Skip to main content

கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம்; மேல்முறையீடு செய்தவர்களின் கவனத்திற்கு

Published on 23/11/2023 | Edited on 23/11/2023

 

kalaignar Women Rights Project Attention Appellants

 

கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தை, பேரறிஞர் அண்ணா பிறந்த நாளான செப்டம்பர் 15 ஆம் தேதி (15.09.2023) காஞ்சிபுரத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்  1 கோடியே 6 இலட்சத்து 50 ஆயிரம் மகளிர், மாதந்தோறும் ரூ.1000 பெற்றுப் பயன்பெறும் வகையில் தொடங்கி வைத்தார்.

 

அதே சமயம் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் கீழ், முகாம்களில் விண்ணப்பித்து கள ஆய்வு நிலுவையில் இருந்த விண்ணப்பங்கள் இறுதி செய்யப்பட்டு, புதிதாகக் கண்டறியப்பட்டுள்ள 7 இலட்சத்து 35 ஆயிரம் பயனாளிகளுக்கும், ஏற்கனவே, வழங்கப்பட்டு வரும் 1 கோடியே 6 இலட்சத்து 50 ஆயிரம் பயனாளிகளுடன் சேர்த்து, மொத்தம் 1 கோடியே 13 இலட்சத்து 84 ஆயிரத்து 300 மகளிருக்கு, நவம்பர் மாதத்திற்கான உதவித் தொகையினை கடந்த 10 ஆம் தேதி (10.11.2023) தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தொடங்கி வைக்கப்பட்டது.

 

இந்நிலையில் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் மேல்முறையீடு செய்தவர்களின் மேல் முறையீட்டு விண்ணப்பங்கள் அதிகாரிகளால் பரிசீலிக்கும் பணி இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாகவும், மேல் முறையீட்டு விண்ணப்பங்கள் முழுமையாகப் பரிசீலிக்கப்பட்டு தகுதியானவர்களுக்கு, விண்ணப்பத்தின் நிலை குறித்து 10 நாட்களுக்குள் குறுஞ்செய்தி (SMS) மூலம் உரிய தகவல் தெரிவிக்கப்படும் என அரசு அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

காரசார வாதம்; ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு!

Published on 29/02/2024 | Edited on 29/02/2024
Supreme Court action order in Sterlite plant issue

தூத்துக்குடி மாவட்டத்தில் அமைந்துள்ள ஸ்டெர்லைட் ஆலையால் அந்தப் பகுதிகளில் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படுவதாகப் பல்வேறு அமைப்பினர் போராட்டம் நடத்தினர். இதனையடுத்து, கடந்த 2018ம் ஆண்டு மே 22ம் நாள் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தின் போது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 11 ஆண்கள் மற்றும் 2 பெண்கள் என 13 பேர் கொல்லப்பட்டனர். 40 பேர் பலத்த காயங்களை அடைந்தனர். இதையடுத்து, ஸ்டெர்லைட் ஆலையை மூடத் தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது.

இதனையடுத்து, ஸ்டெர்லைட் மீதான தடை உத்தரவை நீக்கி மீண்டும் திறக்க வேண்டும் என வேதாந்தா நிறுவனம் சார்பாக உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீதான விசாரணை கடந்த 14 ஆம் தேதி உச்சநீதிமன்றத்திற்கு வந்தது. அப்போது தமிழக அரசு தரப்பில், ‘ஸ்டெர்லைட் ஆலை, அரசின் உத்தரவையும் நீதிமன்ற உத்தரவையும் மதிப்பதும் இல்லை அமல்படுத்துவதும் இல்லை. நீதிமன்ற உத்தரவுகளை ஸ்டெர்லைட் நிர்வாகம் பலமுறை மீறியுள்ளது. விதி மீறல்களில் ஈடுபட்டதற்காக ஸ்டெர்லைட் ஆலைக்கு ஏற்கனவே ரூ.100 கோடி அபராதம் விதிக்கப்பட்டிருக்கிறது’ என்று வாதிடப்பட்டது. இதனையடுத்து உச்சநீதிமன்றம், ‘ஆலை பாதுகாப்பாக செயல்படுகிறதா என்று எந்த ஆய்வும் நடத்தாமல் உயர்நீதிமன்ற உத்தரவை ரத்து செய்ய இயலாது. அரசும், ஸ்டெர்லைட் நிர்வாகமும் ஒப்புக்கொண்டால் நிபுணர் குழு அமைத்து ஆய்வு செய்யலாம். அதன் பிறகு ஆலையை திறப்பதா? வேண்டாமா? என்பது தொடர்பாக முடிவு செய்யலாம்’ என்று தெரிவித்திருந்தது.

மேலும் இந்த வழக்கு கடந்த 21 ஆம் தேதி (21-02-24) விசாரணைக்கு வந்தது. அப்போது வேதாந்தா நிறுவனம் தரப்பில், ‘நிபுணர் குழுவை விரைந்து அமைக்க வேண்டும். மேலும் ஒரு மாதத்தில் நிபுணர் குழு ஆய்வறிக்கையை சமர்ப்பிக்க உத்தரவிட வேண்டும்’ என்று கோரிக்கை வைக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, இருதரப்பு வாதங்களைக் கேட்ட உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி, “தூத்துக்குடி மக்களின் ஆரோக்கியம் மற்றும் நலன் பாதுகாக்கப்பட வேண்டும். சாமானிய மக்கள் நேரடியாக நீதிமன்றம் வர முடியாது என்றாலும் அவர்களது கவலையை புறந்தள்ள முடியாது. அதே சமயம், தமிழ்நாடு அரசின் ஆட்சேபனைகளையும் சந்தேகங்களையும் நீதிமன்றம் புறந்தள்ள முடியாது. ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்க அனுமதி மறுத்த உயர்நீதிமன்ற உத்தரவை தவறு எனக் கூற முடியாது. அதனால் ஸ்டெர்லைட் ஆலையை உடனடியாக திறக்க அனுமதிக்க முடியாது” என்று கூறி உத்தரவிட்டிருந்தது.

Supreme Court action order in Sterlite plant issue

இந்நிலையில் இந்த வழக்கு தொடர்பான இறுதி விசாரணை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் தலைமையிலான அமர்வு முன்பு இன்று (29.02.2024) நடைபெற்றது. அப்போது தமிழக அரசு சார்பில் வாதிடுகையில், “ஸ்டெர்லைட் ஆலை 20 ஆண்டுகளாக உரிய அனுமதி மற்றும் உரிமங்களை புதுப்பிக்காமல் செயல்பட்டது. விதிகளை மீறி செயல்படுவதை வாடிக்கையாக வைத்திருந்தது. 9 ஆண்டுகளாக உரிய அனுமதியின்றி கழிவுகளை கொட்டி வைத்திருந்தது” எனத் தெரிவிக்கப்பட்டது. மேலும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் சார்பில் வழக்கறிஞர் கோபால் சங்கர நாராயணன் ஆஜராகி வாதிடுகையில், “மக்கள் பயன்படுத்தும் நீரிலும் ஸ்டெர்லைட் கழிவுகள் கலந்துள்ளது உறுதியாகி உள்ளது. கொட்டப்பட்ட காப்பர் ஸ்லாக்குகளில் அதிக அளவிலான ஆர்சனிக் அளவு உள்ளதும் ஆய்வில் தெரிய வந்துள்ளது. 20 ஆண்டுகளாக ஸ்டெர்லைட் ஆலை மாசு ஏற்படுத்தியதால் 100 கோடி அபராதம் விதிக்கப்பட்டது. ஆலை கழிவுகளால் தூத்துக்குடியில் வெள்ள பாதிப்பு ஏற்பட்டது” எனத் தெரிவிக்கப்பட்டது. மேலும் ஜிப்சம் சாம்பல் கழிவு, கருப்பு வண்ணத்திலான ஸ்லாக்குகள்  நீதிபதிகளின் பார்வைக்கும் சமர்ப்பிக்கப்பட்டன.

Supreme Court action order in Sterlite plant issue

இதனைப் பதிவு செய்து கொண்ட தலைமை நீதிபதி, “ஸ்டெர்லைட் ஆலையில் விதிமீறல்கள் பல இருப்பதால் தான் தமிழக அரசும்,  சென்னை உயர்நீதிமன்றமும் உரிய முடிவு எடுத்துள்ளது. சுற்றுச்சூழலை பாதுகாப்பது என்பது மாநில அரசின் முக்கியமான வேலைகளில் ஒன்று. ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தை சென்னை உயர்நீதிமன்றம் சிறப்பாக கையாண்டுள்ளது. ஸ்டெர்லைட் தொடர்பான வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் விசாரித்ததில் வரம்பு மீறல் இருந்ததாக கருதவில்லை” எனத் தெரிவித்தார். இதனையடுத்து தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்க அனுமதி மறுத்த சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து வேதாந்தா நிறுவனம் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை உச்சநீதிமன்றம் அதிரடியாகத் தள்ளுபடி செய்துள்ளது.

Next Story

“கீழடி அகழாய்வு பொருட்களைத் தமிழக அரசிடம் ஒப்படைக்க வேண்டும்” - உயர்நீதிமன்றம்

Published on 29/02/2024 | Edited on 29/02/2024
keezhadi excavation materials should be handed over to the TN govt says High Court 

சிவகங்கை மாவட்டம் கீழடியில் கடந்த 2013 முதல் 2016 வரை மத்திய அரசு சார்பில் முதல் 2 கட்ட அகழாய்வு நடத்தப்பட்டது. இந்த அகழாய்வில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பழமையான பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டன. இந்த அகழாய்வானது தொல்லியல் ஆய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றன. அதன் பின்னர் அமர்நாத் ராமகிருஷ்ணன் அங்கிருந்து பணியிட மாற்றம் செய்யப்பட்டார். மேலும் இந்த அகழாய்வு தொடர்பாக சமர்ப்பிக்கப்பட்ட 982 பக்கங்கள் கொண்ட அறிக்கை மத்திய அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டன. இருப்பினும் இதுவரை இந்த அறிக்கை பொதுவெளியில் வெளியிடப்படாமல் உள்ளது. அதேபோன்று அகழாய்வின் போது கிடைத்த பொருட்களும் தமிழக அரசிடம் ஒப்படைக்கப்படாமல் இருந்து வருகிறது.

இத்தகைய சூழலில் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கறிஞர் மதி என்பவர் கடந்த 2016 ஆம் ஆண்டு மனுத் தாக்கல் செய்திருந்தார். அதில், “கீழடி அகழாய்வில் தொல்லியல் ஆய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணனை மீண்டும் பணியமர்த்த வேண்டும். இரண்டாம் கட்ட அகழாய்வில் கிடைத்த பொருட்களை தமிழக அரசிடம் மத்திய அரசு ஒப்படைக்க உத்தரவிட வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் இந்த வழக்கு உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி கங்காபூர்வாலா தலைமையிலான அமர்வு முன்பு இன்று (29.02.2024) விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், “கீழடி இரண்டாம் கட்ட அழகாய்வின் போது கிடைத்த 5 ஆயிரத்து 765 அகழாய்வு பொருட்களும் தமிழக அரசிடம் ஒப்படைக்கப்படும்” எனத் தெரிவித்தார். இதனைப் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், “அமர்நாத் ராமகிருஷ்ணனின் கீழடி அகழாய்வு அறிக்கையை வெளியிட்ட பின் மத்திய தொல்லியல் துறையிடம் உள்ள கீழடியின் இரண்டாம் கட்ட அகழாய்வின் போது கிடைத்த 5 ஆயிரத்து 765 அகழாய்வு பொருட்களை தமிழக அரசிடம் ஒப்படைக்க மத்திய அரசுக்கு உத்தரவிடப்படுகிறது” எனத் தெரிவித்தனர்.

முன்னதாக தொல்லியல் ஆய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணன் அறிக்கையை வெளியிட வேண்டும் என மதுரையைச் சேர்ந்த பிரபாகர் பாண்டியன் என்பவர் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார். இந்த மனு உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி கங்காபூர்வாலா தலைமையிலான அமர்வு முன்பு கடந்த 26 ஆம் தேதி (26.02.2024) விசாரணைக்கு வந்தது.

keezhadi excavation materials should be handed over to the TN govt says High Court 

அப்போது மத்திய அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர், “கீழடியில் மத்திய அரசு மேற்கொண்ட அகழாய்வு குறித்த அறிக்கைகள் தயாரிக்கும் பணிகள் விரைவாக நடைபெற்று வருகிறது. 9 மாதங்களில் அறிக்கை வெளியிடப்படும்” எனத் தெரிவித்திருந்தார். இதனைப் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள் பிறப்பித்திருந்த உத்தரவில், “கீழடியில் நடத்தப்பட்ட முதல் 2 கட்ட அகழாய்வு குறித்த அமர்நாத் ராமகிருஷ்ணன் அறிக்கையை 9 மாதங்களில் பொது வெளியில் வெளியிட வேண்டும்” என மத்திய அரசுக்கு உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.