Skip to main content

பொது இடத்தில் விவாதம் நடத்துவதற்கு நான் தயார்... ராமதாஸ்

Published on 18/12/2019 | Edited on 18/12/2019

 

பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், ''ஈழத்தமிழர் நலன் பற்றி திமுக பேசுவது சாத்தான் வேதம் ஓதுவதற்கு சமமானது'' என்ற தலைப்பில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
 

அதில், காஞ்சிபுரத்தில் குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தில் பங்கேற்றுப் பேசிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், ஈழத்தமிழர்களுக்கு பாட்டாளி மக்கள் கட்சி துரோகமிழைத்து  விட்டதாக குற்றஞ்சாட்டியிருக்கிறார். இலங்கையில் ஒன்றரை லட்சம் அப்பாவித் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டதற்கு துணை நின்றதுடன், அதற்கு கூலியாக புதிய அமைச்சரவையில் கூடுதல் துறைகளை  பெற்றுக் கொண்ட திமுக, ஈழத்தமிழர் நலன் குறித்து பேசுவது சாத்தான் வேதம் ஓதுவதற்கு சமமானது.
 

குடியுரிமை சட்டத்திற்கு ஆதரவு அளித்ததன் மூலம் ஈழத்தமிழர்களுக்கு இந்திய குடியுரிமை கிடைப்பதை பாட்டாளி மக்கள் கட்சி தடுத்து விட்டது என்பது தான் மு.க.ஸ்டாலினின் குற்றச்சாட்டு ஆகும். ஈழத் தமிழர்களின் கோரிக்கைகள் குறித்து அவருக்கு சரியான புரிதல் இருந்திருந்தாலோ, ஈழத்தமிழர்களின் நலனில் அக்கறை இருந்திருந்தாலோ இப்படி ஒரு கருத்தை அவர் கூறியிருந்திருக்க மாட்டார். ஈழத் தமிழர்களின் தேவை இந்தியக் குடியுரிமை அல்ல. அவர்களின் கோரிக்கை இந்தியாவில்  கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் முன்னுரிமை மற்றும் கண்ணியமான வாழ்க்கைக்கான உத்தரவாதம் அல்லது  இந்தியா அல்லது இலங்கை ஆகிய இரு நாடுகளிலும் வாழ்வதற்கான இரட்டைக் குடியுரிமை தான்.

 

ramadoss


 

2009-ஆம் ஆண்டு இலங்கைப் போரில் ஒன்றரை லட்சம் அப்பாவித் தமிழர்களை படுகொலை செய்ய துணை நின்றதால் ஏற்பட்ட அவப்பெயரில் இருந்து வெளிவர வேண்டும் என்று நினைத்த அப்போதைய முதலமைச்சரும், திமுக தலைவருமான கலைஞர், அந்த ஆண்டின் செப்டம்பர் மாதத்தில் காஞ்சிபுரத்தில் நடைபெற்ற திமுக முப்பெரும் விழாவில், ஈழத்தமிழர்களுக்கு இந்தியக் குடியுரிமை வழங்க வேண்டும்  என்று தீர்மானம் இயற்றச் செய்தார். அதனடிப்படையில் அப்போதைய பிரதமருக்கு கடிதம் ஒன்றையும்  கலைஞர் எழுதினார். ஆனால், அதற்கு உலகம் முழுவதும் உள்ள தமிழர்களிடமிருந்து கடும் எதிர்ப்பு  எழுந்தது. இதையடுத்து ஈழத்தமிழர்களுக்கு இந்திய குடியுரிமை என்ற முழக்கத்தை திமுக கைவிட்டது.
 

ஈழத்தமிழர்களைப் பொருத்தவரை இந்தியாவில் குடியுரிமை பெற்று விட்டால், அதன்பின்னர் ஈழத்திற்கு திரும்ப முடியாது; தங்களின் தாயகமான ஈழத்தை நிரந்தரமான இழந்து விடுவோம் என அஞ்சுகின்றனர். அதனால் தான் ஐரோப்பா, கனடா போன்ற நாடுகளுக்கு சென்றவர்களில் பெரும்பான்மையானோர் இன்னும் குடியுரிமை பெறாமல் வசிக்கின்றனர். அதேநேரத்தில் என்றாவது ஒரு நாள் தாயகம் திரும்ப இயலும் என்று நினைக்கும் ஈழத்தமிழர்கள், அதுவரை தமிழகத்தில் தாங்கள் கண்ணியமாக வாழ்வதற்கு ஏற்ற வசதிகள் செய்து தரப்பட வேண்டும் என்று கோருகின்றனர். அதனால் தான் ஈழத்தமிழர்களை பொறுத்தவரை அவர்களுக்கு எத்தகைய குடியுரிமை வேண்டும் என்பதை, அவர்களின் விருப்பம் அறிந்து அதற்கேற்றவாறு தீர்மானிக்க வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி வலியுறுத்தி வருகிறது.
 

ஆனால், தமிழக அரசியல் வரலாற்றையே அறியாத மு.க.ஸ்டாலின், ஈழத்தமிழர்களின் எதிர்பார்ப்பை அறியாமல், ஏதோ அவர்களைக் காக்க வந்த தேவதூதனே தாம் தான் என்பதைப் போல பேசுகிறார்.  ஒருவேளை மு.க.ஸ்டாலின் மூச்சு முட்ட பேசுவதைப் போல ஈழத்தமிழர்களின் தேவை இந்தியக் குடியுரிமை என்றாலும் கூட,  அதற்காக இலங்கைப் பிரச்சினை தீவிரமடைந்த 1983-ஆம் ஆண்டுக்கு பிறகு திமுக தமிழகத்தை ஆட்சி செய்த 12 ஆண்டுகளிலும், மத்திய அரசில் அங்கம் வகித்த 18 ஆண்டுகளிலும் சிறு துரும்பைக் கூட அசைக்கவில்லை என்பது தான் உண்மை. இதை திமுகவால் மறுக்க முடியுமா?
 

2009-ஆம் ஆண்டில் ஈழத்தமிழர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்க வேண்டும் என்று முப்பெரும் விழாவில் தீர்மானம் நிறைவேற்றிய திமுக, அதன்பின்னர் 2012-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 12-ஆம்  தேதி சென்னையில் நடைபெற்ற ஈழத்தமிழர் வாழ்வுரிமை மாநாட்டிலும் அதேபோன்ற தீர்மானத்தை நிறைவேற்றியது. இத்தகைய தீர்மானம் நிறைவேற்றப்பட்ட இரு தருணங்களிலும், மத்திய அமைச்சரவையில் திமுக அங்கம் வகித்தது. இப்போது குடியுரிமைச் சட்டத்தில் எத்தகைய திருத்தங்களை செய்ய வேண்டும் என்று திமுக கூறுகிறதோ, அத்தகைய திருத்தங்களை அப்போதே காங்கிரஸ் கட்சிக்கு அழுத்தம் கொடுத்து நிறைவேற்றச் செய்திருக்கலாம். அதை செய்யாதது ஏன் என்பதை ஸ்டாலின் விளக்குவாரா?


 

 

ஈழத்தமிழர்களுக்கு குடியுரிமை வழங்க வேண்டும் என்று இப்போது முழங்கும் திமுக, தங்கள் ஆட்சியின் போது தமிழகத்திற்கு அகதிகளாக வந்த ஈழத்தமிழர்களை மரியாதையுடனாவது நடத்தியதா? திமுக ஆட்சியில் அகதிகளாக வந்த ஈழத்தமிழர்கள் அனைவரும் சுயமரியாதைக்கு இழுக்கு ஏற்படும் வகையில் தான் நடத்தப்பட்டனர். அவர்கள் அனைவரும் முகாம்களின் அடைத்து வைக்கப்பட்டனர்.

 

ஈழத்தமிழர்களுக்காக இப்போது நீலிக்கண்ணீர் வடிக்கும் திமுக, ஈழத்தில் போர் நடந்த போது நடத்திய நாடகங்களும், அடித்த பல்டிகளும் மறக்கவோ, மன்னிக்கவோ முடியாதவை. இலங்கையில் கொத்துக் கொத்தாக தமிழர்கள் கொல்லப்பட்ட போது கலைஞர் நடத்திய 3 மணி நேர உண்ணாவிரத நாடகத்தை மறக்க முடியுமா?
 

இலங்கையில் போர் நிறுத்தம் செய்யப்படும் என்று உத்தரவாதம் அளிக்கப்பட்டதால் தான் சாகும்வரை உண்ணாவிரதத்தை கைவிட்டேன் என்று கூறிய அப்போதைய முதலமைச்சர் கலைஞரிடம், ‘‘இலங்கையில்  தமிழர்கள் தொடர்ந்து கொல்லப்படுகிறார்களே?’’ எனக் கேட்ட போது, ‘‘மழை விட்டு விட்டது.... தூவானம் விடவில்லை’’ என்று நக்கல் செய்ததை மன்னிக்க முடியுமா?
 

இலங்கையில் போரை நிறுத்த வேண்டும் என்பதற்காக முத்துக்குமார் என்ற இளைஞர் சென்னையில் தீக்குளித்து உயிர்த்தியாகம் செய்தார். தனது உடலையே ஆயுதமாக்கி, ஈழப்போருக்கு எதிராக போராட வேண்டும் என்று அவர் கடிதம் எழுதியிருந்தார். அதன்படி போராட தமிழக இளைஞர்கள் ஆயத்தமான போது,  முத்துக்குமாருக்கு தமிழக மக்கள் அஞ்சலி செலுத்த விடாமல் திமுக அரசு தடுத்ததையும், இறுதி ஊர்வலத்தில் கூட தடியடி நடத்தியதையும் மறக்க முடியுமா... மன்னிக்க முடியுமா?
 

இலங்கைப் போரை தடுத்து நிறுத்தக் கோரி தமிழகத்தில் 18 பேர் உயிர்த்தியாகம் செய்ததை திமுக அரசு கொச்சைப்படுத்தியதை மறக்க முடியுமா?
 

இலங்கைப் போரில் ஒன்றரை லட்சம் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டதற்காக உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் வேதனைப்பட்டுக் கொண்டிருந்த போது, தில்லியில் முகாமிட்டு, திமுகவுக்கு கூடுதல் அமைச்சர் பதவிகள் வேண்டும் என்று காங்கிரஸ் தலைமையிடம் கலைஞர் பேரம் நடத்தியதை மன்னிக்க தமிழக மக்கள் ஒருபோதும் தயாராக இல்லை.
 

இலங்கையில் ஒன்றரை லட்சம் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டதன் துயரம் கூட மறையாத நிலையில், திமுகவின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கனிமொழியும், டி.ஆர். பாலுவும் இராஜபக்சேவின் விருந்தினர்களாக அவரது மாளிகைக்கு சென்று விருந்து உண்டதுடன், கொலைகாரனின் கைகளில் இருந்து பரிசுப்பெட்டிகளையும் வாங்கி வந்தார்களே.... அதை தமிழர்கள் மன்னிப்பார்களா?
 

இலங்கை அரசால் பல ஆண்டுகள் சிறைக் கொடுமைகளுக்கு ஆளாக்கப்பட்டு, அதனால் பக்கவாதம்  உள்ளிட்ட உடல்நல பாதிப்புகளுக்கும், மன அழுத்தத்துக்கும் ஆளாக விடுதலைப்புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனின் தாயார் பார்வதி அம்மாள் சிகிச்சைக்காக 2010&ஆம் ஆண்டு ஏப்ரல் 16&ஆம்  தேதி இரவு சென்னைக்கு வந்த போது, 80 வயது மூதாட்டி என்றும் பாராமல் விமானத்தை விட்டு, இறங்குவதற்கு கூட அனுமதிக்காமல் திருப்பி அனுப்பி, அவரது மறைவுக்கு வழிவகுத்தது கலைஞர் தலைமையிலான திமுக அரசு தானே? இதைவிட மாபாதகச் செயல் வேறு ஏதேனும் இருக்க முடியுமா?
 

ஈழத்தமிழர் விவகாரத்தில் ஏற்பட்ட அவப்பெயரை துடைக்கும் நோக்கத்துடன் 2012&ஆம் ஆண்டில் டெசோ அமைப்பை மீண்டும் ஏற்படுத்தினார் அப்போதைய திமுக தலைவர் கலைஞர். அந்த அமைப்பின் சார்பில் 2012 ஆகஸ்ட் 12-ஆம் தேதி சென்னை இராயப்பேட்டையில் தமிழீழ ஆதரவு மாநாடு நடத்தப் படும் என்று ஜூலை மாதத்தில் திமுக அறிவித்தது. அடுத்த சில நாட்களில், அதாவது ஜூலை 15-ஆம் தேதி திமுக தலைவர் கலைஞரை, அப்போதைய மத்திய உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம் சந்தித்து பேசினார். அதுவரை தமிழீழ கோரிக்கையை வலியுறுத்துவதற்காகத் தான் தமிழீழ ஆதரவு மாநாடு நடத்தப் போவதாக கூறி வந்த கலைஞர், இந்த சந்திப்புக்குப் பிறகு மாநாட்டின் தலைப்பில் கூட தமிழீழம் இருக்கக்கூடாது என்று கருதி மாநாட்டின் பெயரையே ஈழத்தமிழர் வாழ்வுரிமை மாநாடு என்று மாற்றினார். அதுமட்டுமின்றி மாநாட்டில் தமிழீழம் என்ற வார்த்தையே உச்சரிக்கப்படவில்லை; தமிழீழத்தை வலியுறுத்தி தீர்மானமும் நிறைவேற்றப்படவில்லை. இதை விட மோசமானதொரு கொத்தடிமைத்தனம் இருக்க முடியுமா? இதைவிட பெரிய துரோகத்தை ஈழத்தமிழருக்கு செய்ய முடியுமா?

 

mk stalin


 

அவ்வளவு ஏன்? விடுதலைப் புலிகள் இயக்கமே இல்லாமல் போய்விட்ட நிலையில், அந்த இயக்கத்தால் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் உயிருக்கு ஆபத்து இருப்பதாக கடந்த சில வாரங்களுக்கு முன் நாடாளுமன்ற மக்களவையில் திமுகவின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் டி.ஆர். பாலு பேசினாரே? ஈழத்தமிழர் விடுதலைக்காக போராடிய அமைப்பை இதைவிட மோசமாக கொச்சைப்படுத்த முடியுமா?
 

1992-ஆம் ஆண்டில் தமிழகத்தில் வாழும் ஈழத்தமிழர்களை கட்டாயப்படுத்தி இலங்கைக்கு அனுப்ப  முயற்சிகள் நடந்ததன. அதை திமுகவும், அதன் தலைமையும் வேடிக்கை தான் பார்த்துக் கொண்டிருந்தன. மத்திய, மாநில அரசுகளின் இந்த நடவடிக்கைக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்து ஈழத்தமிழர்கள் இலங்கைக்கு திருப்பி அனுப்பப்படுவதை தடுத்து நிறுத்தியது நானும், தமிழ் தேசிய இயக்கத்தின் தலைவர் பழ.நெடுமாறன் அவர்களும் தான். அதே ஆண்டில் தமிழர் வாழ்வுரிமை மாநாடு நடத்தி ஈழத்தமிழர் நலனுக்காக குரல் கொடுத்ததும் பாட்டாளி மக்கள் கட்சி தான்.


 

 

திமுகவைப் பொருத்தவரை ஈழத்தமிழர் நலனுக்காக எதையும் செய்ததும் இல்லை.... செய்யப் போவதும் இல்லை. உள்ளாட்சித் தேர்தலை சந்திக்க அஞ்சி, தடை விதிக்கக் கோரி உச்சநீதிமன்றத்திற்கு கஜினி முகமதுவைப் போன்று படையெடுத்த திமுக, இப்போது ஒரு சில இடங்களிலாவது வெல்ல வேண்டும் என்பதற்காக இப்போது ஈழத்தமிழர்கள் மீது அக்கறை கொண்டவர்களைப் போல நடிக்கிறார்கள். திமுகவின் இந்த புதிய நாடகம் தமிழக மக்களிடம் எடுபடாது; தமிழக மக்கள் ஏமாற மாட்டார்கள்.
 

ஈழத்தமிழர் நலன்களுக்காக கடந்த 36 ஆண்டுகளாக மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சியிலிருந்த  போதெல்லாம் துரும்பைக் கூட அசைக்காதது தான் திமுக. பல நேரங்களில் தமிழீழம் என்ற வார்த்தையை உச்சரிக்கக்கூட அஞ்சிய இயக்கம் தான் அது. இப்படியாக ஈழத்தமிழர் நலனில் ராஜபக்சேக்களாகவும்,  ஜெயவர்தனேவாகவும் இருந்த இப்போது பிரபாரகரன் வேடம் போட்டு மக்களை ஏமாற்றத் துடிக்கிறது. ஈழத்தமிழர்களுக்கு திமுக இழைத்த துரோகங்கள் குறித்து பொது இடத்தில் விவாதம் நடத்துவதற்கு நான் தயார்.... மு.க.ஸ்டாலின் தயாரா? இவ்வாறு கூறப்பட்டுள்ளது. 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“வள்ளலார் பன்னாட்டு மையம்; தீர்ப்பு வரும் வரை பணியை நிறுத்த வேண்டும்” - அன்புமணி

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
TN govt should suspend the construction of  Vallalar International Center till verdict in case

வழக்கில்  தீர்ப்பு வரும் வரை  வள்ளலார் பன்னாட்டு மைய கட்டுமானப் பணிகளை தமிழக அரசு நிறுத்தி வைக்க வேண்டும் எனப் பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “வடலூர்  சத்தியஞான சபை வளாகத்தில்  வள்ளலார் பன்னாட்டு மையம் அமைப்பதற்கான கட்டுமானப் பணிகள் நடைபெற்று வரும்  பெருவெளி பகுதியில் தொல்லியல் முக்கியத்துவம் வாய்ந்த கட்டுமானங்கள் ஏதேனும் உள்ளனவா?  என்பதைக் கண்டறிய  தொல்லியல் துறையின் 3 வல்லுனர்கள் அடங்கிய குழுவை அமைத்து ஆய்வு செய்ய வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு ஆணையிட்டுள்ளது.  பெருவெளிப் பகுதியின் புனிதமும்,  தொல்லியல் முக்கியத்துவமும் எந்த வகையிலும் சிதைந்து விடக் கூடாது என்ற உன்னத எண்ணத்தில் உயர்நீதிமன்றம் பிறப்பித்துள்ள இந்த ஆணை வரவேற்கத்தக்கது.

வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடிய வள்ளலாரின் பெருமை உலகம் முழுவதும் கொண்டு சென்று சேர்க்கப்பட வேண்டும். அதற்காக  அவருக்கு பன்னாட்டு மையம்  அமைக்கப்பட வேண்டும் என்பதில் யாருக்கும் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை. அதிலும் குறிப்பாக ஜோதி தரிசனம்  காண்பதற்காக மட்டும் தான் பெருவெளி பயன்படுத்தப்பட வேண்டும்; அதில் எந்த மாற்றமும் செய்யக்கூடாது என்பதில் வள்ளலாரே உறுதியாக இருந்தார்.  வள்ளலாரின் விருப்பத்திற்கு மாறாக பெருவெளியில்  வள்ளலார் பன்னாட்டு மையம் அமைப்பதை மட்டுமே பாட்டாளி மக்கள் கட்சியும் எதிர்க்கிறது. வள்ளலார் பக்தர்களும் எதிர்க்கிறார்கள். இந்த உண்மையை தமிழக அரசு புரிந்து கொள்ள வேண்டும்.

வள்ளலார் பன்னாட்டு மையத்தை வடலூரில் வேறு இடத்திலோ, அருகில் உள்ள  வள்ளலாருடன் தொடர்புடைய இடங்களிலோ அமைப்பதால் எந்தப் பாதிப்பும் ஏற்படப் போவதில்லை.  மாறாக, அனைவரும் அதை வரவேற்கத்தான் செய்வார்கள். எனவே, இந்த விஷயத்தில் தமிழக அரசு பிடிவாதம் பிடிக்காமல் வள்ளலார் பக்தர்களின் உணர்வுகளைப் புரிந்து நடந்து கொள்ள வேண்டும்.

வடலூர் சத்தியஞான சபை வளாகத்தில் தொல்லியல் துறை ஆய்வு நடத்தப்பட வேண்டும் என்று  சென்னை உயர்நீதிமன்றம் ஆணையிட்ட பிறகும் கூட  வடலூரில் கட்டுமானப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவது கண்டிக்கத்தக்கது.  பெருவெளியில்  வள்ளலார் பன்னாட்டு மையத்தை அமைக்க தடை விதிக்க வேண்டுமெனக் கோரி, சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் இறுதித் தீர்ப்பு வரும் வரை வள்ளலார் பன்னாட்டு மைய கட்டுமானப் பணிகளை தமிழக அரசு நிறுத்தி வைக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Next Story

'வெறுப்பும் பாகுபாடும் தான் மோடியின் உத்தரவாதம்'-முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம்

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
'Hatred and discrimination is Modi's guarantee'- CM Stalin condemns


18ஆவது நாடாளுமன்றத் தேர்தல், நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. 7 கட்டங்களாக இந்தத் தேர்தல் நடைபெறும் நிலையில் முதற்கட்ட வாக்குப்பதிவு, கடந்த 19ஆம் தேதி நடைபெற்று முடிந்துள்ளது. இதில் தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்கள் அடங்கும். இதையடுத்து மற்ற மாநிலங்களில் அடுத்தடுத்து வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. ஜூன் 1ஆம் தேதி கடைசி நாள் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. ஜூன் 4ஆம் தேதி தேர்தலின் முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.

இதனால் இரண்டாம் கட்ட தேர்தலுக்கான பிரச்சாரம் வட இந்திய மாநிலங்களில் களைகட்டி வருகிறது. அரசியல் தலைவர்கள் தங்களின் பிரச்சாரத்தைத் தீவிரமாக செய்து வருகின்றனர். அந்த வகையில் ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாராவில் பிரதமர் மோடி நேற்று தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது, “காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் தாய்மார்கள் மற்றும் மகள்கள் வைத்திருக்கும் தங்கம் கணக்கீடு செய்யப்பட்டு பங்கீடு செய்யப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது. முன்பு காங்கிரஸ் ஆட்சி காலத்தின் போது நாட்டின் உடைமைகளில் இஸ்லாமியர்களுக்கு முன்னுரிமை இருக்கிறது என்று கூறினார்கள். அப்படியென்றால் யாருக்கு உங்கள் வளங்கள் போகப்போகிறது?. நாட்டில் ஊடுருவி வருபவர்களுக்கும், அதிக குழந்தைகளைப் பெற்றெடுப்பவர்களுக்கும், மக்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த செல்வத்தை காங்கிரஸ் கட்சி பங்கிட்டுக் கொடுத்துவிடும்.

அதாவது, காங்கிரஸ் கட்சியினர் இந்தியாவுக்குள் ஊடுருவிய, அதிக குழந்தைகள் பெற்றுக் கொண்டவர்களுக்கு சொத்துகளை வழங்குவோம் என்கிறார்கள். நீங்கள் கடினமாக உழைத்து சேர்த்த சொத்தை அவர்களுக்குக் கொடுக்க ஒப்புக்கொள்ளப் போகிறீர்களா?” எனப் பேசினார். பிரதமரின் இந்தப் பேச்சு பெரும் சர்ச்சையானது.

பிரதமர் மோடியின் இத்தகைய வெறுப்பு பேச்சுக்கு தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் அபிஷேக் மனு சிங்வி, சல்மான் குர்ஷித், குர்தீப் சத்பால் ஆகியோர் தேர்தல் ஆணையத்திற்கு நேரில் சென்று புகார் மனு அளித்துள்ளனர். சமூகங்களுக்கு இடையே வெறுப்பை பரப்பும் வகையில் பேசிவரும் பிரதமர் மோடி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

'Hatred and discrimination is Modi's guarantee'- CM Stalin condemns

இந்நிலையில் பிரதமர் மோடியின் பேச்சுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். 'பிரதமர் மோடியின் நச்சு பேச்சு கேவலமானது, மிகவும் வருந்தத்தக்கது. மக்களின் கோபத்திற்கு அஞ்சி மத உணர்வுகளைத் தூண்டி வெறுப்பு பேச்சை நாடி உள்ளார் பிரதமர் மோடி. பிரதமரின் அப்பட்டமான வெறுப்பு பேச்சுக்கு தேர்தல் ஆணையம் நடுநிலைமையைக் கைவிட்டு விட்டது. வெறுப்பும் பாகுபாடும் தான் மோடியின் உண்மையான உத்தரவாதம்' என  தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.