Skip to main content

“தேர்தல் பத்திர ஊழல் குறித்து விசாரணை நடத்தப்படும்” - காங்கிரஸ் உறுதி!

Published on 05/04/2024 | Edited on 05/04/2024
"Investigation will be conducted on election paper scam" - Congress confirmed

டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் மக்களவைத் தேர்தலுக்கான வாக்குறுதிகள் கொண்ட அறிக்கையை காங்கிரஸ் கட்சி இன்று (05.04.2024) வெளியிட்டது. அப்போது காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, அக்கட்சியின் மூத்த தலைவர்களான சோனியா காந்தி, ராகுல் காந்தி, பொதுச்செயலாளர் கே.சி. வேணுகோபால் மற்றும் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் ஆகியோர் அறிக்கையை வெளியிட்டனர். 5 தலைப்புகளில் 25 வாக்குறுதிகளை காங்கிரஸ் கட்சி அளித்துள்ளது.

அதில், “புதுச்சேரி மற்றும் ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்திற்கு மாநில அந்தஸ்து வழங்கப்படும். மகாத்மா காந்தி 100 நாள் வேலை திட்டத்திற்கான ஊதியம் ரூ. 400 ஆக உயர்த்தப்படும். மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் பதிவான வாக்குகள் ஒப்புகைச் சீட்டுடன் சரிபார்க்கப்படும். அக்னிபாத் திட்டம் ரத்து செய்யப்படும். வாசிக்கும் பழக்கத்தை ஊக்குவிக்க ஒவ்வொரு மாவட்டத்திலும் அம்பேத்கர் பவன்கள் மற்றும் நூலகங்கள் உருவாக்கப்படும். மூத்த குடிமக்கள், கைம்பெண்கள் மற்றும் மாற்றுதிறனாளிகளுக்கு மத்திய அரசின் தேசிய சமூக உதவித் திட்டத்தின் கீழ் மாதம்தோறும் வழங்கப்படும் உதவித்தொகை ரூ.1,000 ஆக உயர்த்தப்படும்.

ஒவ்வொரு மாவட்டத்திலும், மருத்துவக் கல்லூரியுடன் கூடிய ஒரு அரசு மருத்துவமனை அமைக்கப்படும். ஏழை மற்றும் எஸ்.சி., எஸ்.டி. பிரிவு மாணவர்களுக்காக உண்டு உறைவிடப் பள்ளிகள் ஒவ்வொரு தொகுதியிலும் விரிவுபடுத்தப்படும். அரசு பணிகளுக்காக நடத்தப்படும் தேர்வுகளுக்கான விண்ணப்பக் கட்டணம் ரத்து செய்யப்படும். பி.எம். கேர்ஸ் நிதி ஊழல் குறித்து விசாரிக்கப்படும். தேர்தல் பத்திரம் ஊழல் குறித்து விசாரணை நடத்தப்படும். ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம் கொண்டுவரப்பட மாட்டாது.

கடந்த 10 ஆண்டுகளில் பா.ஜ.க. அரசு நாடாளுமன்றத்தில் எவ்வித விவாதமும் இன்றி கொண்டு வந்த மக்கள் விரோத சட்டங்கள் திரும்பப் பெறப்படும். வேறு கட்சிக்கு தாவினால் எம்.எல்.ஏ., எம்.பி. பதவிகள் தானாகவே பறிபோகும் வகையில் அரசியல் சட்டத்தில் உரிய திருத்தம் செய்யப்படும். பால்புதுமையினர் (LGBTQIA+) நல சங்கங்கள் அடையாளம் காணப்பட்டு அங்கீகரிக்கப்படுவதற்கான சட்டம் இயற்றப்படும். பெண்களுக்கான ஊதியத்தில் பாகுபாடு காட்டுவதை தடுக்க ஒரே வேலை, ஒரே ஊதியம் அமல்படுத்தப்படும். 2025 ஆம் ஆண்டு முதல் மத்திய அரசு பணிகளில் பெண்களுக்கு 50% இட ஒதுக்கீடு வழங்கப்படும். பா.ஜ.க. மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணி அரசால் இயற்றப்பட்ட ஜி.எஸ்.டி. சட்டங்கள் ஜிஎஸ்டி 2.0 என திருத்தம் செய்யப்படும். புதிய ஜி.எஸ்.டி.யானது உலகளவில் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஜி.எஸ்.டி. என்ற கொள்கையின் அடிப்படையில் அமைந்திருக்கும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

சார்ந்த செய்திகள்