Skip to main content

காதல் திருமணம் செய்த இளைஞர் ஆணவக்கொலை? - கேரளாவில் பயங்கரம்!

Published on 29/05/2018 | Edited on 29/05/2018

காதல் திருமணம் செய்துகொண்ட இளைஞர், பெண் வீட்டாரால் படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனை ஆணவப் படுகொலை எனவும் இளைஞரின் குடும்பத்தினர் குற்றம்சாட்டி வருகின்றனர். 


kerala

 

 

 

கோட்டயம் அருகே நாட்டாசேரி நீலமங்கலம் பகுதியைச் சோ்ந்த தலித் கிறித்தவ சமூக இளைஞரான கெவின் ஜோசப், கொல்லம் அருகே தென்மலை பகுதியைச் சோ்ந்த நீனுவும் கடந்த மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக காதலித்து வந்துள்ளனர். நீனு வசதிபடைத்த குடும்பத்தைச் சேர்ந்தவர். அவரது தந்தை கத்தோலிக்க கிறித்தவ பிரிவு மற்றும் தாயார் இஸ்லாமிய மதத்தைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
 

இவர்களது காதலை அறிந்த நீனுவின் குடும்பத்தினர், இருவரையும் பிரிப்பதற்காக ஜோசப் குடும்பத்தினரிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். பேச்சுவார்த்தையில் பணபேரம் பேசப்பட்டு, பின்னர் மிரட்டலில் முடிந்து பயனற்று போனது. இருப்பினும், காதலர்கள் இருவரும் விடாப்படியாக இருந்ததால், கடந்த மே 24ஆம் தேதி நீனு மற்றும் ஜோசப் ஆகியோர் ஏட்டுமானூர் பகுதியில் உள்ள பதிவாளர் அலுவலகத்தில் பதிவுத்திருமணம் செய்துகொண்டனர்.

 

இதையடுத்து, நீனுவின் பெற்றோர் காந்திநகர் காவல்நிலையத்தில் புகாரளித்த நிலையில், காவல்துறை நீனுவை பெற்றோருடன் செல்ல வற்புறுத்தியுள்ளது. ஆனால், தனது கணவர் ஜோசப் உடன் செல்லவே விருப்பம் இருப்பதாக நீனு கூறியதையடுத்து, கெவின் நீனுவை பெண்கள் விடுதியில் தங்கவைத்துள்ளார். அதைத் தொடர்ந்து கெவினும் விடுதிக்கு அருகாமையில் உள்ள தனது உறவினரான அனீஷ் என்பவரின் வீட்டில் தங்கியுள்ளார்.

 

இந்நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை அனீஷ் வீட்டிற்கு வந்த நீனுவின் அண்ணன் மற்றும் அவரது நண்பர்கள் 10 பேர், அனீஷ் மற்றும் கெவினை அடித்து காரில் தூக்கிச்சென்றனர். அனீஷ் பாதி வழியில் இறக்கிவிடப்பட்ட நிலையில், கெவின் நிலை தெரியாமல் போனது. காவல்துறையினரும் இதுகுறித்து நடவடிக்கை எடுக்காமல் அலட்சியம் காட்டிய நிலையில், நேற்று காலை கெவின் இரு கண்களும் நோண்டப்பட்ட நிலையில், புனலூா் அருகே சாலியோகரை கால்வாயில் பிணமாக மீட்கப்பட்டார்.
 

kerala

 

 

இந்த சம்பவம் கோட்டயம் மற்றும் கொல்லம் மட்டுமில்லாமல் கேரளா முமுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தைச் சேர்ந்த பிரமுகருக்கும் தொடா்பு இருப்பது தெரியவந்துள்ளது.

             
இந்தநிலையில் நீனுவின் உறவினா்கள் கெவினை மிரட்டியது சம்மந்தமாக புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்காமல், நீனுவின் உறவினா்களுக்கு உடந்தையாக இருந்த எஸ்.ஐ.ஷிபு சஸ்பென்ட் செய்யபட்டார். இதேபோல் கோட்டயம் எஸ்.பி.ரபீக் இடமாற்றம் செய்யப்பட்டார்.
 

இந்த ஆணவப் படுகொலை சம்பந்தமாக எதிர்க்கட்சிகள் கேரள அரசுக்கு கடும் நெருக்கடியைக் கொடுக்கத் தொடங்கியுள்ளன. பல்வேறு அமைப்புகள் இதனைக் கண்டித்து போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றன. அதேபோல், உரிய நேரத்தில் நடவடிக்கை எடுக்கத் தவறிய காவல்துறை மூன்று வாரங்களில் பதிலளிக்க மனித உரிமைகள் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

 

 
                                    

சார்ந்த செய்திகள்