ADVERTISEMENT

 “நான் உயிரோடு இருக்கும்வரை அனுமதிக்க மாட்டேன்” - மம்தா பானர்ஜி அதிரடி

08:23 AM Jan 31, 2024 | mathi23

2014, டிசம்பர் 31 ஆம் தேதிக்கு முன்னர் இந்தியா வந்தடைந்த வங்கதேசம், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளைச் சேர்ந்த இஸ்லாமியர் அல்லாதோருக்கு இந்தியக் குடியுரிமை வழங்கும் வகையில் மத்திய அரசு, புதிய சட்டத் திருத்தத்தைக் கொண்டுவந்தது. இந்த குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் கடுமையான எதிர்ப்பு கிளம்பியது. பெரிய அளவில் போராட்டங்களும் நடைபெற்றன.

ADVERTISEMENT

மேலும், இந்த குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக, உச்சநீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டு அவை விசாரிக்கப்பட்டும் வருகின்றன. சிஏஏ எனப்படும் இந்த குடியுரிமை திருத்தச் சட்டம் 2019 ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தில் நிறைவேறி குடியரசுத் தலைவர் ஒப்புதலுடன் சட்டமானது. அதன் பிறகு, கடந்த 2020ஆம் ஆண்டு ஜனவரி 1ஆம் தேதி இந்த சட்டம் அமலுக்கு வருவதாக இருந்தது. ஆனால், இதற்காக விதிமுறைகள் முழுமையாக வகுக்கப்பட்ட பிறகு இந்த சட்டம் அமல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.

ADVERTISEMENT

இந்த நிலையில், குடியுரிமை திருத்தச் சட்டம் மீண்டும் விரைவில் அமல்படுத்தப்படும் என மத்திய இணை அமைச்சர் சாந்தனு தாக்கூர் தெரிவித்தது பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. மேற்கு வங்கம் மாநிலம், காக்த்வீப் பகுதியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் ஒன்றிய துறைமுகங்கள் மற்றும் கப்பல் போக்குவரத்து துறை இணை அமைச்சர் சாந்தனு தாக்கூர் கலந்து கொண்டு பேசினார்.

அப்போது அவர், “சிஏஏ சட்டம் மதம், சமூகம், கொள்கைகளை மனதில் வைத்து அமலுக்கு வரும். இந்த முடிவை மத்திய உள்துறை அமைச்சகம் எடுத்துள்ளது. அடுத்த 7 நாள்களில் நாடு முழுவதும் இந்த குடியுரிமை திருத்தச் சட்டம் அமல்படுத்தப்படும். நான் உங்களுக்கு இந்த உத்தரவாதத்தை அளிக்கிறேன்” என்று கூறினார். மக்களவைத் தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் சிஏஏ சட்டம் அமல்படுத்தப்படும் என்று மத்திய அமைச்சர் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

இதையடுத்து, மேற்கு வங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜி, கூச் பெஹார் பகுதியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர், “வரும் மக்களைத் தேர்தலில் பா.ஜ.க.வுக்கு வாக்களிக்காவிட்டால் சி.பி.ஐ, அமலாக்கத்துறை உள்ளிட்ட விசாரணை அமைப்புகளை தங்கள் வீடுகளுக்கு அனுப்புவோம் என்று பா.ஜ.க மிரட்டுகிறது. தேர்தல் ஆதாயத்தை மனதில் வைத்து தான் சிஏஏ, என்.ஆர்.சி மற்றும் பொது சிவில் சட்டம் ஆகியவற்றை பா.ஜ.க பேசி வருகிறது. நான் உயிரோடு இருக்கும்வரை மேற்கு வங்கத்தில் சிஏஏ, என்.ஆர்.சி ஆகியவற்றை அனுமதிக்க மாட்டேன். யாருடைய குடியுரிமையும் பறிக்கவிட மாட்டேன். மாநிலத்தின் எல்லை பகுதிகளில் வாழும் மக்கள், மத்திய அரசின் எல்லை பாதுகாப்பு படையினர் வழங்கி வரும் சிறப்பு அடையாள அட்டைகளை ஏற்க கூடாது. மேற்கு வங்க மக்களின் உரிமைக்காக திரிணாமுல் காங்கிரஸ் தொடர்ந்து போராடும் என்று உறுதியாக கூறுகிறேன்” என்று கூறினார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT