Skip to main content

திணறும் தமிழக காவல்துறை!- துணை ராணுவத்திற்கு கிரிஜா வைத்தியநாதன் அழைப்பு!

Published on 23/05/2018 | Edited on 23/05/2018
pl


 

 

தூத்துக்குடி போராட்டத்தை ஒடுக்க முடியாமல் தமிழக போலீசார் திணறி வருவதால் துணை ராணுவத்தை அனுப்ப மத்திய அரசுக்கு தமிழக அரசு கோரிக்கை விடுத்துள்ளது.

தூத்துக்குடி மாவட்டத்தில் அமைந்துள்ள ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று நடைப்பெற்ற போராட்டத்தில் காவல்துறையினர் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் 10பேர் உயிரிழந்துள்ளனர். காயமடைந்த பலர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். உயிரிழந்தவர்களின் உடல்கள் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.

 

 


இந்நிலையில், துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர்களின் உடல்களை பிரேத பரிசோதனை செய்ய எதிர்ப்பு தெரிவித்து இன்று காலை உயிரிழந்தவர்களின் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மருத்துவமனை வளாகத்தில் காவல்துறையினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இதனையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் தடியடி நடத்தி கலைத்தனர். மருத்துவமனை பகுதியில் திரண்டவர்களை கண்ணீர் புகை குண்டுகளை வீசி காவல்துறையினர் கலைத்தனர். போலீசாரின் தாக்குதலில் பலர் படுகாயம் அடைந்தனர். இதில் தூத்துக்குடி அரசு மருத்துவமனை அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காவல்துறை பேருந்து தீ வைத்து எரிக்கப்பட்டது. மற்றொரு பேருந்தின் கண்ணாடிகள் நொறுக்கப்பட்டது.

 

 


இதைத்தொடர்ந்து இன்று பிற்பகல் அண்ணாநகர் பகுதியில் போலீசார் போராட்டகாரர்களிடையே திடீரென மோதல் ஏற்பட்டது. அப்போது பொதுமக்கள் கல்வீச்சில் ஈடுபட்டனர். இதில் தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி. மற்றும் 10க்கும் மேற்பட்ட போலீசாருக்கு காயம் ஏற்பட்டது. பொதுமக்களின் கல்வீச்சை தொடர்ந்து போலீசார் இன்று மீண்டும் துப்பாக்கி சூட்டில் ஈடுபட்டனர். போலீசாரின் துப்பாக்கி சூட்டில் காளியப்பன் (22) என்ற இளைஞர் ஒருவர் சம்பவ இடத்திலையே பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் படுகாயமடைந்த 5 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், தூத்துக்குடியில் போராட்டத்தை ஒடுக்க முடியாமல் தமிழ்நாடு போலீசார் 2வது நாளாக தொடர்ந்து திணறி வருவதால் துணை ராணுவத்தை அனுப்ப மத்திய அரசுக்கு தலைமைச் செயலர் கிரிஜா வைத்தியநாதன் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதைத்தொடர்ந்து துணை ராணுவத்தை அனுப்ப மத்திய அரசு முடிவுசெய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சார்ந்த செய்திகள்

Next Story

“ஸ்டெர்லைட் ஆலையை உடனடியாகத் திறக்க அனுமதிக்க முடியாது” - உச்சநீதிமன்றம்

Published on 21/02/2024 | Edited on 21/02/2024
 Supreme Court says Sterlite plant cannot be allowed to open immediately

தூத்துக்குடி மாவட்டத்தில் அமைந்துள்ள ஸ்டெர்லைட் ஆலையால், அந்தப் பகுதிகளில் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படுவதாக பல்வேறு அமைப்பினர் போராட்டம் நடத்தினர். இதனையடுத்து, கடந்த 2018ம் ஆண்டு மே 22ம் நாள் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தின்போது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 11 ஆண்கள் மற்றும் 2 பெண்கள் என 13 பேர் கொல்லப்பட்டனர். 40 பேர் பலத்த காயங்களை அடைந்தனர். இதையடுத்து, ஸ்டெர்லைட் ஆலையை மூடத் தமிழக அரசு உத்தரவிட்டது. 

இதனையடுத்து, ஸ்டெர்லைட் மீதான தடை உத்தரவை நீக்கி மீண்டும் திறக்க வேண்டும் என வேதாந்தா நிறுவனம் சார்பாக உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீதான விசாரணை கடந்த 14ஆம் தேதி உச்சநீதிமன்றத்திற்கு வந்தது. அப்போது தமிழக அரசு தரப்பில், ‘ஸ்டெர்லைட் ஆலை, அரசின் உத்தரவையும், நீதிமன்ற உத்தரவையும் மதிப்பதும் இல்லை. அமல்படுத்துவதும் இல்லை. நீதிமன்ற உத்தரவுகளை ஸ்டெர்லைட் நிர்வாகம் பலமுறை மீறியுள்ளது. விதி மீறல்களில் ஈடுபட்டதற்காக ஸ்டெர்லைட் ஆலைக்கு ஏற்கனவே ரூ.100 கோடி அபராதம் விதிக்கப்பட்டிருக்கிறது’ என்று வாதிடப்பட்டது.

இதனையடுத்து உச்சநீதிமன்றம் கூறியதாவது, ‘ஆலை பாதுகாப்பாக செயல்படுகிறதா என்று எந்த ஆய்வும் நடத்தாமல் உயர்நீதிமன்ற உத்தரவை ரத்து செய்ய இயலாது. அரசும், ஸ்டெர்லைட் நிர்வாகமும் ஒப்புக்கொண்டால் நிபுணர் குழு அமைத்து ஆய்வு செய்யலாம். அதன் பிறகு ஆலையை திறப்பதா? வேண்டாமா? என்பது தொடர்பாக முடிவு செய்யலாம்’ என்று தெரிவித்தது. 

இந்த நிலையில், ஸ்டெர்லைட் ஆலை தொடர்பான வழக்கு இன்று (21-02-24) விசாரணைக்கு வந்தது. அப்போது வேதாந்தா நிறுவனம் தரப்பில் கூறியதாவது ‘நிபுணர் குழுவை விரைந்து அமைக்க வேண்டும். மேலும் ஒரு மாதத்தில் நிபுணர் குழு ஆய்வறிக்கையை சமர்ப்பிக்க உத்தரவிட வேண்டும்’ என்று கோரிக்கை வைக்கப்பட்டது. இதனை தொடர்ந்து, இருதரப்பு வாதங்களைக் கேட்ட உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி, “தூத்துக்குடி மக்களின் ஆரோக்கியம் மற்றும் நலன் பாதுகாக்கப்பட வேண்டும்.

சாமானிய மக்கள் நேரடியாக நீதிமன்றம் வர முடியாது என்றாலும் அவர்களது கவலையை புறந்தள்ள முடியாது. அதே சமயம், தமிழ்நாடு அரசின் ஆட்சேபனைகளையும், சந்தேகங்களையும் நீதிமன்றம் புறந்தள்ள முடியாது. ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதி மறுத்த உயர்நீதிமன்ற உத்தரவை தவறு என கூற முடியாது. அதனால், ஸ்டெர்லைட் ஆலையை உடனடியாக திறக்க அனுமதிக்க முடியாது” என்று கூறி உத்தரவிட்டார். 

Next Story

தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம்... ரஜினிகாந்த் வழக்கறிஞர்கள் ஆணையத்தில் விளக்கம்

Published on 25/02/2020 | Edited on 25/02/2020

கடந்த 2018  ஆம் ஆண்டு தூத்துக்குடியில் நடைபெற்ற ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தில் 13 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக விசாரிக்க விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

 

Explanation at Rajinikanth Lawyers Commission

 

தூத்துக்குடி துப்பாக்கி சூடு தொடர்பாக பல பேரிடம் விசாரணை நடத்தப்பட்டது. நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், மற்றும் நடிகர் ரஜினிகாந்த் ஆகியோரும் நேரில் ஆஜராக தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தை விசாரிக்கும் அருணா ஜெகதீசன் ஆணையம் உத்தரவிட்டிருந்தது. சீமான் கடந்த மாதம் ஆஜரான நிலையில் தற்போது நடிகர் ரஜினிகாந்த் நேரில் ஆஜராவர் என எதிர்பாக்கப்பட்டது. இந்நிலையில் அவர் நேரில் ஆஜராகாமல் நடிகர் ரஜினிகாந்தின் வழக்கறிஞர்கள் தற்போது ஆணையத்தில் ஆஜராகியுள்ளனர்.

தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தின் இறுதியில் காயமடைந்த மக்களை நேரில் பார்க்க சென்ற ரஜினிகாந்த் தூத்துக்குடி விமானநிலைத்தில் போராட்டத்தில் சமூக விரோதிகள் ஊடுருவியதாக பேசியிருந்த கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியிருந்த நிலையில் அவரிடம் இதுதொடர்பாக நேரில் விசாரணை ஆணையம் விசாரிக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது அவரது வழக்கறிஞர் இளம்பாரதி உட்பட 3  வழக்கறிஞர்கள் ஆணையத்தில் ஆஜராகியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆணையத்தில் நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு வேண்டும் என்ற ரஜினியின் கோரிக்கையை விசாரணை ஆணையம் ஏற்றுகொண்டது. அதேபோல் ரஜினியிடம் கேட்கவேண்டிய கேள்விகள் சீலிடப்பட்ட கவரில் அவரது வழக்கறிஞர்களிடம் கொடுக்கப்பட்டது.