Skip to main content

மற்ற கட்சி தலைவர்களை சந்திக்கக்கூடாது என திமுக விதிகளில் இல்லை... -கு.க.செல்வம்

Published on 08/08/2020 | Edited on 08/08/2020
ku ka selvam mla - dmk -

 

 

தி.மு.க. தலைமை மீது ஆயிரம் விளக்கு தி.மு.க. எம்.எல்.ஏ. கு.க.செல்வம் அதிருப்தியில் இருப்பதாகவும், அவர் பா.ஜ.க.வில் இணைய உள்ளதாகவும் தகவல் வந்த நிலையில் டெல்லியில் தமிழக பா.ஜ.க. தலைவர் எல்.முருகனுடன் பா.ஜ., தேசிய தலைவர் நட்டாவை அவரது வீட்டில் சந்தித்து பேசி பரபரப்பை ஏற்படுத்தினார் கு.க.செல்வம்.

 

இதன் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த கு.க.செல்வம், ராமர் கோயிலுக்கு பூமி பூஜை நடத்தும் பிரதமர் மோடிக்கு பாராட்டுகளைத் தெரிவித்து கொள்கிறேன். ஆயிரம் விளக்கு தொகுதிக்கு உட்பட்ட நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் இரண்டு லிஃப்ட் வேண்டும் என பியூஷ் கோயலிடம் கோரிக்கை வைத்திருந்தேன். அதற்காக டெல்லி வந்தேன்.  

 

நான் பா.ஜ.க.வில் இணையவில்லை. தமிழ்க் கடவுள் முருகனை இழிவு படுத்தியவர்களை தி.மு.க. தலைவர் ஸ்டாலின் கண்டிக்க வேண்டும் தி.மு.க. உட்கட்சித் தேர்தலை மு.க.ஸ்டாலின் முறையாக நடத்த வேண்டும். பாரதத்தில் நல்லதொரு ஆட்சி நடத்திக்கொண்டிருக்கும் பிரதமர் நரேந்திர மோடி அவர்களைக் குறை சொல்லிக்கொண்டிருக்கும் ராகுல்காந்தியையும், அவர்கள் சார்ந்த தொடர்புகளையும் துண்டிக்க வேண்டும் என்று தெரிவித்தார். 

 

இதனிடையே திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், திமுக முன்னணி தலைவர்களுடன் ஆலோசனை மேற்கொண்ட பின்னர் கடந்த 5ஆம் தேதி, ''திமுக தலைமை நிலைய அலுவலக செயலாளர் மற்றும் தலைமை செயற்குழு உறுப்பினர் கு.க.செல்வம் அவர்கள், அவர் வகித்து வந்த பொறுப்புகளில் இருந்து இன்று முதல் (05.08.2020) விடுவிக்கப்படுகிறார்'' என அறிவிப்பு வெளியிட்டிருந்தார். 

 

மேலும் திமுக தலைமை கழகம் கு.க.செல்வத்திற்கு ஒரு நோட்டீஸ் அனுப்பியிருந்தது. அதில், திமுக தலைமை நிலைய அலுவலக செயலாளர் மற்றும் தலைமை செயற்குழு உறுப்பினர் பொறுப்புகளில் இருந்து விடுவிக்கப்பட்ட கு.க.செல்வம் அவர்கள், கழக கட்டுப்பாட்டை மீறியும் கழகத்திற்கு அவப்பெயர் ஏற்படும் வகையிலும் செயல்பட்டு வருவதையொட்டி, அவரை தற்காலிகமாக கழகத்தில் இருந்து நீக்கி வைப்பதுடன், கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து ஏன் நீக்கக்கூடாது என அவருக்கு விளக்கம் கேட்டு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது” என குறிப்பிடப்பட்டிருந்தது. 

 

இந்தநிலையில், இன்று கு.க.செல்வம் மு.க.ஸ்டாலினுக்கு ஒரு கடிதம் அனுப்பியுள்ளார்.

 

அதில், தங்களுடைய 05.08.2020 தேதியிட்ட நோட்டீஸ் கிடைக்கப் பெற்றது. கிடைத்த 7 நாட்களுக்குள் பதில் அளிக்க வேண்டும் என்றும் பதில் அளிக்கவில்லை என்றால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. ஆனால் நடவடிக்கை எடுத்து தன்னை தற்காலிகமாக நீக்கி வைத்துள்ளீர்கள். 

 

ku ka selvam

 

ஆகவே என் பதில் கிடைக்கும் முன்னரே நான் குற்றவாளி என்று ஒரு தலைப்பட்சமாக தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஆகவே தற்காலிகமாக நீக்கி வைத்து இயற்கை நீதிக்கு விரோதமானது. ஆகவே தங்களின் தற்காலிக நீக்கத்தை வாபஸ் பெறுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

 

மேலும் தங்கள் நோட்டீஸ்க்கு நான் விபரமாக விளக்கம் அளிப்பதற்கு சில விவரங்கள் தேவைப்படுகின்றன. தாங்கள் அனுப்பிய நோட்டீஸில், விவரங்கள் இல்லாமல் மேலோட்டமாக அனுப்பப்பட்டுள்ளது. தங்கள் நோட்டீஸில் நான் பொய்யான தகவல்களை சொன்னதாக நோட்டீஸில் முதலாவது குற்றச்சாட்டில் கூறப்பட்டுள்ளது. 

 

ஆனால் நான் என்ன தகவல்கள் பொய்யாக சொன்னேன் என்ற குறிப்பிடப்படவில்லை. நான் கூறியவை அனைத்தும் பொய் என்று நானே அனுமானிக்கும் நிலையில் என்னை வைத்து குற்றம் சாட்டியுள்ளீர்கள். 

 

ku ka selvam

 

அதுபோன்று இரண்டாம் குற்றச்சாட்டில் நான் அவதூறாக கூறி உள்ளீர்கள். ஆனால் நான் பேசியதில் எதை அவதூறுகள் என்று குறிப்பிட்டு சாட்டப்படவில்லை. இரண்டு இணைப்புகளை அனுப்பி என்னை அனுமானிக்க சொல்லியிருக்கிறீர்கள். திராவிட முன்னேற்ற கழகத்தை சேர்ந்தவர்கள் மற்ற கட்சி தொண்டர்களையும் தலைவர்களையோ சந்திக்கக்கூடாது என்று எங்கும் குறிப்பிடவில்லை. 'மாற்றான் தோட்டத்து மல்லிகையும் மணக்கும்' என்பதுதான் பேரறிஞர் அண்ணா அவர்களது கோட்பாடு. 

 

நம் தலைவர் கலைஞர் அவர்களை பிஜேபியை சேர்ந்த பாரத பிரதமர் நேரில் வந்து பார்த்தது அனைவருக்கும் தெரியும். ஆகவே கட்சியின் மாண்பை நான் மீறியதாக கூறிவது சரியல்ல. இயற்கை நீதிக்கு விரோதமானது.

 

ஆகவே தங்கள் நோட்டீஸை திரும்ப பெறுமாறு கேட்டுக்கொள்கிறேன். சட்டப்படி விசாரணை வைத்து மேற்படி பத்தியில் நான் கேட்ட விவரங்கள் அளித்தால் விசாரணைக்கு ஒத்துழைக்க தயராக உள்ளேன். இவ்வாறு அந்த கடிதத்தில் செல்வம் கூறியுள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

அனைத்து அரசியல் கட்சிகளும் களமாடிய சிதம்பரம் தொகுதி; ஒரு பார்வை!

Published on 19/03/2024 | Edited on 19/03/2024
 view of Chidambaram Parliamentary Constituency

சிதம்பரம் பாராளுமன்ற தொகுதி தனி தொகுதியாகும். இந்த தொகுதியில் கடலூர் மாவட்டத்தில் இருந்து  சிதம்பரம். காட்டுமன்னார்கோவில்(தனி). புவனகிரி. அரியலூர் மாவட்டத்தில் ஜெயங்கொண்டம். அரியலூர், பெரம்பலூர் மாவட்டத்தில் குன்னம் உள்ளிட்ட 6 சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன. முதன் முதலில் 1957 ஆம் ஆண்டு பாராளுமன்ற தொகுதி உறுப்பினராக காங்கிரஸ் கட்சியை சார்ந்த கனகசபைப்பிள்ளை தேர்ந்தெடுக்கப்பட்டார்.  இந்த தொகுதியில் 6  முறை காங்கிரஸ் கட்சியும், 4  முறை திமுக,  2 முறை அதிமுக, 3 முறை பாமக, 2 முறை விசிக சார்பில் பாராளுமன்ற உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

சிதம்பரம், காட்டுமன்னார்கோயில், புவனகிரி தொகுதி காவிரி டெல்டா பகுதியின் கடைமடையாக உள்ளது. இதனால் இங்கு பெரும்பாலும் விவசாயம் மற்றும் விவசாய கூலி தொழிலை நம்பியே பொதுமக்கள் அதிகளவில் உள்ளனர். முக்கிய பிரதான சின்னங்களாக சிதம்பர நடராஜர் கோயில், பிச்சவரம் சதுப்பு நிலக்காடுகள், அண்ணாமலை பல்கலைக்கழகம், புவனகிரி சட்டமன்ற தொகுதியில் பெட்ரோல் எடுக்கப்படுகிறது, ராகவேந்திரர் மற்றும் ராமலிங்க அடிகளார் பிறந்த இடமாகவும் உள்ளது.  காட்டுமன்னார்கோயில் தொகுதியில் தமிழகத்தின்  மிகப்பெரிய ஏரியான வீராணம் ஏரி உள்ளது. இந்த ஏரியால் 47 ஆயிரம்  ஏக்கர் விலை நிலங்கள் பாசனம் வசதி பெறுகின்றன. சென்னை குடிநீருக்கு இதன் தண்ணீர் அனுப்பப்பட்டு வருகிறது.

 view of Chidambaram Parliamentary Constituency

ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதியில் ராஜராஜ சோழன் மகன் ராஜேந்திர சோழன் கட்டிய  கங்கைகொண்ட சோழபுரம் கோயில், அரியலூர் தொகுதியில் கலியுக வரதராஜ பெருமாள் கோயில், கரைவெட்டி பறைவைகள் சரணாலயம் உள்ளது. அரியலூர் ஜெயங்கொண்டம் பகுதியில் ஏராளமான சுண்ணாம்பு படிவுகள்  உள்ளதால் சிமெண்ட் தொழிற்சாலைகள் மாவட்டத்தில் அமைந்துள்ளன.  ஜெயங்கொண்டம் மற்றும் அருகில் உள்ள இடங்களில் பழுப்பு நிலக்கரி கிடைப்பது இயற்கையாக உள்ளது.

இந்தப் பகுதியில் சாதாரண சிமெண்ட் முதல் தரம் மிகுந்த சிமெண்ட் வரை சுண்ணாம்பு கற்கள் மூலம் சிமெண்ட் ஆலைகள் மூலம் தயாரிக்கப்படுகிறது.  தீ களிமண், தரையோடுகள், சுடு மண் குழாய்கள், செங்கற்கள் உற்பத்தி செய்யப்படுகிறது. அரியலூர் கனிம வளங்கள் நிறைந்த பகுதியாக உள்ளது. குன்னம் சட்டமன்ற தொகுதி பெரும்பாலும் விவசாயமே பிரதான தொழிலாக உள்ளது. குன்னம் பகுதிகளில் பருத்தி, மக்காச்சோளம், மஞ்சள், முந்திரி, உள்ளிட்டவை சாகுபடி செய்யப்படுகின்றன.  கல் குவாரிகளும் அதிக அளவு செயல்பட்டு வருகிறது.  தமிழ் தாத்தா உ.வே சாமிநாத ஐயர் தனது பெற்றோருடன் தங்கி கல்வி பயின்றதும் இந்த தொகுதியில் தான். அதேபோல் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் சொந்த ஊரான அங்கனூர் இந்த தொகுதியில் தான் உள்ளது.

இப்படிப்பட்ட சிதம்பரம் பாராளுமன்ற தொகுதியில் 16 லட்சத்திற்கும் மேற்பட்ட வாக்காளர்கள் உள்ளனர். இதில் ஆண் பெண் வாக்காளர்கள் பெரிய வித்தியாசம் இல்லாமல் உள்ளனர். மாற்று பாலினத்தவரும் 100-க்கும் மேற்பட்டவர்கள் உள்ளனர்.  தற்போது விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் 2-வது முறையாக இந்த தொகுதியின் பாராளுமன்ற உறுப்பினராக உள்ளார்.

இந்த தொகுதிக்கு 18-வது மக்களவைக்கான தேர்தல் வரும் ஏப்ரல் 19-ஆம் தேதி நடைபெறுகிறது. இதனையொட்டி அரசியல் கட்சியினர் வேட்பாளர்களை அறிவிப்பதில் தீவிரமாக செயல்பட்டு வருகிறார்கள். தொடர்ந்து விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் போட்டியிடுவதால், இது நட்சத்திரத் தொகுதியாகவும் பார்க்கப்படுகிறது. மேலும் வரும் தேர்தலிலும் இந்தியா கூட்டணியில் திமுக தலைமையில் அவரே போட்டியிடுகிறார். இதற்கான முதற்கட்ட பணிகள் நடைபெற்று வருவதால் தொகுதியில் அரசியல் கட்சியினர் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 

Next Story

“கூட்டணி கட்சியின் வேட்பாளர்களை மதிக்கக் கூடிய ஒரே இயக்கம் திமுக தான்” - பாலகிருஷ்ணன்

Published on 19/03/2024 | Edited on 19/03/2024
 DMK is the only movement that can respect the candidates of the coalition party says Balakrishnan

திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதியில் திமுக தலைமையிலான கூட்டணி கட்சி சார்பாக போட்டியிடும் சி.பி.எம் கட்சி வேட்பாளர் சச்சிதானந்தத்தை திமுக நிர்வாகிகளுக்கு அறிமுகம் செய்யும் கூட்டம், மாவட்ட திமுக அலுவலகமான கலைஞர் மாளிகையில் நடைபெற்றது.

இக்கூட்டத்திற்கு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ. பெரியசாமி தலைமை தாங்கினார். மேற்கு மாவட்ட செயலாளரும், உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சருமான சக்கரபாணி, சி.பி.எம்.கட்சி மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், மாநில செயற்குழு உறுப்பினர்கள் கே.பாலபாரதி, கனகராஜ், பாண்டி, ஆகியோர் முன்னிலை வகித்தனர். திண்டுக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளரும், பழனி சட்டமன்ற தொகுதி திமுக உறுப்பினருமான ஐ.பி.செந்தில்குமார் வரவேற்று பேசினார்.

திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதியில் திமுக கூட்டணி சார்பாக போட்டியிடும் சிபிஎம். கட்சி வேட்பாளர் சச்சிதானந்தத்தை திமுக மாவட்ட நிர்வாகிகள் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கு அறிமுகம் செய்துவிட்டு அவரை வாழ்த்தி பேசிய அமைச்சர் ஐ.பெரியசாமி, “கடந்த பாராளுமன்ற தேர்தலின் போது வரலாறு காணாத வெற்றியை பெற்றோம். அதுபோல இம்முறையும் மாபெரும் வெற்றி பெறவேண்டும். கூட்டணி தர்மத்தை மதிக்க கூடிய கலைஞர் வழியில் வந்த கழகத்தலைவர் மு.க.ஸ்டாலின் வழியில், திமுக தலைமையிலான கூட்டணியில் போட்டியிடும் சிபிஎம் கட்சி வேட்பாளர் சச்சிதானந்தத்தை மாபெரும் வெற்றிபெற செய்வதன் மூலம் நாம் நம் கழகத்தலைவரின் பெருமைக்கு எடுத்துக்காட்டாக தேர்தல் பணியாற்ற வேண்டும். நாட்கள் குறைவாக இருக்கின்றன. கூட்டணி கட்சியின் சின்னத்தை ஒவ்வொரு இல்லம்தோறும் சென்றடையும் வண்ணம் திமுக நிர்வாகிகள், தொண்டர்கள் அயராது உழைக்க வேண்டும். இங்கு போட்டியிடும் வேட்பாளரின் வெற்றி இந்திய அளவில் பேசும்படி செய்யும் வண்ணம் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற செய்யவேண்டும்” என கூறினார்.

அடுத்து பேசிய அமைச்சர் சக்கரபாணி, “திண்டுக்கல்லில் சிபிஎம் கட்சி சார்பாக சச்சிதானந்தம் போட்டியிடவில்லை. தலைவரும் முதல்வருமான ஸ்டாலின்தான் போட்டியிடுகிறார். அதுபோல் அண்ணன் அமைச்சர் ஐ.பெரியசாமி தான் போட்டியிடுகிறார் என நினைத்து நீங்கள் ஒவ்வொருவரும் தேர்தல் பணியாற்ற வேண்டும். நாட்கள் குறைவாகத்தான் இருக்கின்றன. சின்னம் வரைவதில் முக்கியமில்லை. அந்த சின்னத்தை மக்கள் மனதில் நிறுத்துவதில்தான் நீங்கள் கவனம் செலுத்த வேண்டும். எப்படி ஸ்டாலின குரல் திண்டுக்கல் மாவட்டத்தில் அனைத்து இல்லங்களிலும் ஒலித்ததோ, அதுபோல சிபிஎம் கட்சியின் சின்னமும் அனைத்து இல்லங்களிலும் தெரியும் வண்ணம் தேர்தல் பணியாற்ற வேண்டும். மாபெரும் வெற்றியை நாம் நமது முதல்வருக்கு தெரிவிக்கும் வண்ணம் திமுக நிர்வாகிகள் இன்றே களப்பணியை தொடங்க வேண்டும்” என்று கூறினார்.

 DMK is the only movement that can respect the candidates of the coalition party says Balakrishnan

இறுதியாக சிபிஎம் கட்சி மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் பேசும் போது, “கூட்டணி கட்சியின் வேட்பாளர்களை மதிக்கக்கூடிய ஒரே இயக்கம் திமுக. அதற்கு காரணம் எங்கள் கட்சி சார்பாக போட்டியிடும் வேட்பாளர் சச்சிதானந்தம் மாவட்டத்தில் உள்ள அனைத்து நிர்வாகிகளையும் சந்தித்து ஆதரவு கேட்க தொடங்கினால் காலநேரம் செலவாகும் என்பதை கருத்தில் கொண்டு தேர்தலில் வெற்றியை இலக்காக செயல்பட வைக்க வேண்டும் என்ற நோக்கில் அமைச்சர் அண்ணன் ஐ.பெரியசாமி அவர்களும், உணவு வழங்கல்துறை அமைச்சர் சக்கரபாணி அவர்களும் குறுகிய காலத்தில் இந்த வேட்பாளர் அறிமுக கூட்டத்தின் மூலம், திமுக நிர்வாகிகளுக்கு அறிமுகம் செய்துவைத்திருப்பது அவர்களின் தேர்தல் பணியின் சுறுசுறுப்பை எடுத்துக்காட்டுகிறது. திண்டுக்கல்லில் சிபிஎம் வேட்பாளர் பெறும் வெற்றி இந்திய கூட்டணியை ஆட்சி பீடத்தில் அமர வைக்கும் வெற்றியாக இருக்கும்.

தமிழக ஆளுநர் அரசியல் சட்டத்திற்கு விரோதமாக செயல்படுகிறார். உச்சநீதிமன்றமே பொன்முடி தண்டனையை நிறுத்தி வைத்தபோது, ஆளுநர் ஏன் பதவி பிரமாணம் செய்து வைக்காமல் இருக்கிறார் என்றால், அதற்கு காரணம் மத்தியில் ஆளும் மோடி அரசின் ஜனநாயக விரோதப் போக்கே. இங்கு போட்டியிடும் வேட்பாளரின் வெற்றி தமிழக முதல்வருடைய வெற்றி. அமைச்சர் ஐ.பெரியசாமியின் வெற்றி;  அமைச்சர் சக்கரபாணியின் வெற்றி. பம்ரபமாய் சுழன்று தேர்தல் பணியாற்றும் திண்டுக்கல் கிழக்கு மாவட்ட செயலாளர் ஐ.பி.செந்தில்குமாரின் வெற்றி என்று திமுக மற்றும் சிபிஎம். கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் நினைத்து வெற்றிக்காகப் பாடுபட வேண்டும்” என்று கூறினார்.