Advertisment

“நியூசிலாந்து செய்ததை இந்தியாவும் முயற்சிக்கலாமே” - அன்புமணி புதிய யோசனை

publive-image

நியூசிலாந்து அரசு தனது நாட்டில் புகையிலைப் பொருட்களின் பயன்பாட்டையும், புகைப்பழக்கத்தையும் மொத்தமாக ஒழித்திடும் வகையில் புதிய சட்டத்தை கொண்டுவரவிருக்கிறது. இதுகுறித்து பாமக இளைஞர் அணி செயலாளர் அன்புமணி ராமதாஸ் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார்.

Advertisment

அதில் அவர், “நியூசிலாந்தில் உடனடியாக இளைஞர்களிடமும், ஒரு குறிப்பிட்ட ஆண்டுகளில் ஒட்டுமொத்த சமுதாயத்திலும் புகைப்பிடிக்கும் வழக்கத்தை முடிவுக்கு கொண்டு வருவதற்கான சட்டத்தை இயற்ற நியூசிலாந்து அரசு தீர்மானித்திருக்கிறது. இந்த சட்டம் நடைமுறைக்கு வந்தால், அது புகைப்பழக்கத்தையும், புகையிலைப் பொருட்கள் பயன்பாட்டையும் ஒழிப்பதற்காக உருவாக்கப்பட்ட மிகச்சிறந்த ஆயுதமாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

Advertisment

குடிமக்களின் நல்வாழ்வில் மிகுந்த அக்கறை செலுத்தும் நாடுகளில் நியூசிலாந்து குறிப்பிடத்தக்கதாகும். நியூசிலாந்தில் புகைப்பழக்கத்தையும், புகையிலைப் பொருட்களின் பயன்பாட்டையும் முடிவுக்குக் கொண்டுவர அந்நாட்டு அரசு பல ஆண்டுகளாகவே நடவடிக்கை எடுத்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக, 2008-ஆம் ஆண்டுக்குப் பிறகு பிறந்த எவருக்கும் சிகரெட் மற்றும் பிற புகையிலைப் பொருட்களை விற்பதற்கு தடை விதிக்கும் சட்டத்தை இயற்ற அந்நாடு தீர்மானித்துள்ளது. 2004-ஆம் ஆண்டுக்கு பிறகு பிறந்தவர்களுக்கு மட்டும் புகைப்பிடிக்கத் தடை விதிக்கும் சட்டத்தை இயற்றலாம் என்று கடந்த ஏப்ரல் மாதத்தில் திட்டமிட்டிருந்த நியூசிலாந்து அரசு, இப்போது 2008-ஆம் ஆண்டு வரை பிறந்தவர்களுக்கும் தடையை நீட்டிக்கவிருக்கிறது.

நியூசிலாந்து அரசின் புதிய சட்டம் 2022-ஆம் ஆண்டு தொடக்கத்தில் நிறைவேற்றப்பட்டு நடைமுறைக்கு வரும். இந்தச் சட்டம் நடைமுறைக்கு வந்தால், 14 வயதுக்கும் கீழ் உள்ள எவரும் இனி எந்தக் காலத்திலும் புகைப்பிடிக்க முடியாது. இந்தச் சட்டம் இயற்றப்படும் போது 18 வயதுக்கும் கூடுதலாக இருப்பவர்கள் புகைப் பிடிக்கலாம் என்றாலும் கூட, அவர்களுக்கு விற்பனை செய்யப்படும் சிகரெட்டுகளில் நிகோட்டின் அளவு மிகவும் குறைவாக இருக்க வேண்டும் என்பதை சட்டம் உறுதி செய்யும். அதேபோல், சிகரெட் மற்றும் புகையிலைப் பொருட்களை விற்பனை செய்யும் கடைகளின் எண்ணிக்கையை ஆண்டுக்கு ஆண்டு குறைக்கவும் அச்சட்டத்தில் வகை செய்யப்பட்டுள்ளது. இத்தகைய நடவடிக்கைகளால் 2025-ஆம் ஆண்டுக்குள் நியுசிலாந்தில் புகைப்பிடிப்பவர்களின் 5 விழுக்காட்டுக்கும் கீழாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதுமட்டுமின்றி, அடுத்த சில ஆண்டுகளில் நியூசிலாந்தில் புகைப்பிடிப்பவர்கள், புகையிலைப் பொருட்களை பயன்படுத்துபவர்களே இருக்க மாட்டார்கள். இப்படி ஒரு சூழலை நினைத்துப் பார்க்கவே மகிழ்ச்சியாகவும், பெருமையாகவும் இருக்கிறது. இதே போன்ற சூழல் தமிழ்நாடு உட்பட இந்தியாவிலும் ஏற்படுத்தப்பட்டால் எப்படி இருக்கும்? என்ற வினா நமது இதயத்தில் இயல்பாக எழுகிறது. இன்னும் கேட்டால் புகையிலைக்கு தடை விதிப்பதற்கான தேவை நியூசிலாந்து நாட்டை விட இந்தியாவில் பல மடங்கு அதிகமாக உள்ளது.

நியூசிலாந்து நாட்டில் 5 லட்சம் பேர் மட்டும் தான் புகைப்பிடிக்கின்றனர்; அவர்களில் ஆண்டுக்கு 4500 பேர் உயிரிழக்கின்றனர். இது ஒப்பீட்டளவில் மிகவும் குறைவு தான். எனினும், அங்கு புகையிலை பொருட்கள் முழுமையாக தடை செய்யப்படுகின்றன. ஆனால், இந்தியாவில் 12 கோடி பேர் புகைப்பிடிக்கிறார்கள். அவர்களில் ஒவ்வொரு ஆண்டும் 13 லட்சம் பேர் உயிரிழக்கிறார்கள். அப்படியானால், இந்தியாவில் சிகரெட் மற்றும் புகையிலைப் பொருட்களுக்கு தடை விதிக்க வேண்டியத் தேவை எவ்வளவு அதிகம் என்பதை உணரலாம்.

உலக சுகாதார நிறுவனம் மேற்கொண்ட ஆய்வின்படி, இந்தியாவில் 18 வயதைக் கடந்த ஆண்களில் 25 விழுக்காட்டினரும், பெண்களில் 15 விழுக்காட்டினரும் புகைப்பிடிப்பது தெரியவந்துள்ளது. இந்தியாவில் ஆண்களில் ஐந்தில் ஒருவரின் உயிரிழப்புக்கும், பெண்களில் இருபதில் ஒருவரின் இறப்புக்கும் புகையிலை தான் காரணமாக உள்ளது. இந்தத் தீமைகளை கருத்தில் கொண்டு தான் மத்திய சுகாதாரத்துறை அமைச்சராக பணியாற்றிய காலத்தில் பொது இடங்களில் புகைப்பிடிக்கத் தடை, திரைப்படங்களில் புகை பிடிக்கும் காட்சிகளின் போது எச்சரிக்கை வாசகம், புகையிலைப் பொருட்களின் உறைகள் மீது எச்சரிக்கைப் படங்கள் உள்ளிட்ட ஏராளமான நடவடிக்கைகளை மேற்கொண்டேன். அது சாதகமான விளைவுகளை ஏற்படுத்தியுள்ளது.

ஆனாலும், புகையிலையின் தீய தாக்கங்களில் இருந்து இந்தியா இன்னும் முழுமையாக விடுபடவில்லை. எனவே, நியூசிலாந்து மேற்கொள்வதைப் போல புகையிலைக்கு எதிராக துணிச்சலான நடவடிக்கைகள் இந்தியாவில் மேற்கொள்ளப்பட வேண்டும். இந்தியாவில் புகைப் பிடிப்பதற்கான வயதை 18-லிருந்து 21 ஆக உயர்த்துவதற்கான சட்டம் தயாரிக்கப்பட்டு நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ளது. அந்த சட்டத்தை உடனடியாக நிறைவேற்றுவது மட்டுமின்றி, ஒவ்வொரு ஆண்டும் புகைப்பிடிப்பதற்கான வயது வரம்பை ஓராண்டு நீட்டிக்க வேண்டும். அவ்வாறு செய்தால் இப்போது 18 வயது மற்றும் அதற்கும் கீழ் இருப்பவர்கள் தமது வாழ்நாளில் புகைப்பிடிக்க முடியாது. அதனால் இந்தியாவிலும் புகைப்பிடிக்காத இளைய தலைமுறை உருவாகும்.

எனவே, இந்தியாவில் புகைப்பிடிப்பதையும், புகையிலைப் பொருட்களை பயன்படுத்துவதையும் கட்டுப்படுத்த சட்டப்பூர்வமான நடவடிக்கைகளை மத்திய அரசு உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்துகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

anbumani ramadoss
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe