Skip to main content

கருத்து கேட்புக்கு செல்வதால், சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படுகிறது! - பாலபாரதி கைது குறித்து எடப்பாடி விளக்கம்!

Published on 09/07/2018 | Edited on 09/07/2018


பார்வையிட செல்கிறோம் எனக்கூறி பாலபாரதி 8 வழிச்சாலை பற்றி மக்களிடம் சில கருத்தை தெரிவித்துள்ளார். இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பாலபாரதி உட்பட 14 பேரை போலீஸ் கைது செய்தது என சட்டப்பேரவையில் முதலமைச்சர் எடப்படாடி பழனிசாமி விளக்கம் அளித்துள்ளார்.

சென்னை - சேலம் வரையிலான எட்டு வழி பசுமைச் சாலையானது ரூ.10 ஆயிரம் கோடியில் அமைய உள்ளது. இந்த பசுமை வழிச்சாலையானது தருமபுரி மாவட்டத்தில் 53 கிலோ மீட்டர் தூரம் செல்கிறது. இதற்காக சுமார் 919.24 ஏக்கர் நிலங்களை அரசு கையகப்படுத்த உள்ளது. இதனால், ஏராளமான விவசாய நிலங்கள் பாதிக்கப்படுவதாக விவசாயிகள் புகார் தெரிவித்தனர்.

 

 

இதையடுத்து, முன்னாள் எம்.எல்.ஏ. கே.பாலபாரதி தலைமையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் பாப்பிரெட்டிப்பட்டி வட்டம் கோம்பூர், காளிப்பேட்டை, சாமியாபுரம் கூட்டுசாலை, கோட்டமேடு உள்ளிட்ட பகுதிகளில் விவசாயிகளிடம் கருத்துகளை கேட்டறிந்தனர்.

அப்போது, போலீஸ் அனுமதி இல்லாமல் விவசாயிகளை சந்திப்பது தவறு என்று அரூர் டி.எஸ்.பி. செல்ல பாண்டியன் கூறினார். ஆனால் போலீஸ் தடையை மீறி தொடர்ந்து பாலபாரதி மற்றும் மார்க்சிஸ்ட் கட்சியினர் விவசாயிகளிடம் கருத்து கேட்டனர். இதை தொடர்ந்து முன்னாள் எம்.எல்.ஏ. கே.பாலபாரதி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலர் ஏ.குமார் உள்பட 14 பேரை போலீசார் கைது செய்தனர்.

இந்நிலையில் பாலபாரதி கைது செய்யப்பட்டது ஏன் என சட்டப்பேரவையில் இன்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி விளக்கம் அளித்தார். அதில்,

பார்வையிட செல்கிறோம் எனக்கூறி பாலபாரதி 8 வழிச்சாலை பற்றி மக்களிடம் சில கருத்தை தெரிவித்துள்ளார். இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பாலபாரதி உட்பட 14 பேரை போலீஸ் கைது செய்தது.

காவல்துறையினர் சுதந்திரமாக செயல்படுகின்றனர். வாய்ப்பூட்டு போட்டிருந்தால் யாரும் இப்படி சுதந்திரமாக பேச முடியாது. 8 வழிச்சாலை திட்டத்தை கொண்டுவரக்கூடாது என்று சிலர் வேண்டுமென்றே செயல்பட்டு வருகின்றனர். சேலத்திற்குத்தான் 8 வழிச்சாலை அதிகம் பயன்படும் என்று தவறான கண்ணோட்டம் உள்ளது. 8 வழிச்சாலையால் மேற்கு மாவட்டங்கள் முழுவதும் பயன்பெறும்.

பல இடங்களுக்கு கருத்து கேட்புக்கு செல்வதால், சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படுகிறது. திமுக ஆட்சிக் காலத்திலும் நிலங்கள் கையகப்படுத்தப்பட்டு சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன. பாதுகாப்பு காரணத்தை கருதிதான் சாலை, மலைகளில் இருந்து கனிமம் எடுப்பதாக கூறுவது தவறு. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

சார்ந்த செய்திகள்