Advertisment

’’நீட் தேர்வில் நடந்துள்ள மாபெரும் ஊழல்!’’ - வேல்முருகன் பகிரங்க குற்றச்சாட்டு

salem

ராஜஸ்தானில் செயல்படும் தனியார் கோச்சிங் செண்டர்களும், சிபிஎஸ்இ நிர்வாகமும் சேர்ந்து கொண்டு நீட் தேர்வில் மாபெரும் முறைகேட்டில் ஈடுபட்டுள்ளதாக தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் பகீர் புகார் கூறியுள்ளார்.

Advertisment

தமிழக வாழ்வுரிமைக் கட்சி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் சேலத்தில் இன்று (மே 6, 2018) நடந்தது. முன்னதாக, அக்கட்சியின் தலைவர் வேல்முருகன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியது:

Advertisment

மனித உரிமை மீறல்:

நீட் தேர்வில் இருந்து முழுமையாக விலக்கு அளிக்க வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சி போராடி வருகிறது. தேர்வு எழுதும் மாணவிகளின் பொட்டை அழித்து, வளையல்களை உடைத்து, பூவை பறிக்கும் கொடூர செயல்களில் சிபிஎஸ்இ நிர்வாகமும், மத்திய அரசும் ஈடுபட்டு வருகிறது. சில இடங்களில் மாணவிகளின் உள்ளாடைகளைக்கூட கழற்றி சோதனையிட்டுள்ளனர். இது அப்பட்டமான மனித உரிமை மீறலாகும்.

இதுகுறித்து தேசிய மனித உரிமை ஆணையமும், உயர்நீதிமன்றமும் தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்து விசாரிக்க வேண்டும். மாணவிகளிடம் அத்துமீறி நடந்து கொண்ட சிபிஎஸ்இ அதிகாரிகளை தமிழக அரசு உடனடியாக கைது செய்ய வேண்டும்.

கடந்த ஆண்டு மாணவி அனிதா தற்கொலை செய்து கொண்டார். இந்த ஆண்டு வெளிமாநிலத்திற்குத் தேர்வு எழுதச் சென்ற மாணவரின் தந்தை மாரடைப்பில் இறந்துள்ளார். இப்படி தொடர்ந்து உயிர்பலி கேட்கும் நீட் தேர்வு தேவையில்லை. நீட் தேர்வு மூலம் தமிழக மாணவர்களை குட்டிச்சுவராக்கி இருக்கிறது மத்திய அரசு.

இங்குள்ள மருத்துவ இடங்களில் தமிழர் அல்லாதோர்தான் அதிகளவில் படிக்கின்றனர். ஏற்கனவே மீத்தேன், ஹைட்ரோ கார்பன் என தமிழக நலன்களையும், உரிமைகளையும் இழந்து விட்டோம். நீட் பிரச்னையில் இருந்து விடுபட மத்திய பட்டியலில் உள்ள கல்வியை, விரைவில் மாநில பட்டியலுக்குள் கொண்டு வர வேண்டும். இங்குள்ள அடிமை எடப்பாடி அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காது. ராணுவ பாதுகாப்பு, பணத்தாள் அச்சடிப்பு மட்டும்தான் மத்திய அரசிடம் இருக்கும். மற்ற உரிமைகள் அனைத்தும் மாநில அரசிடம்தான் இருக்கும். அதை முன்னெடுத்து மாபெரும் போராட்டத்தை நடத்தப் போகிறோம்.

மாபெரும் முறைகேடு:

ராஜஸ்தான் மாநிலத்தில் கோட்டா என்ற ஒரே இடத்தில் மட்டும் பத்து தேர்வு மையங்கள் ஒதுக்கப்பட்டு உள்ளன. இந்த தேர்வு மையங்களில் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு கூடுதல் மதிப்பெண்கள் போடப்படுவதாகவும், அதற்காக சிபிஎஸ்இ நிர்வாகத்துடன் மறைமுகமாக சில 'அண்டர்ஸ்டேண்டிங்' நடந்து உள்ளது.

இதன் பின்னணியில், தனியார் கோச்சிங் நிறுவனங்கள், சிபிஎஸ்இ அதிகாரிகளுடன் லட்சக்கணக்கான ரூபாய் கையூட்டு பேசப்பட்டு உள்ளதாக எனக்கு தகவல்கள் கிடைத்துள்ளன. நீட் தேர்வில் மாபெரும் ஊழல் நடந்துள்ளதாக நான் பகிரங்கமாக குற்றம் சாட்டுகிறேன். இந்த முறைகேடு குறித்து சிபிஐயும், தமிழக சிபிசிஐடி காவல்துறையினரும் முறையாக விசாரித்து உண்மைகளை வெளிக்கொணர வேண்டும்.’’

- எஸ். இளையராஜா

cbse neet public velmurugan examination
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe