பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் ரூ.1 ஐக் குறைக்க முடிவு செய்துள்ளதாக கேரள அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

Advertisment

Pinarayi

நாட்டின் அத்தியாவசிய பிரச்சனையாக பெட்ரோல், டீசல் விலை உயர்வு மாறியிருக்கிறது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை ஏற்ற, இறக்கங்களைப் பொருத்து எண்ணெய் நிறுவனங்களே எரிவாயு விலையை நிர்ணயிக்கலாம் என இந்திய அரசு அறிவித்ததில் இருந்து, தொடர்ந்து ஒவ்வொரு நாளும் பெட்ரோல், டீசல் விலை உச்சத்தை எட்டியிருக்கிறது.

அதேபோல், கர்நாடக சட்டமன்றத் தேர்தலின் போது மாற்றமில்லாத நிலையில் இருந்த பெட்ரோல், டீசல் விலை, தேர்தல் நிறைவடைந்து தொடர்ந்து 17ஆவது நாளாக ஏறுமுகத்தைச் சந்தித்திருக்கிறது. இது ஒருபுறமிருக்க, கேரளாவில் பினராயி விஜயன் தலைமையிலான இடதுசாரி அரசு ஆட்சிமைத்து இரண்டு ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், கேரள மக்களுக்கு புதிய பரிசு ஒன்றைத் தருவதாக கேரள அரசு அறிவித்துள்ளது. அதன்படி, பெட்ரோல், டீசல் விலையில் ரூ.1 குறையும். இது வரும் ஜூன் 1ஆம் தேதி முதல் அம்மாநிலம் முழுவதும் நடைமுறைக்கு வரும்.

Advertisment

இதுகுறித்து, கேரள மாநில நிதியமைச்சர் தாமஸ் ஐசக் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘கேரள மக்களுக்கு இடதுசாரி அரசின் இரண்டாம் ஆண்டு பரிசு: கேரளாவில் பெட்ரோலுக்கு 1.69 சதவீதமும், டீசலுக்கு 1.75 சதவீதமும் விற்பனை வரியைக் குறைத்து, அதன்மூலம் அவற்றின் மொத்த விலையில் ரூ.1 குறைக்க திட்டமிட்டுள்ளோம். இதன்மூலம் ஆண்டொன்றுக்கு ரூ.500 கோடி வரை மாநில அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படும். இனி பிரதமர் மோடி வரிமாற்றத்தை திரும்பப்பெறுவாரா?’ என பதிவிட்டுள்ளார்.

சமீபத்தில் ஸ்டேட் பேங்க் வெளியிட்ட அறிக்கையில், மாநில அரசுகள் பெட்ரோல், டீசல் மீதான வருவாயை இழப்பதன் மூலம் அவற்றின் விலையைக் குறைக்கமுடியும் என குறிப்பிட்டிருந்தது.