haryana BJP Chief Minister resigns for Defection of coalition parties

நாடாளுமன்ற மக்களவைப் பொதுத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு அரசியல் கட்சிகள் சார்பில் தேர்தல் பணிகளை மேற்கொள்வதற்காக பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டு தீவிர ஆலோசனைகள் நடத்தப்பட்டு வருகின்றன. மேலும், நாடாளுமன்றத் தேர்தலுக்கான பணிகளை அரசியல் கட்சிகள் கடந்த ஒரு மாத காலமாகத் தீவிரப்படுத்தி வருகின்றன. இத்தகைய சூழலில் இந்தியத் தேர்தல் ஆணையமும் மக்களவைத் தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து தொடர்ந்து ஆய்வுகளை நடத்தி வருகிறது. விரைவில் தேர்தல் அறிவிக்கப்படலாம் எனவும் கூறப்படுகிறது. கூட்டணிக் கட்சிகளிடையே தொகுதிப் பங்கீடுகள் பற்றிய பேச்சுவார்த்தையும் நடைபெற்று வருகிறது. ஒரு சில கட்சிகளில் வேட்பாளர்களும் அறிவிக்கப்பட்டு வருகின்றனர்.

Advertisment

அந்த வகையில், 543 மக்களவைத் தொகுதிகளுக்கான வேட்பாளர்களில் முதற்கட்டமாக 195 வேட்பாளர்களின் பெயர்களை பா.ஜ.க. வெளியிட்டிருந்தது. அதேபோன்று காங்கிரஸ் கட்சியின் சார்பில் 39 தொகுதிகளுக்கான முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டிருந்தது. ஏற்கெனவே, ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்தபா.ஜ.க எம்.பி, தனது எம்.பி பதவியைராஜினாமா செய்து காங்கிரஸ் கட்சியில் இணைந்து பரபரப்பை ஏற்படுத்தினார்.

Advertisment

இந்த நிலையில், ஹரியானா மாநிலத்தில் பா.ஜ.க கூட்டணியில் இருந்து ஜனநாயக் ஜனதா கட்சி விலகியதால், ஹரியானா முதல்வர் மனோகர் லால் கட்டார் ராஜினாமா செய்துள்ளார். மொத்தம் 90 சட்டமன்ற இடங்களை கொண்ட ஹரியானா மாநிலத்தில் கடந்த 2019ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது. இந்த மாநிலத்தில் ஆட்சி அமைக்க 46 இடங்கள் தேவை என்ற பட்சத்தில் பா.ஜ.க வெறும் 40 இடங்களை மட்டுமே கைப்பற்றியிருந்தது. அதனால், 10 எம்.எல்.ஏ.க்களைக் கொண்ட ஜனநாயக் ஜனதா கட்சியுன் கூட்டணியை உருவாக்கி பா.ஜ.க ஹரியானாவில் ஆட்சி அமைத்தது.

அதில், பா.ஜ.கவின் மனோகர் லால் கட்டார் முதல்வராகவும், ஜனநாயக் ஜனதா கட்சியின் தலைவரான துஷ்யந்த் சவுதாலா துணை முதல்வராகவும் நியமிக்கப்பட்டனர். இந்த நிலையில், வரவுள்ள மக்களவைத் தேர்தல் தொகுதி பங்கீடு தொடர்பாக பா.ஜ.க தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவுடன் நேற்று (11-03-24) ஜனநாயக் ஜனதா கட்சி சார்பில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இதில் இரு கட்சிகளுக்கும் இடையே உடன்பாடு ஏற்படவில்லை என்று கூறப்படுகிறது. அதனால், மக்களவை தேர்தல் வருவதற்கு முன்பாகவே ஜனநாயக் ஜனதா கட்சி, பா.ஜ.க கூட்டணியில் இருந்து அதிரடியாக விலகியுள்ளது.

Advertisment

இதன் காரணமாக, ஹரியானா முதல்வர் மனோகர் லால் கட்டார், தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். முதல்வர் மட்டுமின்றி பா.ஜ.க.வை சேர்ந்த அனைத்து அமைச்சர்களும் கூண்டோடு பதவி விலகினர்.பா.ஜ.க, ஜனநாயக் ஜனதா கட்சி கூட்டணி ஆட்சி கவிழ்ந்தாலும், புதிய கூட்டணியுடன் மீண்டும் பா.ஜ.க ஆட்சி அமைக்க இருப்பதாக கூறப்படுகிறது. நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பு, ஹரியானா மாநிலத்தில் பா.ஜ.க கூட்டணி ஆட்சி கவிழ்ந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது