Jharkhand government issued an important notification For women remarrying

ஜார்க்கண்ட் மாநில முதல்வராக பதவி வகித்து வந்தவர் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியின் தலைவர் ஹேமந்த் சோரன் ஆவார். இவர் சுரங்க முறைகேட்டுடன் தொடர்புடைய பண மோசடியில் ஈடுபட்டதாகக் கூறி, ஹேமந்த் சோரன் மீதான சட்ட விரோதப் பணப்பரிமாற்ற வழக்கை அமலாக்கத்துறை விசாரித்து வந்தது. அதன்படி கடந்த ஜனவரி 31ஆம் தேதி ஹேமந்த் சோரன் கைது செய்யப்பட்டார். இதற்கு முன்னதாக மாநில ஆளுநர் சி.பி. ராதாகிருஷ்ணனை சந்தித்து ஹேமந்த் சோரன் தனது பதவியை ராஜினாமா செய்திருந்தார். இதனையடுத்து, ஜார்க்கண்ட் முதல்வராக சம்பாய் சோரன் கடந்த பிப்ரவரி 2 ஆம் தேதி பதவியேற்று பொறுப்பு வகித்து வருகிறார்.

Advertisment

சம்பாய் சோரன் முதலமைச்சராக பொறுப்பேற்ற பின்பு, ஜார்க்கண்ட் மாநில அரசு 2024-2025ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டை நேற்று (06-03-24) சட்டசபையில் தாக்கல் செய்தது. அந்த பட்ஜெட்டில், ஜார்க்கண்ட் மாநிலத்தில் மறுமணம் செய்துகொள்ளும் விதவை பெண்களுக்கு உதவித்தொகை வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது.

Advertisment

இது தொடர்பாக, பெண்கள் மற்றும் குழந்தைகள் மற்றும் சமூக நலத்துறையின் செயலாளர் மனோஜ் குமார் பேசியதாவது, “நம் சமூகத்தில் விதவை பெண்கள், கண்ணியமான வாழ்க்கையை நடத்துவதில்லை. கணவனை இழந்த விதவைகள் கண்ணியமாக வாழ வேண்டும் என்பதற்காக இந்த திட்டத்தை ஜார்க்கண்ட் அரசு அறிமுகப்படுத்தியிருக்கிறது. விதவை பெண்கள், தங்கள் திருமணப் பதிவு சான்றிதழுடன் விண்ணப்பிக்கலாம். மறுமணம் செய்து கொள்ளும் எந்த விதவை பெண்களும், திருமணமான ஒரு வருடத்திற்குள் இதற்கு விண்ணப்பிக்கலாம். அவர்களது வங்கிக் கணக்கில் ரூ.2 லட்சம் செலுத்தப்படும்” என்று தெரிவித்துள்ளார்.