மண்டியிட்டு மன்னிப்பு கேட்கவைத்த கொடூரம்! - உரிய நடவடிக்கை எடுக்க பல்வேறு தரப்பினர் வலியுறுத்தல்! 

Kayatharu issue

தூத்துக்குடி மாவட்டத்தின், மரணம் வரினும் மண்டியிடாத சுதந்திரப் போராட்ட வீரமன்னன் வீரபாண்டிய கட்டபொம்மன் தூக்கிலிடப்பட்ட கயத்தாறு நகரின் அருகிலுள்ளது ஓலைக்குளம் எனும் கிராமம். பட்டியலினத்தவர்கள், தேவர்சமூகம், நாயக்கர், யாதவர் என்று பலதரப்பட்ட சமூக மக்களை உள்ளடக்கிய சுமார் 50 வீடுகளைக் கொண்ட 250 பேர்கள் வாழும் பூமி.

அடித்தட்டு வர்க்கத்தினரையே கொண்ட இங்கு பிரதானத் தொழில் சொல்லிக் கொள்கிறமாதிரி இல்லை என்றாலும் ஓரளவு விவசாயம், ஆடு மேய்த்து வளர்ப்பதே தொழிலாக இருக்கிறது.

ஆடுகள் மேய்க்கும் போது கூட பிறசமூகத்தவர்கள் அது பட்டியலின மக்கள் என்றாலும் ஒன்றாகவே இணைந்து மேய்ப்பதுண்டு. தேவர் சமூகத்தைச் சேர்ந்தவர், யாதவர் மற்றும் பட்டியலின தலித் பிரிவு சமூகத்தின் மூன்று பேர்களும் இணைந்து தொடர்ந்து ஆடு மேய்த்திருக்கிறார்கள்.

இதில் அங்குள்ள சிவசங்கு தன்னுடைய ஆடுகளை தனது வீட்டின் பின்புறமுள்ள இடத்தில் அடைப்பதுண்டு. ஆடு காணாமல் போன விஷயத்தில் சிவசங்குவிற்கும் பட்டியல் இனத்தைச் சேர்ந்த பால்ராஜ்க்கும் வாய்த்தகராறு ஏற்பட்டது.

இந்த நிலையில், கடந்த வாரம் பால்ராஜ், சிவசங்குவின் காலில் விழுந்து கும்பிட்டு மன்னிப்புக் கேட்டிருக்கிறார். இதற்கு சாட்சியாக சங்கிலிபாண்டி, உடையம்மாள், பெரியமாரி, வீரையா, மகேந்திரன், மகாராஜன் ஆகியோர் அங்கு இருந்துள்ளனர்.

thol thirumavalavan

இந்நிலையில்விடுதலைச்சிறுத்தைகள் கட்சித்தலைவர் தொல். திருமாவளவன் தனது ட்விட்டர் பக்கத்தில் அந்த வீடியோவை பதிவிட்டு, “#அநாகரிகம்: வட இந்திய மாநிலங்களில் மட்டுமல்ல; தமிழ்நாட்டிலும் தொடரும் அநாகரிகம். கயத்தாறு அருகே ஓலைக்குளம் கிராமம் ஆதிக்குடியினத்தைச் சார்ந்தவரின் ஆடுகள் தங்களின் கொல்லைப் பகுதியில் எப்படி நுழையலாமென இந்தக் கேவலத்தை அரங்கேற்றியுள்ளனராம்” எனக் குறிப்பிட்டிருந்தார்.

அதைத் தொடர்ந்து இந்த வீடியோ வைரலானது. பால்ராஜின் புகாரின் பேரில் கயத்தாறு இன்ஸ்பெக்டர், சிவசங்கு உள்ளிட்ட சாட்சிகளான மேற்கண்ட அத்தனை பேர்களின் மீதும் தீண்டாமை வழக்குப் பதிவு செய்திருக்கிறார். டி.எஸ்.பி.யான கலைக் கதிரவன் இந்த விசாரணையை மேற்கொண்டிருக்கிறார்.

Chelladurai.N

இது தொடர்பாக நம்மிடம் பேசிய விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் மத்திய சென்னை மாவட்டச் செயலாளர் ந.செல்லதுரை, “பால்ராஜிடம் கொஞ்சம் ஆடுகள் இருந்தன, அங்குள்ள ஆதிக்க சமூகத்தினரும் ஆடுகள் வைத்திருக்கின்றனர். அப்போது இந்த பால்ராஜின் ஆடுகள், அந்த ஆதிக்கச் சமூகத்தினரின் ஆடுகளுடன் அடைத்து வைத்துள்ள இடத்திற்கு உள்ளே போய்விட்டது. உடனே பால்ராஜ், தனது ஆட்டை வெளியே ஓட்டிவரச் சென்றுள்ளார்.

Ad

இதனை அங்கிருந்தவர்கள் பார்த்தவுடன் பிரச்சனையாகியுள்ளது. பால்ராஜிடம் வாய்த்தகராறு செய்துள்ளனர். பின்னர் அவரை அடித்துக் காலில் விழுந்து மன்னிப்புக் கேட்க வைத்துள்ளனர். பால்ராஜுக்கு திருமணமாகி பிள்ளைகள் இருக்கிறார்கள். காலில் விழ வைத்து அவமானப்படுத்தியுள்ளனர். இதை விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது. அரசும் காவல்துறையும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இனி இதுபோன்ற சம்பவங்கள் இந்தச் சமூகத்தில் நடக்கக் கூடாது” என்று கூறினார்.

இதேபோல் இந்தச் சம்பவத்திற்குப் பல்வேறு தரப்பினரும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.

issue Kayatharu sellathurai
இதையும் படியுங்கள்
Subscribe