்பட்டிருந்த வாகனத்தில் ஒரு பெண்ணுடன் மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த அரசியல் தலைவர் மனோகர் லால் தாக்கத், ஆபாச செயலில் ஈடுபடுவது போல் வீடியோ ஒன்று வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. அதனை குறிப்பிட்டு தான் மம்தா பானர்ஜி, பிரதமர் மோடியை விமர்சனம் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Mamata Banerjee modi west bengal
இதையும் படியுங்கள்
Subscribe