மணல் மாஃபியா பற்றி தொடர்ந்து செய்திகள் வெளியிட்டு வந்த பத்திரிகையாளர் லாரி ஏற்றி கொலை செய்யப்பட்டசம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மத்தியப்பிரதேசம் மாநிலம் கோத்வாலி காவல்நிலையம் அருகில் உள்ளசாலையில், இன்று காலை தனது இருசக்கர வாகனத்தில் பயணம் செய்த சந்தீப் சர்மா எனும் பத்திரையாளர், பின்னாலிருந்து வந்த லாரி ஏற்றப்பட்டுகொலை செய்யப்பட்டார்.
கொலை செய்யப்பட்ட சந்தீப் சர்மா, தேசிய ஊடகம் ஒன்றில் செய்தியாளராக பணிபுரிந்து வருகிறார். சமீபத்தில் காவல்துறை உயரதிகாரி ஒருவர் மணல் கொள்ளையில் ஈடுபட்டு வருவது குறித்த செய்தியை, செல்போன் உரையாடல் ஆதாரத்தோடு வெளியிட்டார் சந்தீப் சர்மா. அவரது ஸ்டிங் ஆப்பரேஷனால் சம்மந்தப்பட்ட காவல்துறை அதிகாரி பணியிடைமாற்றம் செய்யப்பட்டார். இதனால், தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாக ஏற்கெனவே மாவட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்தில் சந்தீப் சர்மா புகாரளித்திருந்த நிலையில், இந்தக் கொலை சம்பவம் நடந்துள்ளது. சில மீட்டர் தூரத்திலேயே காவல்நிலையம் இருந்தும் சம்பவ இடத்திற்கு காவல்துறையினர் வருவதற்கு நீண்டநேரமானதுகுறிப்பிடத்தக்கது.
நாட்டில் நடக்கும் தவறுகளை வெளிஉலகிற்குக் கொண்டுவருவதில், உயிரைப் பணயம் வைத்து செயல்படும் பத்திரிகையாளர்களுக்கு அச்சுறுத்தல் தரும் விதமாக இந்தக் கொலை நடந்திருப்பதாக பத்திரிகையாளர்கள் சங்கத்தின் சார்பில் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.