Skip to main content

“பேங்க் ஆஃபிசர்களை அட்ஜஸ்ட் பண்ணிக்கோங்க” - மகளிர் திட்ட அதிகாரியின் உத்தரவு!

Published on 16/07/2018 | Edited on 16/07/2018
s


தேசிய நகர்புற வாழ்வாதார இயக்கத்தின் தூத்துக்குடி மாவட்ட திட்ட இயக்குனர் பி.ஜே.ரேவதி, ‘மகளிர் சுய உதவிக்குழு சுழல்நிதி’யில் லஞ்சம் கேட்டதாக கலெக்டரால் விசாரணை நடத்தப்பட்டுக்கொண்டிருக்கும் சூழலில்… ‘பேங்க் ஆஃபிசர்களிடம் அட்ஜஸ்ட் பண்ணிக்கோங்க’ என்று இளம்பெண்களை தனியார் வங்கிகளுக்கு அனுப்புவதாக பகீர் குற்றச்சாட்டு கிளம்பி பரபரப்பாகிக்கொண்டிருக்கிறது. இதுகுறித்து, நாம் விசாரணையில் இறங்கினோம்..
 

b j revathy


மத்திய அரசின் என்.யூ.எல்.எம். எனப்படும் தேசிய நகர்புற வாழ்வாதார இயக்கத்தின்(Deendayal Antyodaya Yojana-National Urban Livelihoods Mission) கீழ் சமுதாய அமைப்பாளராக (community organizer) பணிபுரிய தனியார் ஏஜென்சிகள் மூலம் விளம்பரம் கொடுக்கப்பட்டது. மகளிர் திட்டம் என்பதால் தூத்துக்குடி மாவட்டத்திற்கு, கோவில்பட்டியைச் சேர்ந்த கணேசன் என்பவரின் ’செல்வி லேபர்ஸ் சப்ளையர்ஸ்’ மூலம் சமுதாய அமைப்பாளர்கள் பெண்கள் மட்டுமே தேர்ந்தெடுக்கப்பட்டார்கள். அப்போதைய, திட்ட இயக்குனர் இந்துலாலா இருக்கும்வரை பெண்களுக்கு பிரச்சனை இல்லை. ஆனால், 2017 மார்ச் மாதம் மாற்றலாகி பி.ஜே.ரேவதி என்பவர் திட்ட இயக்குனரானார். அதற்குப்பிறகுதான், தூத்துக்குடி மாவட்ட என்.யூ.எல்.எம். திட்டத்திலுள்ள பெண்களுக்கு பிரச்சனை ஆரம்பித்தது.
 

 

 

ஒவ்வொரு சுய உதவிக்குழுவுக்கும் 10,000 ரூபாய் சுழல் நிதி வழங்கப்படும். அதில், எவ்வளவு கமிஷன் வாங்கலாம்? என்று பொறுப்பேற்றதுமே திட்ட இயக்குனர் கேட்க அதிர்ந்துபோனார்கள் சமுதாய அமைப்பாளர்கள். ‘மேடம்… இதுக்கு முன்னாடி இருந்தவங்க இப்படி கேட்டதில்லையே?’ என்று கேட்டபோது, ‘இதுக்காகவா 5 லட்ச ரூபாய் கொடுத்துட்டு இந்த போஸ்டிங்குக்கு வந்திருக்கேன்?’ என்று அதிரவைத்தவர், ‘இனிமே, சுழல்நிதியில 1,000 ரூபாய், உறுப்பினர் பயிற்சியில 1,500 ரூபாய், ஊக்குனர் பயிற்சியில 2,000 ரூபாய், ஏ.எல்.எஃப். நிதியில 5,000 ரூபாய் வந்துடணும்…இல்லைன்னா தொலைச்சுபுடுவேன்’ என்று மிரட்டியிருக்கிறார்.

இதைவிடக்கொடுமை, ஒவ்வொரு சமுதாய அமைப்பாளரும் தனக்கு கீழ் சமுதாய வள பயிற்றுனரை நியமித்துக்கொள்ளலாம். அவர்கள், பெண்களிடம் பேசி ஒரு குழுவை உருவாக்கினால் 500 ரூபாய் சம்பளம். அதிலும், 200 ரூபாய் கமிஷன் வாங்கச்சொல்லியிருக்கிறார். ‘மேடம்… ஒரு குழுவை உருவாக்குறது சாதாரண விஷயமில்ல. ரொம்ப கஷ்டம். அப்படி, கஷ்டப்பட்டு ஒரு குழுவை உருவாக்கிறவங்களுக்கு கொடுக்கிற 500 ரூபாயில் 200 ரூபாயை கேட்டா அவங்க எங்க போவாங்க?’ என்று கேட்டதற்கு, ‘சமுதாய வள பயிற்றுனர்களே தேவையில்ல. நீங்களே, அந்த வேலையை பாருங்க. 300 ரூபாய் எடுத்துக்கிட்டு 200 ரூபாய் கொடுங்க’ என்று ஷாக் கொடுத்திருக்கிறார்.
 

 

v reva


பிறகு, ‘சமுதாய அமைப்பாளர் 2 போஸ்டிங் காலியா இருக்கு. தெரிஞ்சவங்க இருந்தா சொல்லுங்க’ என்று சொல்லியிருக்கிறார் திட்ட இயக்குனர் ரேவதி. இவருக்குக்கீழ் பணிபுரியும் சமுதாய அமைப்பாளர் வி.ரேவதி என்பவர் அனுசுயா, முத்துலட்சுமி என்ற இரண்டு இளம்பெண்களை அழைத்துவந்திருக்கிறார். ’மாசம் 12,000 ரூபாய் சம்பளம். கவர்ண்ட்மெண்ட் வேலை. அஞ்சு மாசத்துல போட்ட காசை எடுத்துடலாம். 50,000 ரூபாய் கொடுங்க’ என்று ரேட் பேசியதால் கஷ்டப்பட்டு வட்டிக்கு கடன் வாங்கிக்கொடுத்தார்கள். அஞ்சு மாசத்துக்கப்புறம், அந்த ரெண்டு பிள்ளைங்களுக்கும் திட்ட இயக்குனர் ரேவதி கொடுத்த டார்ச்சர்கள் கொஞ்சநஞ்சமில்லை. ஒரு கட்டத்தில் டார்ச்சர் தாங்கமுடியாம வேலையை விட்டு நின்ற அனுசுயா மற்றும் முத்துலட்சுமியின் குடும்பம், ‘நீங்கதானே 50,000 ரூபாய் பணத்தை வாங்கிட்டுப்போயி திட்ட இயக்குனர் ரேவதிக்கிட்ட கொடுத்தீங்க. பணத்தை திருப்பிக்கொடுங்க’ என்று சமுதாய அமைப்பாளர் ரேவதியிடம் பிரச்சனை செய்ய ஆரம்பித்தார்கள். ஏற்கனவே, சுய உதவிக்குழு பெண்களுக்கு வழங்கும் நிதியில் கமிஷன் வசூலிக்கச்சொன்ன திட்ட இயக்குனர் பி.ஜே.ரேவதிக்கும் ‘வசூலிக்கமுடியாது’ என்ற ஏழ்மையான குடும்பத்தைச்சேர்ந்த சமுதாய அமைப்பாளர் வி.ரேவதிக்கும் மீண்டும் பிரச்சனை உருவானது.
 

scam


தூத்துக்குடி ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூடு சம்பவம் உக்கிரமாகிக்கொண்டிருந்த சூழலில்கூட, திட்ட இயக்குனர் ரேவதி தனது பேங்க் அக்கவுண்ட் நம்பரை சமுதாய அமைப்பாளர் ரேவதிக்கு அனுப்பி, ‘அக்கவுண்டுல ஏன் பணம் போடல?’ என்று கேட்டு மிரட்டும் ஆடியோ ஆதாரம் நம்மை அதிரவைக்கிறது. லஞ்சப்பணம் அனுப்பாததால் கோபமடைந்த திட்ட இயக்குனர் ரேவதி சமுதாய அமைப்பாளர் ரேவதியை பணியிலிருந்தே நீக்கிவிட்டார். இதனால், கெஞ்சி அழுதுப்பார்த்த சமுதாய அமைப்பாளர் ரேவதி வேறு வழியில்லாமல் ஆடியோ ஆதாரத்துடன் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் புகார் கொடுத்தார்.
 

var


ஆனால், விசாரணைக்கு வரும்போதெல்லாம் மயக்கும் போட்டு விழுவதுபோல் நடித்து ஏமாற்றிக்கொண்டிருக்கிறாராம் திட்ட இயக்குனர் ரேவதி. மேலும், தனியார் வங்கிகளிலிருந்து விதிக்குப்புறம்பாக அரசு நிதியை பெற, அலுவலகப் பணியிலுள்ள டேட்டா எண்ட்ரி இளம்பெண்களை தேவையில்லாமல் அனுப்பி வைத்து ‘நிர்பந்திக்கிறார்’ என்று பகீரூட்டுகிறவர்கள், ‘உதவி திட்ட இயக்குனர்கள் பிரேமா, பாலராமச்சந்திரன், தட்டச்சு பணியாளர் பழனியம்மாள், பி.ஆர்.ஓ., உள்ளிட்டவரக்ளை விசாரித்தாலே மிகப்பெரிய விவகாரம் வெளிவரும் என்று அதிர்ச்சியூட்டுகிறார்கள் நம்மிடம் பேசும் சமுதாய அமைப்பாளர்கள்.
 

 

 

இதுகுறித்து, மகளிர் திட்ட இயக்குனர் ரேவதி மீது புகார் கொடுத்த சமுதாய அமைப்பாளர் ரேவதியை நாம் தொடர்புகொண்டு கேட்டபோது, “ஏற்கனவே, மீடியாக்கிட்ட பேசினதாலதான் எனக்கு பிரச்சனை. தயவு செஞ்சு இதுகுறித்து எங்கிட்ட பேசாதீங்க ப்ளீஸ்” என்று கண்கலங்கி அழுகிறார்.

குற்றம்சாட்டப்பட்ட மகளிர் திட்ட இயக்குனர் ரேவதியை தொடர்புகொண்டு நாம் கேட்டபோது, “சமுதாய அமைப்பாளர் ரேவதி பல்வேறு முறைகேடுகள் செய்ததால் பணிநீக்கம் செய்தேன். அதனால், என் மீது தவறான குற்றச்சாட்டுகளை பரப்பிவருகிறார். அத்தனையும் பொய்” என்று மறுக்கிறார்.

தீரவிசாரித்தால்தான் பெண்களுக்கு எதிராக மகளிர் திட்டத்தில் நடந்துவரும் கொடுமைகள் வெளிவரும்.


-ராஜேஸ்வரி (இளம்பத்திரிகையாளர்)

 

சார்ந்த செய்திகள்