/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/murmu-bud-speech-art-1.jpg)
இந்த ஆண்டிற்கான நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் இன்று (31.01.2025) காலை 11 மணிக்குத் தொடங்கியது. இந்த ஆண்டின் முதல் கூட்டத் தொடரான இந்த பட்ஜெட் கூட்டத் தொடரின் முதல் நாளான இன்று குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவின் உரையுடன் தொடங்கியது. இந்நிலையில், குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு பேசுகையில், “பழங்குடியின சமுதாயத்தைச் சேர்ந்த ஐந்து கோடி மக்களுக்காக எனது அரசு ‘தர்தி ஆபா ஜன்ஜாதியா கிராம் உத்கர்ஷ் அபியான்’ என்ற திட்டத்தைத் தொடங்கியுள்ளது. இரண்டு மாதங்களுக்கு முன்பு, நமது அரசியலமைப்பை ஏற்று 75 ஆண்டுகள் நிறைவடைந்ததைக் கொண்டாடினோம். சில நாட்களுக்கு முன்பு 75ஆம் ஆண்டு பயணத்தை நிறைவு செய்தோம்.
அனைத்து இந்தியர்கள் சார்பாக, பாபாசாகேப் அம்பேத்கர் மற்றும் அரசியலமைப்பு குழுவில் உள்ள அனைவருக்கும் தலைவணங்குகிறேன். ஒரே நாடு, ஒரே தேர்தல் மற்றும் வக்பு சட்டத் திருத்த மசோதாவை நோக்கி அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. இளைஞர்களின் கல்வி மற்றும் அவர்களுக்கு புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்குவதில் எனது அரசு சிறப்புக் கவனம் செலுத்தியுள்ளது. ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ், 70 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய ஆறு கோடி மூத்த குடிமக்களுக்கு மருத்துவக் காப்பீடு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
வரலாற்றுச் சிறப்புமிக்க மகா கும்பமேளா நடக்கிறது. இது நமது கலாச்சார பாரம்பரியம் மற்றும் சமூக விழிப்புணர்வின் திருவிழா. இந்தியா மற்றும் உலகம் முழுவதும் இருந்து கோடிக்கணக்கான பக்தர்கள் பிரயாக்ராஜில் புனித நீராடியுள்ளனர். மௌனி அமாவாசை அன்று நடந்த விபத்துக்கு எனது இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதுடன் காயமடைந்தவர்கள் விரைவில் குணமடையப் பிரார்த்திக்கிறேன். நடுத்தர மக்களின் சொந்த வீடு என்ற கனவை நிறைவேற்ற எனது அரசு உறுதி பூண்டுள்ளது. நாட்டில் பெண்கள் தலைமையிலான வளர்ச்சியை எனது அரசு நம்புகிறது. அதற்காக 3 கோடி பேரை அரசு இலக்காகக் கொண்டுள்ளது.
இன்றைக்குப் பெண்கள் அதிக அளவில் போர் விமானங்களை பறக்கவிட்டும், காவல்துறையில் சேர்வதுடனும், நாட்டின் முன்னணி கார்ப்பரேட் நிறுவனங்களிலும் பணியாற்றுகிறார்கள் என்பது பாராளுமன்றத்திற்குப் பெருமை சேர்க்கும் விஷயம். நமது மகள்கள் ஒலிம்பிக் பதக்கங்களை வென்று நாட்டிற்குப் பெருமை சேர்க்கிறார்கள். இன்று நமது இளைஞர்கள் ஸ்டார்ட்அப் முதல் விளையாட்டு, விண்வெளி என ஒவ்வொரு துறையிலும் நாட்டிற்குப் பெருமை சேர்த்துள்ளனர். செயற்கை நுண்ணறிவு மற்றும் தொழில்நுட்பத்தை ஏற்றுக்கொள்வது போன்ற துறைகளில் இந்தியா உலகிற்கு வழி காட்டி வருகிறது. இந்தியாவை உலகளாவிய கண்டுபிடிப்பு சக்தியாக மாற்றுவதே எங்கள் நோக்கம். செயற்கை நுண்ணறிவு துறையில், இந்தியா செயற்கை நுண்ணறிவு மிஷன் தொடங்கப்பட்டுள்ளது” எனத் தெரிவித்தார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)