ddd

கடந்த 2018ஆம் ஆண்டு உடல்நலக் குறைவு காரணமாக இறந்தார் காடுவெட்டி ஜெ.குரு. அரியலூர் மாவட்டம் காடுவெட்டி கிராமத்தைச் சேர்ந்த இவர்,பாமக எம்எல்ஏவாகவும், வன்னியர் சங்கத் தலைவராகவும் பதவி வகித்தவர். இவர் மறைந்ததையடுத்து அவரது மகன் கனலரசன், குருவின் ஆதரவாளர்களை ஒருங்கிணைத்து மாவீரன் மஞ்சள்படை என்ற அமைப்பைத் தொடங்கினார்.

Advertisment

இந்தநிலையில், குருவின் மனைவி சொர்ணலதா மற்றும் மகன் கனலரசன் தரப்பினரும், ஐ.ஜே.கே. கட்சி தரப்பினரும் சந்தித்துப் பேசியுள்ளனர். 2021 சட்டமன்றத் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைமையிலான அணியில் ஐ.ஜே.கே.வுக்கு 40 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. ஐ.ஜே.கே.வுக்கு ஒதுக்கப்பட்ட 40 தொகுதிகளில் ஒன்று அரியலூர் மாவட்டத்தில் உள்ள ஜெயங்கொண்டம் தொகுதி. இதில் சொர்ணலதா, ஐ.ஜே.கே. சார்பில் போட்டியிடுகிறார். இந்த அறிவிப்பை ஐ.ஜே.கே. கட்சியின் தலைவர் ரவி பச்சமுத்து சென்னையில் வெளியிட்டார்.

மேலும் பேசிய அவர்,“காடுவெட்டி குருவின் ஆதரவாளர்களும் வன்னியர் சமூகத்தினரும் இந்தத் தேர்தலில் இந்திய ஜனநாயக கட்சிக்கு (ஐ.ஜே.கே.) மாபெரும் வெற்றியைத் தேடி தருவார்கள். எங்களின் வேட்பாளர் பட்டியல் விரைவில் வெளியிடப்படும்.” என்று தெரிவித்தார்.

Advertisment

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் இருந்து அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள பாமக, 2021 சட்டமன்றத் தேர்தலுக்கு ஜெயங்கொண்டம் தொகுதி உள்பட 23 தொகுதிகளைப் பெற்றுள்ளது. இதில் ஜெயங்கொண்டம் தொகுதியில் பாமக சார்பில் அக்கட்சியின் வழக்கறிஞரும் செய்தித் தொடர்பாளருமான கே.பாலு போட்டியிடுகிறார்.