Advertisment

தி.மு.க. தலைமை மீது ஆயிரம் விளக்கு தி.மு.க. எம்.எல்.ஏ. கு.க. செல்வம் அதிருப்தியில் இருப்பதாகவும், அவர் பா.ஜ.க.வில் இணைய உள்ளதாகவும் தகவல் வந்த நிலையில் நேற்று டெல்லியில் தமிழக பா.ஜ.க. தலைவர் எல்.முருகனுடன் பா.ஜ., தேசிய தலைவர் நட்டாவை அவரது வீட்டில் சந்தித்து பேசினார்.

இந்தநிலையில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ''திமுக தலைமை நிலைய அலுவலகசெயலாளர் மற்றும் தலைமைசெயற்குழு உறுப்பினர் கு.க.செல்வம் அவர்கள், அவர் வகித்து வந்த பொறுப்புகளில் இருந்து இன்று முதல் (05.08.2020) விடுவிக்கப்படுகிறார்'' என குறிப்பிட்டுள்ளார்.

இதனைத் தொடர்ந்து திமுக தலைமைகழகம் வெளியிட்டுள்ள செய்தியில், திமுக தலைமை நிலைய அலுவலகசெயலாளர் மற்றும் தலைமைசெயற்குழு உறுப்பினர் பொறுப்புகளில் இருந்து விடுவிக்கப்பட்ட கு.க.செல்வம் அவர்கள், கழககட்டுப்பாட்டை மீறியும் கழகத்திற்கு அவப்பெயர் ஏற்படும் வகையிலும் செயல்பட்டு வருவதையொட்டி, அவரை தற்காலிகமாக கழகத்தில் இருந்து நீக்கி வைப்பதுடன், கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து ஏன் நீக்கக்கூடாது என அவருக்கு விளக்கம் கேட்டு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது” என அதில் கூறப்பட்டிருந்தது.

Advertisment

இந்த பரபரப்பு அடங்குவதற்குள் கு.க.செல்வம், தமிழக பாஜக அலுவலகத்திற்கு சென்றார். அங்கு அவரை பாஜகவினர் சால்வை அணிவித்து வரவேற்றனர். பாஜக அலுவலகத்தில் திறக்கப்பட்ட ராமர் உருவப்படத்திற்கு மரியாதை செலுத்தினார் கு.க.செல்வம். அதன்பின் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “திமுகவை விட்டு என்னை நீக்கினாலும் கவலை இல்லை” என தெரிவித்தார்.