ADVERTISEMENT

சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த 'கர்ணன்' படக்குழு!

07:23 PM Apr 14, 2021 | sivarajbharathi

ADVERTISEMENT

ADVERTISEMENT

மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'கர்ணன்'. இப்படத்தில், தனுஷிற்கு ஜோடியாக ரஜிஷா விஜயன் நடிக்கிறார். தாணு தயாரிக்க, சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். லால், லட்சுமி ப்ரியா, கெளரி கிஷன், யோகி பாபு உள்ளிட்ட பலர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ள இப்படம், கடந்த 9ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றது.

மிகப் பெரும், அரசியல் உரையாடலை சமூக வலைதளத்தில் உருவாக்கியுள்ளது 'கர்ணன்' திரைப்படம். அதே சமயம், சர்ச்சைகளுக்கும் பஞ்சமில்லை. 'பண்டாரத்தி புராணம்' என்ற பெயரில் பாடல் வெளியானபோது, இந்தப் பாடல் ஒரு குறிப்பிட்ட சமூகத்தினரை இழிவுப்படுத்துவதாகக் கூறி, இதனைப் படத்திலிருந்தும், இணையத்திலிருந்தும் நீக்க வேண்டும் என நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. பின்னர் அந்தப் பாடல், 'மஞ்சனத்திப் புராணம்' என மாற்றப்பட்டது.

படம் வெளியான பின்பு, இந்தப் படத்தில் காட்சிப்படுத்தப்பட்ட கொடியன்குளம் சம்பவம், 1995-ல் (ஜெயலலிதா ஆட்சியில்) நடந்ததாகவும் அதனைத் தவறாக 1997 -ல் (கலைஞர் ஆட்சியில்) நடந்துள்ளதைப் போல சித்தரித்துள்ளதாவும் கூறி விமர்சனம் எழுந்தது. படம் வெளியானதிலிருந்து திமுகவினர் சிலர் கடும் அதிருப்திகளை தெரிவித்து வந்தனர்.

இதைத் தொடர்ந்து, நேற்று திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதி தனது சமூக வலைதளப் பக்கத்தில், "1995 அதிமுக ஆட்சியில் நடந்த கொடியன்குளம் கலவரத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள இப்படத்தில், அச்சம்பவம் 1997ல் கழக ஆட்சியில் நடந்ததாகக் காட்டப்பட்டுள்ளது. இதனைத் தயாரிப்பாளர், இயக்குநரிடம் சுட்டிக்காட்டினேன். அந்தத் தவறை இரு தினங்களில் சரிசெய்துவிடுகிறோம் என உறுதியளித்தனர். நன்றி!" என்று குறிப்பிட்டு இருந்தார்.

இந்நிலையில், இன்று கர்ணன் படத்தில் காட்டப்பட்ட கொடியன்குளம் நிகழ்வு, '1997-ன் முற்பகுதியில்' என்பதில் இருந்து '1990களின் பிற்பகுதியிலிருந்து' என மாற்றப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT